“ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள்.
அதனை விடுத்து இவர்களைக் கைது செய்து, மீண்டும் பிணையில் வெளியில் விடுவதால் தான், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்ந்து எமது நாட்டில் நடைபெற்ற வண்ணமே இருந்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்களினால் இந்நாட்டிலுள்ள தாய்மார்களுக்கு இனிமேலும், இவ்வாறு தங்கள் பெண்பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்தும் நிலைமைகள் தொடராதிருக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள்.” என்று கண்ணீர் விட்டவாறு சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
“மானிடராய்ப் பிறந்திடவே மா தவம் செய்திடனும்” என்று பாடிச் சென்றார் பாரதி. ஆனால் நடைமுறையில் பெண்கள் தமது சுய மதிப்பையும், கௌரவத்தையும் இழந்து, அன்றாடம் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அற்ப பொருளாக மாறி வருகின்றார்கள்.
பால் வடியும் குழந்தை முதல் தோல் சுருங்கிய வயதான பாட்டி வரை எவ்வித வயது வித்தியாசமின்றி காமவெறி கொண்ட காடையர்களிடம் அன்றாடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.
அதுவும் பள்ளி வாழ்வில் சுதந்திரமாய் துள்ளித் திரியும் பசுந்தளிர்கள் பல, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் சக்கைத்துண்டுகளாய் ஆங்காங்கே காடுகளிலிருந்தும், புதர்களிலிருந்தும் கண்டெடுக்கப்படுகின்றார்கள்
அந்த வகையில் இவ்வாரம் “குற்றம்” பகுதியில் இடம்பெறுவது கடந்த வாரமளவில் புத்தளம், தில்லையடிப் பகுதியில் 7 வயதே நிரம்பிய சிறுமியொருவர் காம வெறி கொண்ட அரக்கன் ஒருவரினால் கடத்தப்பட்டுத் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்ட சம்பவமாகும்.
அன்று ஜூன் முதலாம் திகதி, புத்தளம் பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட அனுஷா சன்ஜூவனி (வயது 40) மாதம்பே பிரதேசத்திலிருக்கும் தனது வயதான தாயைச் சென்று பார்த்து விட்டு மறுபடியும் புத்தளம் செல்லும் நோக்கத்துடன், 10.45 மணியளவில் கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிச் செல்லும் புகையிரத்தில் ஏறினாள்.
அந்தப் புகையிரதம் சரியாக பி.ப. 12.30 மணியளவில் புத்தளம் புகையிரத நிலையத்தை அண்மித்தது.
எனவே, புத்தளம் புகையிரத நிலையத்தில் இறங்கும்போது எவ்வித பதற்றமுமின்றி இறங்குவதற்காக, கொண்டு வந்த பொருட்களை எல்லாம் எடுத்து தனதருகில் வைத்துக் கொண்டு ஆயத்தமானாள்.
அதன்பின் எதிர்பாராத விதமாக யன்னல் கதவின் ஊடாக வெளியில் அவதானிக்கும் போதே புத்தளம் புகையிரத நிலையத்தை அண்மித்த தில்லையடி காட்டுப்பிரதேசத்தில் அனுஷாவுக்கு நன்கு தெரிந்த டோனி என்பவரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரை இனம் தெரியாத நபரொருவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காட்டுப் பிரதேசத்துக்குள் செல்வதை அவளால் அவதானிக்க முடிந்தது.
எனவே “இச்சிறுமி எதற்காக இந்த நபருடன் செல்கின்றாள்? அதுவும் இந்த அடர்ந்த காட்டுச் பகுதிக்குள் ஏன் செல்ல வேண்டும்? ” என்று அவளுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்துக்கு உடனே விடை காணும் முகமாக புகையிரத வண்டியிலிருந்தவாறே அச்சிறுமியின் தாய்க்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்தினாள்.
“ஹலோ! நான் அனுஷா கதைக்கின்றேன். உங்களுடைய இரட்டைக் குழந்தைகளில் ஒருவரை தில்லையடி பிரதேசத்திலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இனம் தெரியாத நபரொருவர் அழைத்துக் கொண்டு செல்வதைக் கண்டேன்” என்று மேற்படி தகவலை அச்சிறுமியின் தாய்க்கு அனுஷா தெரிவித்தார்.
சிறுமியின் தாய்க்கு வழமைக்கு மாறாக இதயம் படபடக்க ஆரம்பித்தது. உடனே அவருடைய கணவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இது தொடர்பாக அறிவித்தாள்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை தனது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் 4 கிலோ மீற்றர் தொலைவிலிருந்த சிறுமி கல்வி கற்கும் அநாகரிக தர்மபால வித்தியாலயத்தை வந்தடைந்தார்.
அதன்பின் பாடசாலை வளாகத்தில் வழமையாக தன்னைக் கண்டதும் “அப்பா” என்று அழைத்தவாறே துள்ளிக் குதித்து ஒடி வரும் தனது ஆசை மகளின் முகத்தை காண விழைந்தார்.
