எனக்கும், நிரோஷாவுக்கும் இடையில் இரு வருடங்களாக இரகசியத் தொடர்புகள் இருந்து வந்தன. நிரோஷா பியகமையிலுள்ள அவளுடைய கணவரின் வீட்டிலிருந்து பிரிந்து வந்து வென்னப்புவையில் தனியாக வாடகை வீடொன்றில் தங்கியிருந்தாள்.
அப்போது நான் அடிக்கடி அவளைப் பார்க்க அங்கு செல்வேன். நிரோஷாவின் குழந்தையும் என்னைக் கண்டதும் “அப்பா, அப்பா” என்று ஒட்டிக்கொள்ளும். ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல நிரோஷாவின் குழந்தையைக் காரணம் காட்டி அவளுடைய கணவன் அங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இது எங்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்கு பெரும் இடையூறாகவிருந்தது. எனவே தான், நான் ஒரு முடிவெடுத்தேன். குழந்தைக்காகத் தானே நிரோஷாவின் கணவன் வென்னப்புவ வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கின்றான். குழந்தை இல்லையென்றால் வர மாட்டான்தானே, என்று குழந்தையைக் கொன்று விட்டேன்”
இவ்வாறு சிறு குழந்தையொன்றை ஈவிரக்கமின்றிக் கொலை செய்து ஆற்றில் வீசி எறிந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வரும் தகவல்களின் அடிப்படையில், நிரோஷா மதுமாலி பியகமையில் அரச நிறுவனமொன்றில் உதவிக்கணக்காளராகப் பணிபுரிந்து வந்த நிலையில்தான் பந்துல என்பவரைக் காதலித்து திருமணம் பந்தத்தில் இணைந்தாள்.
பந்துலவும் அரசாங்க திணைக்களமொன்றில் தொழில் புரிபவர். எனவே இருவரும் சேர்ந்து பியகமை பகுதியிலேயே வீடொன்றையும் வாங்கி தமது திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அதன்பின் இருவருக்கும் இடையிலான அன்பின் அடையாளமாக நிரோஷா அழகிய ஆண் குழந்தையொன்றைப் பெற்றெடுத்தாள்.
நிரோஷாவின் கணவர் பந்துல, நிரோஷா மீதும் அவளது குழந்தை மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்திருந்தான். அதுவும் குழந்தையை ஒரு நாளும் அவனால் பிரிந்திருக்க முடியாது.
இந்த நிலையில் நிரோஷாவினதும், பந்துலவினதும் திருமண வாழ்க்கை மூன்று வருடங்களாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நகர்ந்தது. ஆயினும் விதி யாரை விட்டது. விதியின் விளையாட்டில் நிரோஷாவினதும் பந்துலவினதும் குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகச் சிதற ஆரம்பித்தது.
நிரோஷா அரச நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்த காலத்தில் 24 வயதான துமிந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவனின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது. துமிந்த லொறிச் சாரதியாகப் பணிபுரிபவன்.
எனவே தனது தொழில் நிமித்தம் உறுதிப்பத்திரமொன்றைப் பெற்று கொள்ளும் முகமாக நிரோஷா பணிபுரிந்த குறித்த நிறுவனத்துக்கு முதல் முதலில் வந்திருந்தான். இதன் போதே நிரோஷாவுக்கு துமிந்தவின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது. துமிந்தவுக்கு வேண்டிய சகல உதவிகளையும் நிரோஷாவே செய்துகொடுத்தாள்.
ஒருவாறு துமிந்தவுக்கு வேண்டிய உறுதிப்பத்திரம் நிரோஷா மூலம் கிடைக்கப் பெற்றது. ஆயினும், அதன்பின்பும் இருவருக்குமிடையிலான உறவு தொடர்ந்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாய் தமது உறவினை ஆரம்பித்தார்கள்.
எனினும், நாட்கள் செல்லச் செல்ல நட்பு என்னும் திரை மெல்ல மெல்ல விலகி இருவருக்குள்ளும் மிக நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. நிரோஷா தனது கணவருக்குத் தெரியாமல் துமிந்தவுடன் தனது இரகசிய தொடர்புகளைப் பேணி வந்தாள்.
எனினும் வெகு நாட்கள் செல்லும் முன்னரே நிரோஷாவின் கணவர் பந்துலவுக்கு இது எப்படியோ தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பந்துல தொடர்ந்து நிரோஷாவுடன் முரண்பட ஆரம்பித்தார்.
