இலங்கை அரசாங்கத்தால் பொது இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டுள்ள வைஃபை எனப்படுகின்ற கம்பில்லாத இணையத் தொடர்பு சேவையானது நாட்டிலேயே யாழ்ப்பாணத்தில் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கண்டறியப்பட்டிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்ற காலத்திலேயே யாழ்ப்பாணத்து மக்கள் இணையத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர், இணையப் பயன்பாட்டில் இருந்து வந்த கட்டுப்பாடுகள், முட்டுக்கட்டைகள் என்பன தளர்த்தப்பட்டு அதற்கான வாய்ப்பும் வசதியும் அதிகரித்திருப்பதும், கம்பியில்லாத இலவச இணைய இணைய சேவையை மக்கள் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதலாம் என்றும் தவரூபன் குறிப்பிட்டார்.
“உரிய முன்னெச்சரிக்கைகள் தேவை”
இத்தகைய அதிகரித்துள்ள இணையத் தொடர்புப்பாவனை ஒருபக்கம் தகவல் தொடர்புத்துறையில் நல்லபல முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை நிகழ்த்திவந்தாலும், யாழ்ப்பாண பிரதேச இளைஞர் யுவதிகள் மத்தியில் சமூகவிரோதச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்த இணையம் பெரிதும் உதவியிருக்கிறதோ என்கிற கவலைகளும் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பின்னணியில் இலங்கை அரசாங்கம் கம்பியில்லா இலவச இணைய சேவையை மேலும் நாடு தழுவிய அளவில் விஸ்தரிக்கும்போது, அதன் எதிர்மறை சமூக பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்கிற கவலைகளை போக்க அரசாங்கம் முயலவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே இணைய பரவலின் எதிர்மறை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகள், மாணவர்கள் மத்தியில் இணையத்தின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நன்மையான நோக்கங்களுக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி வழி நடத்த வேண்டும் என்று தவரூபன் தெரிவித்தார்.
இது, கல்வி நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், சமூக முக்கியஸ்தர்கள் உட்பட பல தரப்பினருடையதும் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் தங்கராஜா தவரூபன் வலியுறுத்தினார்.
தங்கராஜா தவரூபன் பேட்டி…