யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஒன்பது சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது நீதிமன்ற வளாகத்திற்குள் மாத்திரமல்லாது நீதிமன்ற சுற்றுவட்டாரத்திற்குள்ளும் எந்த ஒரு பொதுமக்களும் செல்ல முடியாதவாறு பொலிஸ், விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு கவச வாகனங்களுடன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அங்கு வித்தியாவின் சார்பில் அவரது தாயும், சகோதரனும் உள்ளதுடன், அவர்கள் சார்பில் வாதாடுவதற்காக சட்டத்தரணி கே.வி தவராசா மற்றும் அவருடன் சட்டத்தரணிகள் குழுவும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
இது மாத்திரமல்லாது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உட்பட அரசியல் கட்சிப் பிரமுகர்களும், அங்கு காணப்பட்டதுடன், வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபரும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் 15.06.2015ற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இரண்டாம் முறை கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர், குறித்த திகதியில் தான் கொழும்பில் நின்றதாகவும், கொழும்பு வங்கியொன்றில் தான் பணம் எடுத்துக் கொண்டதாகவும் இந்த சம்பவத்தில் தனக்கு சம்பந்தமில்லை, தான் இதில் ஈடுபடவில்லை என தனது சார்பில் தன் பக்கமுள்ள விளக்கத்தினை அளித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற வாக்குமூலங்களை பொலிஸார், நீதவானிடம் சமர்ப்பித்தனர். அத்துடன், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தலைமுடிகளையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதன்போது, ‘சந்தேகநபர்களிடம் ஏதாவது கூறவிருக்கின்றீர்களா?’ என பொலிஸார், நீதவானிடம் விசாரித்த போது, ‘தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறியதுடன், சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று தான் வெள்ளவத்தையில் இருந்ததாகவும் வெள்ளவத்தையிலுள்ள வங்கியொன்றின் ஏ.ரி.எம். இயந்திரத்தில் பணம் பெற்றுக்கொண்டதாகவும் கூறியதாக’ பொலிஸார் கூறினர்.
அதேவேளை சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படுகின்ற மகாலிங்கம் சசிகுமார் வெள்ளவத்தையில் வைத்து கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேள்வியெழுப்பிய சட்டத்தரணி கே.வி தவராசா அவர்கள், சசிகுமார் ஏற்கனவே வேலணை வங்களாவாடியில் வைத்து பொதுமக்களால் பிடிக்கப்பட்ட தாக்கப்பட்டு பின்பு அரசியல் பிரமுகர்களால் விடுவிக்கப்பட்டது பற்றியும், பின்னர் புங்குடுதீவுக்கு எவ்வாறு சென்றார்?
என்பது குறித்தும், இவரை வெள்ளவத்தைக்கு அனுப்பி வைத்தது யார் யார்?, இதற்கான கொடுக்கல் வாங்கல்கள் எங்கு நடைபெற்றது?? உள்ளிட்ட சகல விடயங்களும் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் ஏனென்றால் இது வழக்கிற்கு எதிர்காலத்தில் சில சிக்கல்களை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படுகின்ற மகாலிங்கம் சசிகுமாரது கைது தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினர் சகல விடயங்களையும் ஆராய்ந்து அடுத்த நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆத்துடன் சந்தேகநபர்கள் அனைவரையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டு வழக்கினை எதிர்வரும் 15.06.2015ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதவான் எஸ்.லெனின்குமார் முக்கிய நான்கு உத்தரவுகளை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். அவை வருமாறு,
01. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்க வேண்டும்.
02. கொலை இடம்பெற்ற இடத்தில் காணப்பட்ட சான்றுகளை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும்.
03. சந்தேகநபர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று கொழும்பு வெள்ளவத்தையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதால் அவர் 13 அல்லது 14ம் திகதிகளில் வெள்ளவத்தை பகுதி தனியார் வங்கிகளில் பணம் மீளப் பெற்றுக் கொண்டது தொடர்பான சிசிரிவி காட்சிகளை நீதிமன்றில் முன்வைக்க வேண்டும்.
04. சட்ட வைத்திய அதிகாரியிடம் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தி இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பித்தல் மற்றும் வேறு கொலை சாட்சியங்கள் இருப்பின் சமர்பித்தல்.
இதேவேளை, வித்தியா படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பேரணியின் போது குழப்பம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 129 பேரில் 47 பேர் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அதில் 45 பேர் எதிர்வரும் 9ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
16 வயதிற்கு கீழ்ப்பட்ட இருவர் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் வாதியான சிறிதரன் எதற்காக நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்? வித்தியாவின் சார்பில் வாதாடுவதற்காக வந்திருக்கும் வக்கீல்களுக்கு சட்ட நுணுக்கங்கள் சொல்லிக்கொடுக்க (உதவி) வந்திருப்பாரோ? படம்காட்ட புறப்பட்டிருக்கிறார் சிறிதரன்.