எனினும் அங்கு அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருந்தது. பாடசாலையில் எங்கு தேடியும் சிறுமி இருக்கவில்லை.
எனவே அனுஷா தனது மனைவிக்கு கூறிய விடயம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் எண்ணியவாறு தில்லையடிக் காட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்.
அவர் அங்கு செல்லும் போதே அனுஷா, புத்தளம் புகையிரத நிலையத்தில் இறங்கி மேற்படி சம்பவம் தொடர்பாக அனைவரையும் தெளிவுபடுத்தி, அங்கு அழைத்து வந்திருந்தார்.
அதுமட்டுமின்றி, இப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வீதிப் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்து இப்பிரதேசத்தை வந்தடைந்தனர்.
அனைவரும் இணைந்து சிறு, சிறு குழுவினராகப் பிரிந்து காட்டுப் பிரதேசத்தில் சிறுமியைத் தேட ஆரம்பித்தனர்.
அப்படியிருக்கையில், அன்று மக்கள் ஒன்று திரண்டு இக்காட்டுப்பிரதேசத்துக்குள் பிரவேசித்தது, சிறுமிக்கு எவ்வித ஆபத்தும் நேர முன்னர் சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்துடனேயே ஆகும்.
அதுமட்டுமின்றி, அனைவருமே குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்று தத்தமது இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தித்துக்கொண்டனர்.
இதன்போது அனுஷாவும், சிறுமியின் தந்தையும் இணைந்து வேறுபக்கமாக சிறுமியைத் தேடினார்கள்.
மிக நீண்ட தேடுதலின் பின்னர் தேடுதலில் ஈடுபட்ட மக்களில் ஒரு குழுவினர் காட்டுப்பகுதியின் ஒரு மூலையிலிருந்து “குழந்தை இங்கே இருக்கின்றது” என்று பலத்த குரலில் சத்தமிட்டனர்.
இதனை தொடர்ந்து காட்டுக்குள் இருந்த சிறிய புதரொன்றில் மறைந்திருந்த சிறுமி தன் தந்தையைக் கண்டு “அப்பா, அப்பா” என்று பலத்த குரலில் கத்தியவாறே வெளியே வந்தது.
சிறுமியைக் கண்டதும் தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. முள், புதர், கல் என்று எதுவுமே பார்க்காது ஒடோடிச் சென்று சிறுமியை அள்ளி அணைத்து, தன் அன்பையும், வாஞ்சையையும் வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, அனுஷாவுடன் தேடுதலில் ஈடுபட்ட மக்களும் சிறுமியைக் கண்டவுடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இத்துடன் சிறுமியைத் தேடும் பணி நிறைவடைந்து விட்டது என்றே பலரும் எண்ணினார்கள். எனினும், அங்கு வந்திருந்த பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகள் சிறுமியைக் கடத்தி வந்தவர் யார் என்பது தொடர்பாக அறிய விழைந்தனர்.
அதன்படி ஒன்றுமே அறியாத சிறு பாவையொன்றை தனது அற்ப தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் கடத்தி வந்திருக்க வேண்டுமென்றும், சந்தேக நபர் இக்காட்டுப்பிரதேசத்தில் தான் எங்காவது ஒளிந்திருக்க வேண்டும் என்றும் பொலிஸார் சந்தேகித்தனர்.
எனவே பொது மக்களின் உதவியுடன் காட்டுப்பகுதியில் அந்த படுபாதகனைத் தேடி அலைய ஆரம்பித்தனர்.
பெரிய தடிகள், தலைக் கவசங்கள், செங்கற்கள் போன்றவற்றை ஆண்களும், பெண்களுமாக கையில் எடுத்துக் கொண்டு சந்தேக நபரை வலை விரித்து காட்டின் மூலை மூடுக்கெல்லாம் தேடினார்கள்.
இவ்வாறு சுமார் 1 மணித்தியாலங்களுக்கு மேல் தேடுதல் தொடர்ந்த நிலையில் திடீரென, பெண்ணொருவர் முட்கள் நிறைந்த புதரொன்றுக்குள் எட்டிப் பார்த்து “இங்கே ஒரு செருப்பு ஜோடியுள்ளது. அவன் இங்கே தான் எங்காவது இருக்க வேண்டும்” என்று பலத்த குரலில் கத்தினார்.
எனவே இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர் இங்கேதான் எங்காவது இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார்கள். அதன் விளைவாக அனைவருடைய கவனமும் காட்டுப் பிரதேசத்திலிருந்த நீர் நிலையின் மீது திரும்பியது.
அந்த நீர் நிலை ஆழமற்ற ஆற்றுப்பகுதியாகவிருந்தபடியால் மக்கள் அனைவரும் கையில் எடுத்து வந்திருந்த பலத்த தடிகளுடன் ஆற்றுக்குள் குதித்தனர்.
