இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மோடியை பிடித்து கொடுத்தால் ரூ.100 கோடி பரிசு கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் சிராஜ்-உல்-ஹக் கூறியுள்ளார்.
இதுகுறித்து காஷ்மீரில் உள்ள ரவல்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிராஜ்-உல்-ஹக் கலந்து கொண்டு பேசுகையில், ”ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் ஜலாகுதீன் போன்ற ஜிகாத் தலைவர்களை கைது செய்ய இந்தியா முயற்சி செய்து வருகிறது.
இந்த முயற்சிக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. ஜலாகுதீனை பிடித்துக் கொடுத்தால் ரூ.50 கோடி பரிசு கொடுப்பதாக இந்தியா சொல்கிறது.
ஆனால் நான் சொல்கிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பிடித்து கொடுப்பவர்களக்கு ரூ.100 கோடி பரிசு கொடுக்க தயாராக இருக்கிறோம். மோடியை கைது செய்பவர்களுக்கு உடனடியாக இந்த பரிசு வழங்கப்படும்.
காஷ்மீரிலும், குஜராத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு மோடியே காரணமாகும். ஆனால், பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அதை கண்டும், காணாதது போல இருக்கிறார்கள்.
காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதியாகும். இதை மறந்து விட்டு எந்த பாகிஸ்தான் அரசியல்வாதியாவது இந்தியாவுக்கு ஆதரவாக பேசினால், அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கும், காஷ்மீருக்கும் துரோகிகளாக எண்ணப்படுவார்கள். காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்த பிறகுதான் நட்பு பற்றி பேச வேண்டும்.
இந்தியாவுடன் யார் நட்புக் கொள்ள விரும்பினாலும், அவர்கள் டெல்லி மற்றும் மும்பைக்கு செல்லட்டும். அவர்களுக்கு இஸ்லாமாபாத்தில் இடமில்லை” என்றார்.