ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை, என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதே இவ்வாறு கூறியதாக, தமிழக ஊடகமான மாலை மலர் செய்தி வௌியிட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணத்தில் இராணுவம் தமிழர்களிடம் கையகப்படுத்தி வைத்திருந்த வளமான பூமி தற்போது வளமற்ற களர் நிலமாக திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
அதை மீண்டும் வளமான பூமியாக மாற்றி தரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி வழங்கவில்லை
மேலும் வட மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஹோட்டல்கள் மீண்டும் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
ஆனால் ருவான் விஜேவர்தனே கூறும் போது, அது குறித்து அரசு இன்னும் முடிவு எதுவும் மேற்கொள்ளவில்லை என முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் வட மாகாணத்தில் முகாமிட்டுள்ள இராணுவம் வெளியேற வேண்டும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இராணுவ வீரர்கள் வெளியேற்றப்படவில்லை.
அதை அரசு கண்டு கொள்ளவில்லை. மொத்தத்தில் ஜனாதிபதி சிறிசேன அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை, இவற்றை நடைமுறைப்படுத்த சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நெருக்கடி தர வேண்டும் என்றார்.