சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92 ஆவது பிறந்த நாளையொட்டி அவர் இன்று தொண்டர்களிடம் நேரில் வாழ்த்துப் பெற்றார்.
பிறந்த நாள் என்பதால் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சென்னை சி.ஐ.டி.யு. காலனியில் உள்ள வீட்டில் தாய் தந்தையர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
அப்போது ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.
அதன்பிறகு 5.07 மணிக்கு கோபாலபுரம் வந்த கருணாநிதிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், தயாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்து கூறினார்கள்.
பின்னர் கருணாநிதி மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவரை வரவேற்றார்.
கோபாலபுரம் சென்ற கருணாநிதி அங்கு பிரமுகர்களை சந்தித்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பூச்செண்டு கொடுத்து அனுப்பினார்.
தமிழக கவர்னர் ரோசையா வாழ்த்துச்செய்தி அனுப்பி இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், த.மா.கா. துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சுப.வீர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் பரிசாக சால்வைகள், பழங்கள், மாலைகள், ‘கேக்’ உள்ளிட்டவைகளையும் தொண்டர்கள் வழங்கினார்கள்.இதனால் அறிவாலயம் பகுதியே விழாக் கோலம் பூண்டு இருந்தது.