சேர் நான் ஹங்­வெல்ல  இறப்பர் தோட்­டத்தில் பணி­பு­ரியும் கங்­காணி கதைக்­கின்றேன். எங்கள் இறப்பர் தோட்­டத்­தி­லுள்ள மடு­வத்தில் இளம் பெண்­ணொ­ருவர் தூக்கில் தொங்­கி­ய­வாறு சட­ல­மாகக் கிடக்­கின்றாள்.

எங்­க­ளுக்கு பய­மா­க­வி­ருக்­கின்­றது. தய­வு­செய்து உட­ன­டி­யாக இங்கு வரு­வீர்­களா?” என்று பெரும் பதற்றத்­துடன் கங்­காணி பொலி­ஸா­ருக்கு  தக­வ­லொன்­றினை வழங்­கினார்.

இதனைத் தொடர்ந்து துரி­த­மாகச் செயற்­பட ஆரம்­பித்த ஹங்­வெல்ல பொலிஸார் விரை­வாக சம்­பவ இடத்­தினை வந்­த­டைந்­தனர். (2015.04.08)

அங்கு சன­ந­ட­மாட்டம் குறைந்த, அடர்ந்த இறப்பர் மரங்­களைக் கொண்ட விசா­ல­மான தோட்­டத்தின் நடுவே  தென்னம் தும்­பு­களைச் சேக­ரிக்கும் சிறிய மடு­வ­மொன்று காணப்­பட்­டது.

அந்த மடு­வத்தில் தான் கங்­காணி கூறி­யது போல் குறித்த பெண்ணின் கால்கள் நிலத்தைத் தொட்டவாறும் முழங்­கால்கள், மண்­டி­யிட்­ட­வாறும் தூக்கில் தொங்­கி­ய­படி மேற்­படி பெண்ணின் சடலம் காணப்­பட்­டது.

மேலும் அவள் அரு­கி­லேயே ஆடைகள் அடங்­கிய பையொன்றும், கைய­டக்கத் தொலை­பேசியொன்றும் காணப்­பட்­டது.

எனவே இது பொலி­ஸா­ருக்கு பல்­வேறு சந்­தே­கங்­களை மன­துக்குள் எழுப்­பி­யது. குறித்த பெண் யார்? ஏன் இங்கு வந்தாள்? எங்­கி­ருந்து இங்கு வந்தாள்?

அவ­ளு­டைய மரணம் கொலையா? தற்­கொ­லையா? அதற்­கான காரணம் என்ன? போன்ற அடுக்கடுக்கான கேள்­வி­க­ளுக்கு விடை காணும் முக­மாகப் பல்­வேறு கோணங்­களில் தமது விசாரணை­களை ஹங்­வெல்ல குற்­றப்­பி­ரி­வினர் முன்­னெ­டுத்­தனர்.

அதன்­படி குறித்த பெண் தொடர்­பான தக­வல்­களைத் திரட்­டு­வ­தற்கு சம்­பவ இடத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்­கப்­பட்ட பெண்ணின் கைய­டக்கத் தொலை­பேசி பேரு­த­வி­யா­க­வி­ருந்­தது.

showImageInStoryஎனவே குறித்த பெண்ணின் கைய­டக்கத் தொலை­பே­சியில் காணப்­பட்ட வெளிச் செல்லும் அழைப்புகள், உள்­வரும் அழைப்­புகள், குறுந் தக­வல்கள் போன்­ற­வற்றை சோத­னைக்­குட்­ப­டுத்­திய போது இரு தொலை­பேசி  இலக்­கங்­க­ளி­லி­ருந்து பெண்ணின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு தொடர்ந்து அழைப்­புகள் வந்­தி­ருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

அது­மட்­டு­மின்றி பொலி­ஸா­ரிடம் கைய­டக்க தொலை­பேசி இருந்த போதும் அழைப்­புக்கள் வந்த வண்ணமே இருந்­தன.

