புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான அறிக்கையை (‘பீ’ ரிப்போர்ட்) மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி தொடர்பான வழக்கு இன்று, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுவிஸ் பிரஜை கைது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ‘பீ’ அறிக்கையானது பிழையானதாக உள்ளதென மாணவி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினர்.
அந்த அறிக்கையில், மாணவி சடலமாக மீட்கப்பட்ட திகதி பிழையானதாகவும் சந்தேகநபர் 16ஆம் திகதி பொதுமக்களால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும், அவர் தொடர்பான சான்றுகள் எதுவும் இல்லாமையால் அவர் விடுவிக்கப்பட்டு தொடர்ந்து வெள்ளவத்தையில் வைத்து பிடிக்கப்பட்டார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு முரண்பட்டுள்ள அறிக்கை, பலதரப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றது. சுவிஸ் பிரஜையை தப்பிக்க வைப்பதற்காக அதிகாரிகள் சிலர் முயற்சித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுகின்றது என வித்தியா சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கூறினர்.
இதனையடுத்து ‘பீ’ அறிக்கையை சரியான முறையில் தயாரித்து மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.