நிரோஷாவின் கணவர் நிரோஷாவை வேலைக்குச் செல்லாது வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறினார். ஆயினும் நிரோஷா அதற்கு உடன்படவில்லை. இதனால் இருவருக்குமிடையில் தொடர்ந்து பிரச்சினைகள் மூண்ட வண்ணமே இருந்தன. இறுதியில் பந்துலவை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்த நிரோஷா அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.
அதன்படி வென்னப்புவை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் அலுவலக உதவிக் கணக்காளராக வேலைக்கு சேர்ந்ததுடன், மூன்று வயதுக் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வென்னப்புவை பகுதியில் வாடகைக்கு வீடொன்றையும் பெற்றுக் குடியேறினாள்.
அதன்பின் வென்னப்புவை பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தனது மூன்று வயது மகனை காலையில் கொண்டு போய் விட்டு விட்டு வேலைக்குச் செல்வதும், பின் வேலை விட்டு வீட்டுக்கு செல்லும் போது மீண்டும் குழந்தையை கூட்டிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
அதுமட்டுமின்றி, நிரோஷாவின் தனிமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான் துமிந்த. அடிக்கடி நிரோஷாவைச் சந்திப்பதற்காக நிரோஷா தங்கியிருந்த வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.
இதனால் இப்பிரதேசத்திலிருந்த பலரும் துமிந்த தான் நிரோஷாவின் கணவர் என்று நம்பத் தொடங்கினர். அதுமட்டுமின்றி நிரோஷாவின் மகனும் துமிந்தவை “அப்பா” என்றே அன்பாக அழைத்தான்.
துமிந்தவும் பல சமயங்களில் ஒரு தந்தை போலவே நிரோஷாவின் மகனிடம் நடந்துகொண்டான். இதற்கு இடையில் நிரோஷாவின் சட்டரீதியான கணவன் பந்துலவும் குழந்தையைப் பார்ப்பதற்காகவும், நிரோஷாவை எப்படியாவது சமாதானப்படுத்தி தன்னுடன் கூட்டிச் செல்லும் நோக்குடனும் அடிக்கடி அங்கு வந்து சென்றான்.
எனினும் பந்துல பலமுறை தன்னுடைய முயற்சியில் தோற்றான். இருப்பினும் குழந்தையைப் பார்ப்பதற்காக நிரோஷாவின் வீட்டுக்கு வருவதை மட்டும் தவிர்த்துக்கொள்ளவில்லை.
இவ்வாறு பெரியவர்களுக்கு இடையில் நடைபெறும் எதுவுமே அந்த பிஞ்சுக் குழந்தை அறியாதிருந்தது. அது கள்ளங் கபடமற்ற தன்னுடைய சிரிப்பினால் இருவர் இடத்திலும் தன்னுடைய அன்பு மழையைப் பொழிந்தது. ஆயினும் துமிந்த அந்த பிஞ்சுக்குழந்தைக்கு இயமனாக மாறினான்.
ஒரு நாள் துமிந்த நிரோஷாவின் வீட்டுக்கு சென்ற போது நிரோஷாவின் வீட்டில் அவளுடைய கணவர் பந்துல குழந்தையை பார்ப்பதற்காக வந்திருந்தமையால் நிரோஷா துமிந்த எவ்வளவு தட்டியும் கதவைத் திறக்கவில்லை.
இதனால் பெரும் ஆத்திரமடைந்த துமிந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அப்போது நிரோஷா தகாத வார்த்தைகளால் துமிந்தவை திட்டித் தீர்த்தாள் இதன்போது ” நீ இனி இந்த பக்கமே வராதே, எதற்காக இங்கு வருகின்றாய்” என்று எல்லாம் திட்டி தீர்த்தாள்.
இதனால் பெரும் மனம் குழப்படைந்தவன் நிரோஷாவுக்கும் தனக்குமிடையிலான உறவினைத் தொடர்ந்து பேணிவருவதற்கு நிரோஷாவின் குழந்தை தானே இடையூறாக இருக்கின்றது.
குழந்தையைப் பார்ப்பதற்காக தானே அவளுடைய கணவர் அடிக்கடி நிரோஷாவின் வீட்டுக்கு வருகின்றான். குழந்தையைக் கொன்றுவிட்டால் பந்துல வரப் போவதில்லை என்று முட்டாள்த்தனமாக எண்ணினான். அதன்படி குழந்தையை கொல்வதற்கான திட்டமொன்றை தீட்டினான்.
