சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அதிபர் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் குறித்தும், பிராந்திய பாதுகாப்புத் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் சிறிலங்கா அதிபருடன், இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலர், அதிபரின் செயலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக, உலகின் பழமை வாய்ந்த துப்பாக்கியின் மாதிரி வடிவத்தை, சிறிலங்கா அதிபருக்கு பாகிஸ்தான் இராணுவத் தளபதி அன்பளிப்பாக வழங்கினார்.
நாளை நாடு திரும்பவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி இன்று சிறிலங்கா பிரதமர், கூட்டுப்படைகளின் தளபதி, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.