வாடகை கட்டணம் செலுத்தாத பெண்ணை, அவர் காரில் வந்த தூரமான 48 கி.மீ. தொலைவை 48 மணி நேரத்தில் நடந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த நீதிபதி ஒருவர்.
அமெரிக்காவை சேர்ந்த நீதிபதி மைக்கேல் சிக்கோனெட்டி தன்னுடைய வினோதமான தீர்ப்புகளுக்காக புகழ் பெற்றவர்.
இவர் தற்போது ஓஹியோ லேக் கவுண்டியில் நீதிபதியாக உள்ளார். இவர் தற்போது அளித்துள்ள தீர்ப்பு அவரை மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடவைத்துள்ளது.
வாடகைக் காரில் வந்து விட்டு அதற்கு கட்டணம் செலுத்தாத விக்டோரியா என்ற பெண்ணை அவர் காரில் வந்த 48 கி.மீ. தூரத்தை 48 மணி நேரத்தில் நடந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த கார் நிறுவனத்திற்கு 100 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வழங்குவதற்கு முன் அந்த பெண்ணிடம், கார் இல்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண், நடந்து வந்திருப்பேன் என கூறியுள்ளார். எனவே அதையே தண்டனையாக வழங்கிவிட்டார்.
இதே நீதிபதிதான் கடந்த 2002-ம் ஆண்டு போலீஸ் அதிகாரியை பன்றி என்று திட்டியதற்காக, அந்த நபரை சாலையோரத்தில் ஒரு பன்றியை பிடித்துக்கொண்டு இது போலீஸ் அதிகாரி இல்லை என்ற வாசகத்தை தாங்கிய போர்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கும்படி செய்துவிட்டார்.