எனவே, வந்த தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்கு பொலிஸார் பதி­ல­ளித்த போது ஒரு தொலை­பேசி இலக்கம் குறித்த பெண் பணி­பு­ரிந்த வீட்டின் எஜ­மானின் தொலை­பேசி இலக்கம் என்­பதும், மற்­றை­யது குறித்த பெண்ணின் மூத்த சகோ­த­ரியின் தொலை பேசி இலக்கம் என்­பதும் தெரி­ய­வந்­தது.

இதனைத் தொடர்ந்து இரு­வ­ருக்கும் குறித்த பெண் உயி­ரி­ழந்து விட்டார் என்ற சோக­மான செய்­தி­யினை பொலிஸார் அறி­வித்­த­துடன், அவர்கள் இரு­வ­ரையும் உட­ன­டி­யாக ஹங்­வெல்ல பொலிஸ் நிலையத்துக்கு வரு­மாறும் பணித்­தனர்.

அதன்பின் இரு­வ­ரி­ட­மி­ருந்தும் குறித்த பெண் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். அவ்­வாறு மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் மூலம் தெரிய வந்த தக­வல்­களின் அடிப்­ப­டையில்,

மலை­ய­கத்தின் நுவ­ரெ­லியா, ஒலிபன் தோட்­டத்தைப் பிறப்­பி­ட­மாக கொண்­டவள் சீதா மேரி. (18 வயது) ஒலிபன் தோட்­டத்தில் கல்வி, நாக­ரிகம், பொரு­ளா­தாரம் என்று அனைத்­திலும் மிகவும் பின்­தங்­கி­யது சீதா மேரியின் குடும்பம்.

தந்தை இளம் வய­தி­னி­லேயே இறந்து போக தாயின் உழைப்­பிலும், பரா­ம­ரிப்­பி­லுமே சீதா மேரியும் அவளது மூத்த சகோ­த­ரியும் வளர்ந்­துள்­ளனர்.

இந்­நி­லையில், சீதா மேரியின் மூத்த சகோ­தரி கொழும்பு பகு­தியில் பணி­பு­ரிந்­த­துடன், விடு­முறை நாட்களில் மட்­டுமே வீட்­டுக்கு வந்து செல்வாள்.

எனவே, பெரும்­பாலும் சீதா மேரி தாயுடன் தனி­மையில் வீட்­டி­லி­ருந்தாள். அவள் பாட­சாலை கல்வியையும் ஒழுங்­காகப் பூர்த்தி செய்யவில்லை.

எனவே மூத்த சகோ­தரி தங்கை சீதா மேரியை கொழும்­புக்கு கூட்டி வந்து வேலைக்கு அமர்த்துவதற்கான திட்­ட­மொன்றைத் தீட்­டினார்.

அதன்­படி, ஹோமா­கம கட்­டு­வான பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல வைத்­தியர் ஒரு­வரின் வீட்டில் சீதா மேரியை வேலைக்கு அமர்த்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தாள்.

அதன்­படி மூன்று மாதங்­க­ளுக்கு முன் சீதா மேரியை அவ்­வைத்­தி­யரின் வீட்டில் வேலைக்கு அமர்த்­தினார்.

சீதா மேரி வேலைக்கு அமர்த்­தப்­பட்ட வைத்­தி­யரின் குடும்­பத்தில் வைத்­தியர், அவர் மனைவி, வைத்தியரின் தாயார், இரு சிறு குழந்­தைகள் மட்­டுமே இருந்­தனர்.

வைத்­தி­யரும் அவ­ரு­டைய மனை­வியும் அதி­கா­லையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் மீண்டும் வீட்­டுக்கு வரு­வார்கள்.

எனவே, இரு குழந்­தை­க­ளையும் வைத்­தி­யரின் தாயார் கவ­னித்துக் கொள்­வதால் அவ­ருக்கு உதவி ஒத்தா­சை­யாக இருப்­ப­துடன், வீட்டு வேலை­களை செய்­வ­தற்­குமே சீதா மேரி அங்கு வேலைக்கு அமர்த்­தப்­பட்டாள்.

அங்கு சென்று மிக குறு­கிய நாட்­க­ளுக்­குள்ளே வைத்­தி­யரின் குடும்­பத்­தினர் சீதா மேரியை மிக அன்­பாகக் கவ­னித்து வந்­த­துடன், அவ­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும் வீட்டில் செய்து கொடுத்­தனர்.

