சிறிலங்காவில் இந்த வருட தொடக்கத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்களின் இனப்பிரச்சினை பற்றியோ அல்லது அதற்கான தீர்வு பற்றியோ எந்தவொறு வார்த்தையையும் அத்தேர்தல் முடிந்து வெற்றிபெறும் வரை அதில் வெற்றியீட்டிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதிர்த்திருக்கவில்லை.
அதற்கு அவரை ஆதரித்து நின்ற தமிழ்க் கட்சிகளால் கூறப்பட்ட காரணமோ அப்படி எதனையும் வெளிப்படையாக கூறினால் அது இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் அதனாலேயே தங்களது ஆதரவைக் கூட மைத்திரிக்கு இறுதி நேரத்தில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
இப்படியொரு நிலை சிறிலங்காவில் இருக்கும் போதும் அது எந்தநேரத்திலும் ஒரு பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போதும் சிங்களத்தின் புதிய ஆட்சியானது தனது ஆட்சிக்கே ஆப்பாக மாறும் என்று தெரிந்திருந்தும் புலம்பெயர் தமிழருடன் ஒரு இரகசிய சந்திப்பை மேற்கொள்ள முன்வந்துள்ளமையானது அது மிகவும் பாரதூரமான பிரச்சினை ஒன்றில் சிக்கி அதிலிருந்து விடுபடுவதற்கு முயற்சிப்பதையே காட்டுகிறது.
இந்த லண்டன் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரக்காவின் பிரதிநிதி, நோர்வே முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக்சொல்ஹெய்ம், சுவிஸ் வெளிநாட்டமைச்சைச் சேர்ந்த பார்டின் டெசிஞ்சர், தென் ஆபிரிக்காவின் In Transformation Initiative (ITI) என்ற அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள்….,
உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன், நோர்வே ஈழத்தமிழர் அவை மற்றும் உலகத் தமிழர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினர் டாக்டர். ரமணன் ஆகியோருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ .சுமந்திரன் இச்சந்திப்பில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்சந்திப்புப் பற்றி இதில் கலந்து கொண்ட சுமந்திரன் மற்றும் சுரேன் சுரேந்திரன் ஆகியோர் இது வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியதாக மட்டுமே அமைவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தனர்.
அத்துடன், இது பகிரங்கப்படுத்தப்படாத சந்திப்பாகவே இருந்திருக்க வேண்டும் சுமந்திரனும் , முன்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பானது இலங்கையின் அரசியல் யாப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது பற்றியதாகவே அமைந்திருந்ததாகவும் சுரேந்திரனும் கூறியிருந்தனர்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் அதுவும் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் அரசாங்கம் தேர்தல் வரும் இன்றைய சூழ்நிலையில் பேச முன்வருமா என்பதாகும்.
அதுவும் கணிசமான புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் லண்டன் மாநகரில் இது எப்படி ஒரு இரகசியமான சந்திப்பாக அமைய முடியும் என்று அரசு எதிர்பார்த்திருந்திருக்க முடியும்?.
வடகிழக்கு மக்களின் எந்தவொரு அன்றாடப் பிரச்சினையும் இந்த புதிய அரசு தான் ஆட்சி அமைத்து 100 நாட்களுக்குள் தீர்த்திருக்கவில்லை.
அப்படியிருக்க அந்த ஆட்சியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் ஏன் இப்படியான ஒரு சந்திப்பு அதற்கு அவசியமாயிற்று?
அப்படியே அன்றாட பிரச்சினை பற்றி பேச வேண்டும் என்று உண்மையாகவே அரசு விரும்பி இருந்தால் அன்றாடம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அந்த வடக்கு கிழக்கு மக்களுடன் அல்லது அம்மக்களால் அமைக்கப்பட்ட மாகாணசபையுடனும் அல்லவா சந்தித்துக் கலந்துரையாடியிருக்க வேண்டும்.
அல்லது உண்மையாகவே புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து வடக்கு – கிழக்கு மக்களுக்கு ஏதேனும் செய்வதற்கு அரசு விரும்பி இருந்தால் வல்லமையுடன் இருக்கும் செயற்திறன் மிக்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்களை அல்லவா தொடர்பு கொண்டிருக்கவேண்டும்.
வடக்கு- கிழக்கு மக்களுக்கு என்று சில ஆயிரம் பவுண்டுகளை கூட புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்க வல்லமை இல்லாத ஒரு சில தனி நபர்களினால் நடத்தப்படும் உலகத் தமிழர் பேரவையை ஏன் அரசாங்கம் தெரிவுசெய்திருக்கிறது.
அல்லது சந்திப்பின் முடிவில் சுமந்திரனும் சுரேந்திரனும் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டபடி சமூகங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதாகவோ அன்றி உண்மையாகவே தமிழ் மக்களின் நலன் நோக்கில் நடைபெறும் ஒரு இரகசிய சந்திப்பாக வைத்துக்கொண்டால் கூட ஏன் இப்பொழுதுவரை இருந்துவிட்டு அடுத்து எந்த கட்சி சிங்கள தேசத்தில் ஆட்சியமைக்கும் என்பதே தெரியாத நிலையில் இதை ஏன் மேற்கொள்கின்றார்கள்?
ஆகவே இந்த கேள்விகளுக்குள்ளேயே அவற்றுக்கான பதிலும் பொதிந்திருக்கிறது. எவ்வாறு, ஐ. நா விசாரணை அறிக்கையை அரசாங்கம் கையாளப்போகிறது என்பதிலேயே அரசாங்கத்தின் தேர்தல் வெற்றி தங்கி இருக்கிறது. இதனை குறி வைத்தே அரசாங்கம் தனது கைகளை நகர்த்தி வருகிறது.
போர்க் குற்ற விசாரணை அறிக்கையையும் அதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் மழுங்கடிப்பதற்கு சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தன்னுடன் பங்காளிகளாக ஆக்க வேண்டும் என்பது அரசின் ஒரு உபாயம்.
அதேசமயம், மனித உரிமைகள் சபையை குறி வைத்து செயற்படும் தீவிரமான புலம் பெயர் அமைப்புக்களை அவற்றின் செயற்பாடுகளில் இருந்து திசைதிருப்ப வேண்டும் என்பது மற்றொரு உபாயம்.
இந்த இரண்டு உபாயங்களினதும் ஒரு நடவடிக்கையாகவே அரசாங்கம் இந்த லண்டன் சந்திப்பை சில வெளிநாட்டு ராஜதந்திரிகளை பயன்படுத்தி கையாண்டிருக்கிறது. இதில் நம்மில் சிலர் விட்டில் பூச்சிகளாக அல்லது கருணாக்களாக செயற்பட்டுள்ளனர்.a
-லோ. விஜயநாதன்-