அறுப்பதற்காகவே வளர்க்கப்படும் மந்தைக் கூட்டம் போல மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்களை பௌத்த போினவாதம் கையாள்கின்றது. தவணை முறையில் பலி யெடுக்கப்படும் ஜீவன்களாகவும் இவர்கள் ஆகி யிருக்கின்றார்கள்.
பாம்புகளை அடித்தால் மட்டும் போதாது அதைப் புதைக்கவும் வேண்டும் என்று சொல்வார்கள். சில வகை நச்சுப் பாம்புகளை புதைப்பதை விட எரித்து சாம்பராக்கி விடுவதே பாதுகாப்பானது என்று விஷயமறிந்தவர்கள் கூறுவதுண்டு.
ஏனென்றால் பாம்புகள் காற்றுக்குடித்து மீள உயிர் பெற்று விடும் என்ற நம்பிக்கை கிராமத்து மக்களிடையே இருக்கின்றது.
இனவாதமும் விஷம் நிறைந்த பாம்பு போலத்தான். எத்தனை முறை அடித்துப் போட்டாலும் மீள மீள உயிர்ப்படைந்து எழுந்து விடுகின்றது.
படமெடுத்து ஆடி சிறுபான்மை மக்களை பயங்காட்ட விளைகின்றன. சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இதுதான் இப்போது நடைமுறை யதார்த்தமாக இருப்பதை காண்கின்றோம்.
மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடுத்த கட்ட இனச் சம்ஹாரத்தை பௌத்த பிக்குகள் தலைமையிலான இனவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற சமகாலத்தில் இலங்கையிலும் சிறுபான்மை மக்கள் மீது இன்னுமொரு பாய்ச்சலை மேற்கொள்வதற்கு கடும்போக்கு சக்திகள் தயாராகி வருகின்றன.
பர்மா என அக்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய மியன்மார் நாட்டில் 15ஆம் நூற்றாண்டில் இருந்தே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் மீதான இனவெறியை பௌத்த இனவாதம் அப்போதே ஆரம்பித்துவிட்டது என்று கூற வேண்டும்.
1550ஆம் ஆண்டில் ஹலால் முறைப்படி மிருகங்களை அறுப்பதற்கு தடைவிதித்ததில் இருந்து இந்த இனரீதியான நெருக்குவாரங்களை மியன்மார் அரசாங்கம் ஆரம்பித்து விட்டது.
பின்னர் காலத்துக்குகாலம் ஆட்சி செய்த மன்னர்களினதும் அரச தலைவர்களின் ஒத்துழைப்புடனும் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டன.
1871ஆம் ஆண்டிலும் 1911இலும் பின்னர் 1990, 1996 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் பௌத்த பேரினவாதம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பினால் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றார்கள், அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றார்கள், உயிர்தப்பி ஓடிய போது கடலில் விழுந்து மரித்திருக்கின்றார்கள், உண்ண உணவின்றி பலியாகியிருக்கின்றார்கள்.
மியன்மாரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் பல மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களுள் ஒரு பிரிவினரே ரோஹிங்கியா இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள்.
கிட்டத்தட்ட 8 இலட்சம் சனத்தொகையை கொண்ட இவர்கள் மீதே இனவாதிகள் அதிக வன்கொடுமைகளை புரிந்து வருகின்றனர்.
சுருக்கமாக சொல்லப்போனால், அறுப்பதற்காகவே வளர்க்கப்படும் மந்தைக் கூட்டம் போல மியன்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம்களை பௌத்த பேரினவாதம் கையாள்கின்றது.
வாக்குரிமை உள்ளடங்கலாக பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு விளிம்புநிலை சமூகமாக இருப்பது ஒருபுறமிருக்க தவணை முறையில் பலியெடுக்கப்படும் ஜீவன்களாகவும் இவர்கள் ஆகியிருக்கின்றார்கள்.
அந்நாட்டில் நடைபெற்று வருகின்ற இனஅழிப்பு என்பது தற்செயலாக இடம்பெறுவதோ அல்லது ஒரு சிறிய காரணத்திலிருந்து தோற்றம்பெற்ற வன்முறையோ அல்ல.
