பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது.

மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள்.

இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து கடந்த காலங்களை போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிடலாம், சில வேளைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடையே சில இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் ஒன்றாகவும் போட்டியிடலாம்.

இம்முறை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட உள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மற்றும் இடதுசாரிகளும் போட்டியிட உள்ளன.

வடக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஈ.பி.டி.பி போட்டியிடலாம். இல்லையேல் ஈ.பி.டி.பி வீணைச்சின்னத்தில் தனித்து போட்டியிடலாம். பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சின்னத்திலேயே ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகம் இருக்கிறது.

அது போல கிழக்கில் பிள்ளையான் குழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

20ஆவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் தொகுதி மற்றும் மாவட்ட ரீதியான கலப்பு தேர்தல் ஒன்றே நடத்தப்படும். மாவட்ட ரீதியான தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட தொகை வேட்பாளர்களின் பெயர் பட்டியிலை சமர்ப்பிப்பது கட்சிகளுக்கு இலகுவான விடயம்.

ஆனால் தொகுதி ரீதியான தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு கட்சியும் ஒருவரை நியமிக்க வேண்டும், அங்கே அந்த வேட்பாளரின் தனிப்பட்ட ஆளுமை, செல்வாக்கு, அவரின் நடத்தை, என்பனவும் வெற்றியை தீர்மானிப்பதாக அமையும்.


கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இம்முறையும் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றனர். உதாரணமாக யாழ். மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா 1990ஆம் ஆண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக 25வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்,

அவர் 25வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால் மக்கள் பெற்ற நன்மை என்ன? எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது அவர் இன்னுமொருவருக்கு இடம்கொடுத்தால் என்ன?

சுரேஷ் பிரேமச்சந்திரன் 1989ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 16வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் கூட தேர்தலில் இருந்து ஒதுங்கி இன்னொருவருக்கு இடம்கொடுப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?


சிறிதரன்

கிளிநொச்சியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இருக்கின்றார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செய்ததும், தமிழ்தேசியம் பேசி புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணம்சேர்த்ததும், நாட்டில் நடக்கும் கோயில் திருவிழாக்கள் மற்றும் பாடசாலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தன்னை முன்னிறுத்தி படம் எடுத்து ஊடகங்களுக்கு காட்டி நானும் தமிழ்தேசியவாதிதான் என்று பறைசாற்றிக் கொண்டு…. பதவி சுகங்களை அனுபவித்ததை தவிர, இவரால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைதான் என்ன?? கிளிநொச்சி மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன?

விநாயகமூர்த்தி

யாழ். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் விநாயகமூர்த்தி 15ஆண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். யாழ். மாவட்டத்தில் இப்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியாது.

இவர் சில வேளைகளில் தான் எந்த கட்சியில் இருக்கிறேன் என்பது கூட தெரியாது நடந்து கொண்டதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது. விநாயகமூர்த்தி போன்ற வாக்குமாறி போய் உள்ளவர்களை இனிமேலும் வேட்பாளர் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் சேர்ப்பதை போன்ற முட்டாள்தனம் வேறு எதும் இருக்க முடியாது.


ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தா விடுதலைப்புலிகள் செய்த புண்ணியத்தால் 1994ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 21வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார், இந்த 21வருடகாலத்தில் டக்ளஸ் தனிப்பட்ட சுகபோகங்களை அனுபவித்தாரே ஒழிய யாழ். மாவட்ட மக்கள் பெற்ற நன்மைதான் என்ன?


செல்வம் அடைக்கலநாதன்
வன்னிமாவட்டத்தை பொறுத்தவரை செல்வம் அடைக்கலநாதன் 2000ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 15ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். அவருக்கு மூன்று தவணைக்கான ஓய்வூதியம் கிடைக்க உள்ளது.