சரி­யான நேரத்தில் சம்­பளம், மூன்று வேளை உணவு, அவ­ளுக்­கென்று தனி­யான அறை என்று எந்தக் குறையும் இருக்­க­வில்லை.

ஆயினும், அவளுக்குக் கிடைத்த அரிய சந்­தர்ப்­பத்தை சரி­யாகப் பயன்­ப­டுத்தி வாழ்வில் முன்­னேற சீதா மேரி தவ­றினாள்.

வேலை நேரத்­திலும் கையில் கைய­டக்கத் தொலை­பே­சி­யுடன் வலம் வந்­த­துடன், பெரும்­பா­லான நேரத்தை தொலை­ பேசி உரை­யா­டல்­க­ளி­லேயே கழித்­துள் ளாள்.

அது­மட்­டு­மின்றி, ஒரு நாள் சீதா மேரிக்கு என்று ஒதுக்­கப்­பட்­டி­ருந்த அறைக் குள் வைத்­தி­யரின் சிறிய குழந்தை சென்­றதால் வைத்­தி­யரின் தாயார் சீதா மேரியின் அறைக்குள் சென்­றி­ருக்­கின்றாள்.

அப்­போது அந்த அறையின் சுவரில் “ஐ லவ்யூ யூ” (I love you) என்ற வார்த்தை எழு­தப்­பட்­டி­ருந்­தது. உடனே வைத்­தி­யரின் தாயார் சீதா மேரியை அழைத்து ” என்ன இது இப்­படி சுவரில் எழு­தி­யுள்ளாய்” என்று வின­வி­யுள்ளாள்.

எனினும் சீதா மேரி அதற்கு எந்த வித பதிலும் தெரி­விக்­க­வில்லை. மௌன­மா­கவே இருந்­துள்ளாள்.

அது­மட்­டு­மின்றி சீதா மேரியின் படுக்கை விரிப்­பிலும் தொலை பேசி இலக்­கங்கள், ஐ லவ்யூ யூ (I love you) என்ற வார்த்­தைகள் எழு­தப்­பட்­டி­ருந்­தன.

எனினும், வைத்­தி­யரின் தாயார் இது பற்றி வைத்­தி­ய­ரிடம் எது­வுமே முறை­யி­ட­வில்லை. அதை அப்­ப­டியே விட்டு விட்டார்.

இந்­நி­லையில், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நண்­பகல் 1.30 மணி­ய­ளவில் வைத்­தி­யரின் தாய் குழந்­தை­க­ளுக்கு உண­வூட்டி நித்­திரை செய்து விட்டு மதிய உண­வினை உட்­கொள்­வ­தற்­காக சீதா மேரியைத் தேடி­யுள்ளார்.

பலத்த குரலில் பெயர் சொல்லி அழைத்­த­வாறே வீட்டின் மூலை மூடுக்­கெல்லாம் தேடிய போதும் சீதா மேரி எங்கும் இருக்­க­வில்லை.

இதனைத் தொடர்ந்து பதற்­ற­ம­டைந்த வைத்­தி­யரின் தாயார் வைத்­தி­ய­ருக்கு இது தொடர்­பாக அறி­வித்­துள்ளார்.

அதன்பின் வைத்­தியர் சீதா மேரியின் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­திய போதும் அவள் அதற்கு பதி­ல­ளிக்­க­வில்லை.

எனவே உட­ன­டி­யாக சீதா மேரியின் மூத்த சகோ­த­ரிக்கு நடந்த அனைத்­தையும் ஒன்றும் விடாது வைத்­தியர் கூறி­யுள்ளார்.

இதனால் பெரும் குழப்­ப­ம­டைந்த சீதா மேரியின் மூத்த சகோ­தரி, அவ­ளுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்தி இது தொடர்­பாக கேட்ட போது “தனக்கு இந்த வேலை பிடிக்­க­வில்­லை­யென்றும் தான் நுவ­ரெ­லி­யா­வுக்கு சென்று கொண்­டி­ருப்­ப­தா­கவும் கூறி­யுள்ளாள்” அது தான் மூத்த சகோ­தரி சீதா மேரி­யுடன் கதைத்த கடைசி வார்த்தை.