அதுமட்டுமின்றி ஆற்றுத் தண்ணீரை தடியால் அடித்தும், துளாவியும் சந்தேக நபரைத் தேடியுள்ளனர். இதன்போது ஒருவர் தண்ணீரைத் தடியால் பலமாகத் தட்டிய போது அது சந்தேக நபரின் தலையில் பட்டுள்ளது.
எனவே தண்ணீரினுள் மறைந்திருந்த சந்தேக நபர் வலி தாங்க முடியாமல் வெளியில் வந்துள்ளான். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கையிலிருந்த செங்கற்களாலும், தடிகளாலும், தலைக் கவசங்களாலும் சந்தேக நபரின் உடலைப் பதம் பார்க்க ஆரம்பித்தனர்.
அங்கு கூடியிருந்த பொலிஸாரால் கூட பொதுமக்களை கட்டுப்படுத்த இயலாமல் போனது.
இச்சந்தேக நபர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அப்துல் ஜவ்பர் மொஹமட் தவ்பீக் என்ற புத்தளம், பாலாவிப் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே மேற்படி குழந்தையை ஜுஸ் பெக்கட்(pakect) ஒன்றினை வாங்கிக் கொடுத்து, ‘அம்மா கூட்டி வரச் சொன்னார்’ என்று கூறியே ஏமாற்றிக் கடத்தி சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி குறித்த நபர் 2008 ஆம் ஆண்டு சிறுமியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக சிறைக்குச் சென்று சம்பவ தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முதல் தான் விடுதலையாகியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தேக நபர் வீடுகளை உடைத்துத் திருடுவது ,வழிப்பறிக்கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவன்.
இச்சிறுமியின் குடும்பப் பின்னணி தொடர்பாக நோக்குமிடத்து, சிறுமியின் பெற்றோருக்கு இரட்டைக் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்களில் கடத்தப்பட்ட சிறுமி இரட்டைக் குழந்தைகளில் ஒருவராவார். சிறுமியின் தந்தைக்கு நிரந்தர தொழிலொன்றும் கிடையாது. ஒரு தோட்டத்தைப் பராமரித்து அங்கு அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து தனது குடும்பத்தை நடாத்தி வந்ததுடன், அத்தோட்டத்திலிருந்த சிறிய கொட்டிலிலேயே வசித்து வந்துள்ளனர்.
இருப்பினும் சிறுமியின் தந்தை இரு பெண் குழந்தைகள் மீதும் எப்போதும் எச்சரிக்கையாகவே இருந்து வந்துள்ளார்.
தினமும் முச்சக்கர வண்டியிலேயே பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.———————–
சம்பவம் இடம்பெற்ற தினமான 2015.06.01 ஆம் திகதி பாடசாலையில் தான நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதனால் பாடசாலை நேர காலத்தோடு முடிவடைந்தது. இந்த நிலையில் குறித்த சிறுமி தமது முச்சக்கர வண்டி வரும் வரை வாசலில் காத்திருந்த போதே இவ்வாறு சந்தேக நபரால் கடத்தப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த 2ஆம் திகதி புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மீண்டும் ஜூன் மாதம் 10ஆம் திகதி ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இதன்போது இக்கடத்தல் சம்பவத்தை கண்டித்து, புத்தளம் நீதிமன்றத்துக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்பாட்டமொன்றை மக்கள் நடத்தினர்.
அதுமட்டுமின்றி, இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு ஜனாதிபதி தலையிட வேண்டும் எனக் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்ததுடன்,
“சிறுவர் உலகைப் பாதுகாப்போம்” “அச்சமின்றி சுதந்திரமாக கற்பதற்கு வழி ஏற்படுத்துங்கள்”, “காம வெறியர்களிடமிருந்து சின்னஞ் சிறு மலர்களைப் பாதுகாப்போம்”, “அனைத்து சிறுவர்களுக்குமாக இந்தக் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டாம்” போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டோர் காணப்பட்டனர்.
சிறுமியின் தாயார் இக்கடத்தல் சம்பவம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்
இவ்வாறான காடையர்களை தயவு செய்து வெளியில் விட வேண்டாம். ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள்.
அதனை விடுத்து இவர்களை கைது செய்து மீண்டும் பிணையில் வெளியில் விடுவதால் தான் இவ்வாறான குற்றச்செயல்கள் தொடர்ந்து எமது நாட்டில் நடைபெற்ற வண்ணமே இருந்து வருகின்றன.
இது போன்ற சம்பவங்களினால் இந்நாட்டிலுள்ள தாய்மார்களுக்கு இனிமேலும் இவ்வாறு தங்கள் பெண்பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்தும் நிலைமைகள் தொடராதி ருக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள்.” என்று கண்ணீர் விட்டவாறு கூறினார்.
எனவே, எது எவ்வாறாயினும், பெண்பிள் ளைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உணர்வுரீதியாகவும், விழுமியரீதி யாகவும் ஒவ்வொரு மனிதனுள்ளும் தோன்ற வேண்டுமென்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.
– வசந்தா அருள்ரட்ணம்