அந்த திட்டத்தின்படி, அன்று வழமைபோல் நிரோஷா தனது குழந்தையை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் விட்டு விட்டு வேலைக்குச் சென்றாள்.
அதன்பின் அன்று பிற்பகல் 12.00 மணியளவில் அங்கு சென்ற துமிந்த, குழந்தையை அழைத்துக் கொண்டு செல்கின்றேன் என்று சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரியிடம் கூறிவிட்டு குழந்தையை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றான்.
சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரியும் நிரோஷாவின் கணவர் என்று துமிந்தவை நினைத்திருந்தபடியால் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் துமிந்தவுடன் குழந்தையை அனுப்பினார்.
அதன்பின் மீண்டும் அலுவலக வேலையிலிருந்து நிரோஷா குழந்தையைக் கூட்டிச் செல்தற்காக சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு வந்த போது, வழமையாக தூரத்தில் கண்டவுடன் ” அம்மா ” என்று பெயர் சொல்லி அழைத்தவாறே முற்றத்துக்கு ஓடி வரும் குழந்தை அன்று வரவில்லை.
தொடர்ந்து சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குள் நுழைந்த போது அங்கு பணிபுரியும் பெண்மணி ” உங்களுடைய கணவர் வந்து குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார். எனினும் நிரோஷாவுக்கு மனதுக்குள் ஒருவித சந்தேகத்தை இது ஏற்படுத்தியது.
தன்னுடைய கணவர் ஒரு நாளும் குழந்தையைப் பார்ப்பதற்கு சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு வந்தது கிடையாது.
அப்படியிருக்கையில் இன்று எப்படி இங்கு வந்தார் என்ற சந்தேகத்தை நீக்குவதற்கு அவளுடைய கணவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ” குழந்தையை சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து அழைத்து சென்றது நீங்களா” என்று கேட்டாள்.
இருப்பினும் பந்துலவோ “நான் அழைத்துச் செல்லவில்லை ஏன் குழந்தைக்கு என்ன நடந்தது?” “என்று பெரும் பதற்றத்துடன் கேட்டார்.
அதன்பின் துமிந்தவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி “குழந்தையை சிறுவர் பாராமரிப்பு நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றது நீயா ? ” என்று கேட்ட போது அவனோ “இல்லை, நான் அழைத்து செல்லவில்லை” என்று கூறிவிட்டு விரைவாக அவளுடைய அழைப்பை துண்டித்தான்.
நிரோஷாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன தான் நிரோஷா வழி தவறிச் சென்றிருந்தாலும் குழந்தை பெற்றவள் என்பதால் அவள் மனம் பதற ஆரம்பித்தது. என்ன செய்வதென்று அறியாத நிலையில் அழுது புலம்பினாள்.
ஆயினும், பந்துல குழந்தையைக் காணவில்லை என்றும் , தனக்கு துமிந்த மீது சந்தேகம் இருப்பதாகவும் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தான்.
அதன்படி சந்தேகத்தின் பேரில் துமிந்தவை வென்னப்புவ பொலிஸார் கைது செய்து விசாரித்த போது குழந்தையை சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து தானே அழைத்து சென்றதாகவும், குழந்தையை நயினாமடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்திருப்பதாகவும் கூறினான்.
அதன்பின் வென்னப்புவ குற்றப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்று துமிந்தவையும் அழைத்துக் கொண்டு அந்த பிஞ்சுக் குழந்தையை தேடி தனது பயணத்தைத் தொடங்கியது.
எனினும் பொலிஸ் ஜீப் வண்டியில் செல்லும் போதே துமிந்த தான் இந்த பிஞ்சுக் குழந்தையின் வாயில் துணிகளை திணித்துக் கொலை செய்து ‘கிங் ஒயா’வில் வீசியதாகவும் தெரிவித்தான்.
இதனைத் தொடர்ந்து ‘கிங் ஒயா’ ஆற்றில் இருந்து அந்த பிஞ்சுக் குழந்தை சடலமாக மீட்டெடுக்கப்பட்டது. பல்வேறு குற்றச் செயல்களைப் பார்த்து பக்குவப்பட்டிருந்த பொலிஸாருக்கு கூட ஒரு நிமிடம் கண்களை கலங்கச் செய்தது அந்த காட்சி. அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இது தொடர்பாக, சந்தேக நபரான துமிந்த வழங்கிய வாக்குமூலத்தினை முழுமையாக நோக்குமிடத்து,
எனக்கும் நிரோஷாவுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக இரகசிய தொடர்புகள் இருந்து வந்தன. அதுவும் அவள் கணவருடன் கோபித்துக் கொண்டு தனியாக வாடகை வீடொன்றில் தங்கியிருந்தது, எனக்கு இன்னும் வசதியாகவிருந்தது.