அதன் பின் சீதா மேரியின் சகோ­தரி அவ­ளு­டைய தொலை­பேசி இலக்­கத்­திற்கு அழைப்­பை­யேற்­ப­டுத்­திய போது ஆணொ­ரு­வரே கதைத்­துள்ளான். அவனும் பெரி­தாக எது­வுமே தெரி­விக்­க­வில்லை.

“ நான் ஒரு அவ­சர வேலை­யி­லி­ருக்­கின்றேன் பிறகு எடுக்­கின்றேன்” என்று கூறி­விட்டு அழைப்பைத் துண்­டித்­துள்ளான்.

இவ்­வாறு வைத்­தி­ய­ரி­ட­மி­ருந்தும், சீதா மேரியின் சகோ­த­ரி­யி­ட­மி­ருந்தும் பெற்றுக் கொண்ட தக­வல்­களின் அடிப்­ப­டையில் சீதா மேரிக்கு காதல் தொடர்பு ஒன்று  இருந்­துள்­ள­மையும், அதன் விளைவாகவே சீதா மேரிக்கு இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்க வேண்டும் என்­ப­தையும் பொலி­ஸாரால் ஊகிக்கக் கூடியதா­க­வி­ருந்­தது.

ஆயினும் சீதா மேரி­யுடன் காதல் தொடர்­பு­களைப் பேணி வந்­தவர் யார்? என்ற கேள்­விக்கு விடை கிடைக்­க­வில்லை.

எனவே, மேலும் சீதா மேரியின் தொலை­பேசி அழைப்­புகள், அவர் யாருடன் அதி­க­ள­வான நேரம் தொலை­பே­சியில் கதைத்­துள்ளார் ? போன்ற விட­யங்­களைச் சேக­ரிக்கும் முக­மாக தொலை­பேசி வலை­ய­மைப்­பு­களை மையப்­ப­டுத்தி   விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த போது தான் ரிகில்­ல­கஸ்­கட பிர­தே­சத்தைச் சேர்ந்த 24 வய­தான திரு­ம­ண­மான ஆணொ­ரு­வரே இவ்­வாறு சீதா மேரி­யுடன் காதல் தொடர்­பு­களைப் பேணி வந்­தவர் என்­பது தெரிய வந்­தது.

இதனைத் தொடர்ந்து உட­ன­டி­யாக குறித்த இளை­ஞனைக் கைது செய்து விசா­ர­ணை­களை மேறகொண்ட போது குறித்த இளைஞன் தெரி­வித்த வாக்­கு­மூ­லத்தின் படி, ஹோமா­கம ஹப­ர­கட பிரதே­சத்­தி­லுள்ள பேக்­கரி ஒன்றில் நட­மாடும் உணவு விற்­பனை வண்­டியில் விற்­ப­னை­யா­ள­ராகப் பணி­பு­ரிந்த நிலையில் தினமும் மாலை 3 மணி­ய­ளவில் கட்­டு­வான பிர­தே­சத்தில் விற்­பனை நடவடிக்கை­களை மேற்­கொண்டு வந்த போதே சீதா மேரியின் அறி­முகம் குறித்த இளை­ஞ­னுக்கு கிடைத்­தது.

இதனை தொடர்ந்து இரு­வ­ருக்­கு­மி­டையில் தொலை­பேசி இலக்­கங்கள் பரி­மாறிக் கொள்­ளப்­பட்­ட­மையால், இரு­வரும் தொலை பேசி உரை­யா­டல்கள் மூலம் தங்­க­ளு­டைய காதலை வளர்த்து வந்­துள்­ளனர்.

இந்­நி­லையில், ஏப்ரல் மாதம் 6ஆம் திக­திக்கு முன்­னைய நாள் குறித்த இளைஞன் சீதா மேரி­யுடன் கதைத்த போது 6ஆம் திகதி இரு­வரும் வெளியில் போவோம், நீ ஆடை­க­ளையும் எடுத்துக் கொண்டு ஹோமா­கம பிர­தே­சத்­துக்கு வந்து விடு எனக் கூறி­யுள்ளான்.

