யாழ். துன்னாலைப் குடவத்தை பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல் காரணமாக, இது வரையிலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை (08) தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அதேயிடத்தில் திருட்டு மணல் அகழ்பவர்கள் தொடர்பில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவல் வழங்கியவர் மீது கடந்த மே 30ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்று வாள்வெட்டை மேற்கொண்டது.
இதில் துரைசிங்கம் பிரபா (வயது 29) என்பவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்;ந்து, வாள்வெட்டுக்கு இலக்கானவரின் குழுவும் மணல் கடத்தும் குழுவும் அடிக்கடி குழு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை (07) சென்ற குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களுக்கு கற்களை வீசியும் கம்பிகளைக் கொண்டும் அடித்துள்ளது.
இதில் பொன்னையா பொன்னுத்துரை (வயது 48), பொன்னுத்துரை தயானி (வயது 45), பொன்னுத்துரை துன்சியா (வயது 19) இராசா நந்தகுமார் (வயது 29) ஆகிய நால்வரும் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் எவரையும் கைது செய்யவில்லையெனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெல்லியடி பொலிஸார் கூறினர்.
யாழ். நகரில் குழப்பம் விளைவித்த 34 பேருக்கு பிணை
07-06-2015
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் டயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 பிரிவுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்களில் இறுதிப்பிரிவான 40 பேரில் 5 மாணவர்கள் உட்பட அறுவர் கடந்த 4ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மிகுதி 34 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 34 பேரின் வழக்கு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொதுச் சொத்து குற்றங்கள் (நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புபடாதவர்கள்) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் இவர்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் இவர்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இவர்களை பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
இவர்கள் (முன்னர் பிணை வழங்கப்பட்ட 6 பேரும் சேர்த்து) ஒவ்வொரு மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவர்கள் தொடர்ந்து நன்னடத்தையில் ஈடுபடவேண்டும். வேறு குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டு மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டால் இவர்களுக்கான பிணையை மன்று மீளப் பெற்றுக்கொள்ளும் என நீதவான் கூறினார்.
இவர்கள் தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் குறிப்பிட்டார்.
புங்குடுதீவு மாணவியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ். நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே மேற்படி அசம்பாவிதங்கள் இடம்பெற்றதுடன் இதன்போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.