நான் அடிக்கடி அவளைச் சந்திப்பதற்காக அங்கு வந்து செல்வேன். அவளுடைய குழந்தையும் என்னை அவனுடைய தந்தை என்று நினைத்து ‘அப்பா’ என்று அன்பாகக் கூப்பிடும். ஆயினும் எங்கள் இருவருக்குமிடையிலான உறவுக்கு இடைஞ்சலாக அடிக்கடி குழந்தையைக் காரணம் காட்டி நிரோஷாவின் கணவனும் அங்கு வந்து சென்றான். அது எனக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் நான் நிரோஷாவின் வீட்டுக்குச் சென்ற போது முன்கதவு மூடியிருந்தது. நான் பலத்த குரலில் நிரோஷாவின் பெயர் சொல்லி அழைத்தேன்.
எனினும் அவள் திறக்கவில்லை. நான் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அங்கு அவளுடைய கணவன் குழந்தையைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.
அதுமட்டுமின்றி நிரோஷா என்னைப் பார்த்து மறுபடியும் இங்கு வராதே எனக் கத்தினாள். என்னை அங்கிருந்து ஒரு நாயை விரட்டுவது போல் விரட்டினாள். நான் அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து சென்றேன்.
எனவே நிரோஷாவின் கணவன் அவளது குழந்தையைப் பார்ப்பதற்காக தானே அடிக்கடி வருகின்றான். இதனால் தானே நிரோஷா என்னை விரட்டி விட்டாள் என்று எண்ணினேன்.
அந்தக் குழந்தையால் இனி எனக்கு நிரோஷாவைப் பார்க்க முடியாது என்று எண்ணினேன். இதனால் எனக்கு அந்த குழந்தை மீது வெறுப்பு உண்டாகியது. எனவே தான் குழந்தையை ஒழித்துக் கட்ட வேண்டும் என நினைத்தேன்.
அதன்படி நிரோஷா குழந்தையை விட்டுச் செல்லும் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குச் சென்றேன். என்னைக் கண்டதும் குழந்தை ‘அப்பா’ என்று கூப்பிட்டவாறே சிரித்துக் கொண்டு முற்றத்துக்கு ஒடிவந்தது.
நிரோஷாவின் சட்டரீதியான கணவனைப் போல் சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரியிடம் நான் நடந்து கொண்டேன். அவர்களும் நம்பிவிட்டார்கள்.
இதனால் குழந்தையை என்னுடன் அழைத்து செல்லப் போகின்றேன் என்றதும் உடனே அனுமதி வழங்கிவிட்டார்கள்.
எனவே அதன்பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பஸ்லில் ஏறி நயினாமடு கிங் ஓயா அருகில் இறங்கினேன்.
அங்கு நிலத்தில் துணித்துண்டு ஒன்று கிடந்தது. அதனையும் கையோடு எடுத்துக் கொண்டு பாலத்திற்கு அருகில் சென்றேன். அங்கு சன நடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்போது நான் அக்குழந்தையின் வாய்க் குள் துணித்துண்டைத் திணித்தேன்.
சிறிது நேரத்துக்குள் குழந்தை மூச்சுத் திணறி விட் டது. உடனே யாரும் வருகின்றார்களா? என்று சுற்றிப் பார்த்து விட்டு பாலத்திற்கு மேலே சென்று குழந்தையை ஆற்றிற்குள் வீசினேன்.
பின் நான் அங்கிருந்து விரை வாக பஸ்லில் ஏறி வீடு சென்றேன்.” என தனது வாக்குமூலத்தில் சந்தேக நபரான துமிந்த தெரிவித்திருந்தான்.
இதனை தொடர்ந்து துமிந்த தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான். எது எவ்வாறாயினும், திருமணமாகி கணவன், குழந்தைகள் என்று வந்த பின் தவறான உறவு முறைகள் ஆபத்தானது என்பதற்கு மேற்படி சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு வகையில் இவ் வாறான இரகசியத் தொடர்புகளினால் இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிக் குழந்தைகள் தான்.
– வசந்தா அருள்ரட்ணம்