மாறாக, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பரம்பரை குடிகளான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பன்னெடுங்காலமாக இனவாதிகளின் மனதில் இருந்துவரும் இனவெறியே இங்கு திட்டமிட்ட முறையில் இனக்கலவரம் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
இப்படி வரலாற்றில் பல தடவை நடந்திருக்கின்றது. இது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒரு நிகழ்வல்ல.
மாறாக, மியன்மார் அரசாங்கத்தினதும் அரச படைகளதும் ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக மியன்மாரில் குறிப்பிட்ட இனக்குழுமத்தின் மீது மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகள் எழுதி மாளாது.
எத்தனை ஆயிரம் போ் பலியெடுக்கப்பட்டிருக்கின்றார்கள், காயப்பட்டிருக்கின்றார்கள், இடம்பெயர்ந்திருக்கின்றார்கள் என்பதை கணக்கிட்டு கூறி முடிப்பதற்குள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உலக வரலாற்றில் முதலாம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஹிட்லரின் ராஜாங்கத்திற்கு பிற்பாடு இவ்வாறான ஒரு இனப் படுகொலையை ஒரு இனம் இன்னுமொரு இனத்தின் மீது நிகழ்த்தியிருக்குமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.
உலகில் கோலோச்சிய ஆயுதக்குழுக்களும் பயங்கரவாத இயக்கங்களும் சில வேளைகளில் அரச படைகளும் கூட மக்களை கொத்துக் கொத்தாக பலியெடுத்திருக்கின்றன.
ஆனால் ஒரு பெரும்பான்மை சமூகம் தமது சகோதர சிறுபான்மை சமூகத்தின் மக்களை இவ்வளவு அகோரமாக வஞ்சம் தீர்த்திருக்க முடியாது.
அந்தளவுக்கு மிக பரிதாபமாக மியன்மார் முஸ்லிம்கள் ஒவ்வொரு வினாடியும் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எந்தக் காட்சியையும் புகைப்படத்தையும் பார்க்க முடியாமல் கண்களை திருப்பிக் கொள்ள வேண்டியுள்ளது.
கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல வாழ்ந்து வரும் அப்பாவி ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன்று துரத்தி துரத்தி வெட்டப்படுகின்றனர், பலியாடுகள் போல கழுத்தறுக்கப்படுகின்றனர், உயிருடன் கொளுத்தப்படுகின்றன, உடற் பாகங்கள் கூறாக்கப்பட்டு தீயிலிட்டு பொசுக்கப்படுகின்றன இன்னும் எழுத்தில் எழுதவொண்ணா பல்வேறு துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதாவது அவர்களது சாம்பர் கூட மிஞ்சிவிடக் கூடாது என்ற வஞ்சத்தோடு சில பௌத்த பிக்குகளும் இனவாத காடையர்களும் செயற்பட்டு வருகின்றனர்.
மியன்மாரின் இனவாத செயற்பாடுகளுக்கு பெயர் போன அசின் விராது தேரர் போன்ற பலர் இதன் பின்னால் இருந்து செயற்படுவதாக சில ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.
இவ்வாறு இரு இனக் குழுமமே தடயம் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மனித நேயமுள்ள மக்கள் கண்டு திகைத்து நிற்கின்றனர்.
இதைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமும் சர்வ பலமும் தம்மிடம் இல்லையே என்ற எண்ண கழிவிரக்கம் ஒவ்வொரு சிறுபான்மை இனத்தவனையும் பிடுங்கித் தின்கின்றது.
ஆனால் உலகின் பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வந்து மனிதர்களை வேட்டையாடி சாப்பிடுவதை சித்திரிக்கும் ஒரு ஹொலிவுட் திரைப்படம் போல சிலருக்கு இது சுவாரஷியம் நிறைந்ததாக இருக்கின்றது.
விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில சர்வதேச அமைப்புக்களே இது விடயத்தில் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
சின்னச் சின்ன விடயங்களுக்காக எல்லாம் பக்கம்பக்கமாக அறிக்கை விடுகின்ற பல சர்வதேச அமைப்புக்கள் இன்று தமது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டுள்ளன.