அதன்­படி சீதா மேரி பணி­பு­ரிந்த வீட்டின் எஜ­மா­னுக்கு தெரி­யாமல் ஆடை­க­ளுடன் கூடிய பையுடன் ஹோமா­கம பிர­தே­சத்­துக்கு குறித்த இளை­ஞனை சந்­திப்­ப­தற்­காக வந்­துள்ளாள்.

அதன்பின் இரு­வரும் தெஹி­வ­ளைக்கு சென்று மறு நாள் விடியும் வரை தெஹி­வளை பஸ்தரிப்பிடத்தில் தமது பொழுதைக் கழித்­துள்­ளனர்.

பின்னர் கண்­டிக்கு சென்று மறு­ப­டியும் அவிஸ்­ஸா­வல பிர­தே­சத்­துக்கு வந்து அங்கு ஹங்­வெல்ல இறப்பர் தோட்­டத்தில் காணப்­பட்ட தென்னந் தும்­பு­களைச் சேக­ரிக்கும் மடு­வத்தில் இரு­வரும் சில மணி நேரங்கள் உல்­ல­சா­மா­க­வி­ருந்­துள்­ளார்கள்.

அதன்­பின்னே குறித்த இளைஞன் தனக்கு திரு­ம­ண­மாகி, தனது மனைவி குழந்தை கிடைப்­ப­தற்கு இருக்­கின்றாள் என்ற அதிர்ச்­சி­யூட்டும் உண்­மையை சீதா மேரிக்கு கூறி­யுள்ளான்.

அது­மட்­டு­மின்றி, சீதா மேரியை மீண்டும் அவள் பணி புரிந்த வீட்­டுக்கோ அல்­லது நுவ­ரெ­லி­யா­வுக்கோ சென்று விடு­மாறு கூறி­யுள்ளான்.

இதனால் இரு­வ­ருக்­கு­மி­டையில் மிக நீண்ட நேரங்கள் வாக்கு வாதங்கள் தொடர்ந்த நிலையில் குறித்த இளைஞன் அங்­கி­ருந்து சென்­றுள்ளான்.

எனினும் சிறிது நேரம் கழித்து மீண்டும் குறித்த இளைஞன் அங்கு வந்து பார்க்கும் போது அவள் மடு­வத்தில் தூக்கில் தொங்­கி­ய­வாறு சட­ல­மாகக் கிடந்­துள்ளாள், அதன்பின் அவன் பயத்தில் அவளை அவ்­வி­டத்­தி­லேயே விட்டு விட்டு தப்பிச் சென்­றுள்ளான்.

எனினும் பொலி­ஸா­ருக்கு சீதா மேரியின் மரணம் கொலையா? தற்­கொ­லையா என்ற சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன.

சீதா மேரியின் சடலம் வழ­மைக்கு மாறாக தூக்கில் தொங்­கிய நிலையில் கால்­க­ளி­ரண்டும் மண்டியிட்டிருந்த நிலையில் இருந்ததால் பொலிஸாருக்கு மேலும் சந் தேகத்தை ஏற்படுத்தியது.

அது­மட்­டு­மின்றி சீதா மேரியின் சட­லத்தை பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­திய போது அவர் 14 வயதில் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்­துள்­ள­மையும், அக்­கு­ழந்தை 2 மாதங்கள் மட்டும் உயி­ருடன் இருந்­துள்­ள­மையும் தெரிய வந்­தது.

இந்­நி­லையில் சீதா மேரியின் உடல் பாகங்கள் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக இர­சா­யன பகுப்பாய்வுகளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

அது­மட்­டு­மின்றி, குறித்த இளைஞன் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் விசா­ர­ணை­க­ளுக்­காக வைக்­கப்­பட்டுள்ளான்.

எது எவ்­வா­றா­யினும், சீதா மேரி போன்ற அப்­பாவி பெண்­களின் அறி­யா­மையே இவ்­வா­றான துயர சம்­ப­வங்­க­ளுக்கு கார­ணங்­க­ளாக அமை­கின்­றன.

-வசந்தா அரசரட்ணம்-

Share.
Leave A Reply

Exit mobile version