தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியொன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அந்த முச்சக்கரவண்டி தற்போது தம்வசம் இருப்பதாக கூறிய காவல்துறையினர் அதனை தொடர்ந்தும் தமது காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டியை காவல்துறையின் பாதுகாப்பில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கினார்.

மேலும் ரவிராஜ் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இலங்கை இராணுவத்திற்கு சொந்தமானதென்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கியொன்று இவ்வாறான செயலுக்குப் பயன்படுத்தப்பட்டது எப்படி என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்பு இந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 19 தேதி வரை ஒத்திவைக்கப் பட்டது.

அன்றைய தினம் வரை சந்தேக நபர்களான ஐந்து இலங்கைக் கடற்படை அதிகாரிகளை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version