குறிப்பாக மியன்மாரை சேர்ந்த நோபல் பரிசுபெற்ற ஆளுமையான ஆங்சான் சூகியே இன்னும் தமது சொந்த நாட்டில் நடக்கும் அநியாயத்திற்கு எதிராக குரல் எழுப்பவில்லை.
இதுவே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டதொரு நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு இந்நிலைமை நேர்ந்திருந்தால் சர்வதேச சமூகம் மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை அந் நாட்டின் அரசாங்கம் மீது மனித உரிமை பேணுமாறு அழுத்தம் கொடுத்திருக்கும்.
ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை பிரகடனப்படுத்தியிருக்கும். தக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, நீதியை நிலைநாட்டல் என்ற பெயரில் அந்த நாட்டில் படைகளை குவித்திருக்கும்.
ஆனால் மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இந்த நொடி வரைக்கும் இது எதுவும் நடக்கவில்லை.
பலஸ்தீனத்தைப் போல, ஈராக், சிரியா, ஏமன் நாடுகளில் நடப்பதைப் போல இன முறுகல்களின் தோரணையிலும் நீதியை நிலைநாட்டுதல் என்ற சாக்கிலும் எப்படியாவது முஸ்லிம்கள் கொல்லப்படட்டும் என்ற நினைப்பில் பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் இருக்கின்றனவா என்பதுதான் புரியுதில்லை.
உலகெங்கும் உள்ள சனத்தொகையில் 23 சதவீதமான மக்கள் அதாவது 1.6 பில்லியன் பேர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றவர்களாவர்.
இதன்படி உலகின் 2ஆவது மிகப் பெரிய சமய குழுமமாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர். இவ்வாறானதொரு பக்கபலத்தை கொண்டிருந்த போதிலும், உலக முஸ்லிம் நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடக்கின்ற போது வழக்கமாக கடைப்பிடித்த மெத்தனப் போக்கையே மியன்மார் விடயத்திலும் கடைப்பிடிப்பதாக தெரிகின்றது.
இல்லாவிட்டால், உலகில் ஒரு சில நாடுகளில் மட்டும் பெரும்பான்மையாக வாழும் சிங்கள பௌத்த இனவாதிகளின் கொட்டத்தை அடக்குவது சின்ன வேலையாக இருந்திருக்கும்.
உசுப்பேறிய இனவாதம்
இது இவ்வாறிருக்க, மியன்மாரில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு நடவடிக்கை இலங்கையிலுள்ள இனவாதிகளை உசுப்பேற்றியுள்ளது போல் தெரிகின்றது. மியன்மாரில் முஸ்லிம்களிற்கு ஏற்பட்டுள்ள நிலைமையை பார்த்து நம்நாட்டிலுள்ள முஸ்லிம்களும் இனம்புரியாத குழப்பகரமான மனநிலைக்கு ஆட்பட்டிருக்கின்றனர்.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நாட்டில் அடுத்த கட்ட இனவாத நகர்வை மேற்கொள்வதற்கு பொது பலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்கள் திட்டமிட்டிருப்பதாக ஊகிக்க முடிகின்றது.
வில்பத்து விவகாரத்தை ஊதிப் பெருப்பித்தமை, கொழும்பில் அடுத்தடுத்து நடத்துகின்ற ஊடக சந்திப்புக்கள், மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாத அறிக்கைகள் என்பன இந்த போக்கை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
நாடு திரும்பிய அவரை கைது செய்த செய்தி கிடைப்பதற்கிடையில் பிணையில் விடுதலையான செய்தி வந்து சோ்ந்தது.
பின்னர் கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில் பலசேனாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் அறிவித்திருக்கின்றார். இதில் முக்கியமானது, ஜாதிக பெரமுண என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் அவர்களது திட்டமாகும்.
மஹிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் பொதுபலசேனாவும் அதனது கூட்டாளிகளும் நினைத்ததை இந்நேரம் ஓரளவுக்கு சாதித்திருப்பார்கள்.
