மிகத் திட்டமிட்ட முறையில் பொலிசாரின் துணையுடன் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு தாக்குதல் மேற்கொள்வதற்கு முதல்நாள் யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் என்ற போர்வையில்  பல ரவுடிகள்  பலர் தெருவில் களமிறங்கி போவோர் வருவோரை கடுமையாக அச்சுறுத்தியும் கடைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுமிருந்தார்கள்.

இவற்றை எல்லாம் பொலிசார் கண்ணை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். பொலிசாருக்கு வேண்டப்பட்ட ரவுடிக் கும்பல்களே இந்த அநியாயத்தை தெருவில் செய்து கொண்டிருந்தன.

இது இவ்வாறு  இருக்க  நீதிமன்றம்  மீது கல்லெறித் தாக்குதல்  நடந்து கொண்டிருந்த போதும் பொலிசார் நீதிமன்றத்திற்குள் ஓடி ஒளித்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் நின்றார்கள்.

இந்த வேளையில் நீதிமன்றம் கொடுத்த கடும் எச்சரிக்கையின் பின்னரே பொலிசார் கலகக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார்கள்.

உண்மையில் நீதிமன்றம் மீது தாக்குதல் நடாத்தியவர்களில் ஏராளமானவர்கள் தப்பி விட்டார்கள்.

தெருவால் சென்று கொண்டிருந்தவர்களையும்   வடிவேலு பாணியில் வேடிக்கை    பார்த்துக் கொண்டிருந்தவர்களையுமே பொலிசார் கடுமையாகத் தாக்கி கைது செய்திருந்தனர்.

அத்துடன் பொலிசாரிடம் அகப்பட்ட உண்மையான குற்றவாளிகளை சில பொலிசார் பிடித்த பின்னர் காப்பாற்றி அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசார் பிடித்தவர்களில் இந்திய சுற்றுலாப் பயணி, செத்தவீட்டுக்கு பாண்ட் வாத்தியங்கள் வாசிப்பவர்கள், கடைகளுக்குச் சென்றவர்கள், ஏன் பொலிஸ்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கு வழக்குக்காக வந்தவர்களும் அடங்குவர்.

xo_01

இங்கே ஒரு நகைச்சுவைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உண்மையில் இது வாசிப்பவர்களுக்கு நகைச்சுவையே தவிர பொலிசாரால் பாதிக்கப்பட்டவருக்கு மறக்க முடியாத ஒரு ஆத்திரமூட்டும் சோகச்சம்பவமாகும்.

தன்னிடம் காசு வாங்கிவிட்டு தர மறுத்தவருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு செய்ய வந்துள்ளார்.

இவர் முறைப்பாடு செய்ய வந்த அவர் வந்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் காற்றுப் போய் விட்டது.

உடனே அவர் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தி விட்டு அந்த இடத்தில் வைத்து காற்றுப் போன பின்சில்லைக் கழற்றிக் கொண்டு ஒட்டுவதற்காக ஆரியகுளம் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அந் நேரத்தில் ஹர்த்தால் காரணமாக ஒரு இடத்திலும் கடைகள் திறக்கவில்லை. இதனால் ரயரை தோளில் போட்டுக் கொண்டு அலைந்து திரிந்துள்ளார்.

இவர் அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம் நீதிமன்றத்தில் கலகமும் நடந்து கொண்டிருந்துள்ளது.

பொலிசுக்காரர்கள் வீராவேசத்துடன் அப்பாவிகளைத் துரத்தித் துரத்தி கைது செய்து கொண்டிருந்தார்கள். இந் நேரத்தில் இந்த அப்பாவி மோட்டார் சைக்கிள்காரரும் ரயரை தோளில் போட்டுக் கொண்டு பொலிஸ்நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு திரிந்த வீரம் மிக்க பொலிசுக்காரர்களும் அதிரடிப் படையினருக்கும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல அப்பாவி மோட்டார் சைக்கிள்காரரும் அகப்படவே ‘எங்களுக்கு முன்னாலேயே ரயர் போட்டு எரிக்கத் திரியிறியா‘ என கேட்டு கீழே விழுத்தி மிதித்துள்ளனர்.

இதனை யாழ் நகரப்பகுதியில் நின்ற கடைக்காரர்கள் உட்பட்ட ஏராளமானவர்கள் கண்டுள்ளனர். ‘சேர்.. சேர்… ‘ என்று கத்தக் கத்த கீழே விழுந்து கிடத்தவனை ஏறி மிதித்து தரதர என இழுத்துச் சென்றுள்ளனர் பொலிஸ் நிலையத்திற்கு.

இதன் பின்னர் குறித்த அப்பாவி பொலிஸ் நிலையத்தில் தனது நியாயத்தைச் சொல்லிக் கெஞ்சியும் எந்தவித பலனும் இல்லாது நீதிமன்றில் ஆயர்ப்படுத்தியுள்ளார்கள் பொலிசுக்காரர்கள்.

யாழ்பாணத்தில் குற்றவாளிகளை   எல்லாம் தமது வாதத் திறமை என்ற பெயரில் கள்ள வேலை பார்த்து வெளியே எடுக்கும் சட்டத்தரணிகள் ஏதோ பெரிய உத்தமர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு நீதி தேவதைகள் போல் தாங்கள் குறித்த 130 பேருக்கும் ஆதரவாக ஆயராக மாட்டோம் என்று வீராப்பு பேசுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் குற்றவாளிகளுக்காக வாதிடும் வக்கீல்மாரே!!

உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா?? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூ டாது என்பதே நீதி.

இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். யாழ்ப்பாணப் பொலிசாரின் இந்த திறமையான கைது நடவடிக்கையை நம்பி அப்பாவிகளைக் கைவிட்டுவிடாதீர்கள் நீதித்துறையைச் சார்ந்தவர்களே!!! இந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தாவது உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்………

Share.
Leave A Reply

Exit mobile version