ஆயினும் மைத்திரிபாலவின் நல்லாட்சி உருவாகியுள்ளமையாலும் இனவாதமே ஆட்சிமாற்றத்திற்கான அடிப்படை காரணம் என்பதாலும் இனிவரும் காலங்களில் வெறும் அமைப்பாக செயற்படுவதால் மட்டும் காரியத்தை சாதிக்க இயலாது என்ற முடிவுக்கு பலசேனா வந்திருப்பதாக கருத இடமுள்ளது.
ஒரு பௌத்த அமைப்பாக அன்றி, அரசியல் கட்சியாக இருந்தாலேயே தமது செயற்பாட்டுத்தளத்தை விஸ்தரித்துக் கொள்ளலாம் என்று இனவாதிகள் அனுமானித்திருக்கின்றனர்.
இனரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் தத்தமக்கென கட்சிகளை கொண்டிருக்கின்ற போது சிங்களவர்களுக்கு என ஒரு கட்சியை ஆரம்பிப்பதும் இனவாதத்தின் துணை கொண்டு அதை நடாத்திச் செல்வதும் அசாத்தியமானதாக இருக்கும் என்று கணிப்பிட முடியாது.
எனவே இது விடயத்தில் அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்களவர்களுக்கு என்று ஒரு கட்சி ஆரம்பிப்பது வேறு அதனை இனவாதிகள் ஆரம்பிப்பது என்பது வேறு என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இது தவிர மேலும் பல நிகழ்ச்சித்திட்டங்களை தேரர் பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக, இலங்கையில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்றெடுக்க கூடாது, இன ரீதியாக பிரதேசங்கள் உருவாக கூடாது, எல்லா இனங்களுக்கும் பொதுவான விவாக சட்டமே அமுலில் இருக்க வேண்டும், மத அமைப்புகளை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என அப்பட்டியல் நீண்டு செல்கின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் எந்த சமூகத்தை இலக்கு வைத்ததாக அமைந்திருக்கின்றது என்பதை விலாவாரியாக சொல்ல வேண்டியதில்லை.
தம்மை ஊட்டி வளர்த்தவர்கள் யாரும் இப்போது அதிகாரத்தில் இல்லாத போதும் பொது பலசேனா போன்ற அமைப்புக்கள் இவ்வாறான கடும்போக்கு கருத்துக்களை கூறுவதற்கு காரணமாக பல விடயங்கள் இருக்கலாம் என்பதை உத்தேசிப்பது அவ்வளவு கடினமன்று.
அதாவது மஹிந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல மைத்திரி அரசின் ஆட்சிக்காலத்திலும் இனவாதம் இருக்கின்றது என்பதை காட்டுதல் நல்லாட்சியை குழப்பி மஹிந்தராஜபக்ஷவை அல்லது அவரது தரப்பை பலப்படுத்தல் மேலோட்டமாக சிந்திக்கும் சிங்கள மக்கள் வேறு எந்த முக்கிய பிரச்சினையையும் சிந்திக்காமல் பராக்கு காட்டி வைத்திருத்தல்
வௌிநாட்டில் இருந்து நிதியுதவிகள் கிடைத்துக் கொண்டிருப்பது உண்மை என்றால், அதனை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்காக, தாம் வேலை செய்தாக வௌியுலகுக்கு காட்டுதல் போன்றவையாகும்.
இனவாதிகயும் கடும்போக்காளர்களும் வகுத்துள்ள இவ் வியுகத்தின் கடைசி இலக்கு, இந்த நாட்டில் உள்ள முஸ்லி்ம்களை, மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்களை போல இனச்சுத்திகரிப்பு செய்தல். அல்லது அது சாத்தியப்படாத பட்சத்தில் இலங்கை தமிழர்களைப் போல அடக்கி ஒடுக்கி வைத்திருத்தலாகும்.
புத்தரின் போதனைகள் மறக்கடிக்கப்பட்டு நெடுங்காலமாயிற்று. மதிப்பிற்குரிய கௌதம புத்தரே வேதனைப்படும் நிலைமைதான் இன்று உருவாகியிருக்கின்றது. (அவர்கள் நம்புகின்ற) புத்தரின் சோதனைகள்தான் இக்கதைக்கு முடிவுரை எழுத நேரலாம்.