எதிர்வரும் தேர்தலில் மன்னாரில் ஒரு புதிய இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவருக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும். இந்த 15வருடகாலத்தில் மக்களுக்கு செய்ய முடியாமல் போனதை எதிர்காலத்தில் செய்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் 2001ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 14ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். வெறும் அறிக்கைகளை விடுவதை தவிர இவர் செய்த சாதனைதான் என்ன? வவுனியா மாவட்டத்தில் அல்லது சிவசக்தி ஆனந்தனை விட்டால் வேறு திறமையும் ஆற்றலும் கொண்ட ஒருவர் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் 1977ஆம் ஆண்டு முதல் சம்பந்தன் 21ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். காடு வா வா என்று அழைக்கும் இந்த வயதிலும் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடனேயே தற்போதும் சம்பந்தன் உள்ளார்.

வடக்கு கிழக்கில் திருகோணமலை மிக முக்கியமான மாவட்டமாகும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் திருகோணமலை மாவட்டம் தமிழர்களிடமிருந்து பறி போய்க்கொண்டிருக்கிறது.

இதை தடுப்பதற்கு சம்பந்தன் என்ன செய்தார் என்ற கேள்வியை எழுப்பினால்…. சிங்க கொடியை தூக்கி ஆட்டியதையும் சிறிலங்கா சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதையும் தவிர வேறு எதைத்தான் செய்தார்.? பிரிக்க முடியாத ஒரே நாட்டிற்குள் ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு என்ற வாய்ப்பாட்டை சொல்லி சிங்கள தேசத்திற்கு தனது விசுவாசத்தை காட்டியதை தவிர வேறு எதைத்தான் அவர் செய்தார்?

சம்பந்தனை விட்டால் திருகோணமலை மாவட்டத்தில் ஆற்றல் உள்ள வேறு தமிழர்கள் யாரும் இல்லையா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்வராசா 1994ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 12வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். வெறும் வீரவசனங்களை மேடையில் பேசுவதை தவிர அவர் செய்த சாதனை வேறு எதுவும் கிடையாது. பட்டிருப்பு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தவதாக கூறும் இவரால் பட்டிருப்பு தொகுதி அடைந்த நன்மைகள் தான் என்ன?

கல்லாறு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் கல்விமான்கள், துறைசார் திறமையாளர்கள், சமூகசேவையாளர்கள் என இளைய தலைமுறையினர் பலர் உள்ளனர். செல்வராசா போன்றவர்கள் இளைய தலைமுறையினருக்கு தாம் ஒதுங்கி கொண்டு புதியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். 1994ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இவர் 2000ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்விஅடைந்தார்.

பின்னர் நிமலன் சௌந்தரராஜன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு செல்வராசா நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் செல்வராசாவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் அவரை ஒதுக்கி வைத்திருந்தனர்.

பின்னர் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் செல்வராசாவுக்கு மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்தது. 12வருடகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அனுபவித்த சுகபோகங்கள் போதும் என்ற பெருமனத்துடன் செல்வராசா போன்றவர்கள் ஒதுங்கி புதியவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும்.


அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அரியநேத்திரன் 2004ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறாத போதிலும் அத்தேர்தலில் வெற்றி பெற்ற இராஜநாயகம் விடுதலைப்புலிகளின் வற்புறுத்தலில் இராஜினாமா செய்ததை அடுத்து அந்த இடத்திற்கு அரியநேத்திரன் நியமிக்கப்பட்டார். பின்னர் விடுதலைப்புலிகளால் இராஜநாயகம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2004ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 11ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அரியநேத்திரன் அந்த மாவட்டத்திற்கோ அல்லது அவர் பிரதிநிதித்துவ படுத்தும் படுவான்கரை பிரதேசத்திற்கோ குறிப்பிட்டு சொல்லக் கூடியவாறு எதனையும் செய்யவில்லை.

11ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அவர் பெற்ற சுகபோகங்களை தவிர படுவான்கரை மக்களோ அல்லது மட்டக்களப்பு மக்களோ எந்த நன்மையையும் பெற்றது கிடையாது. இரு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அரியநேத்திரனுக்கு போதுமான ஓய்வூதியம் கிடைக்கலாம். எனவே எதிர்காலத்தில் படுவான்கரையில் உள்ள ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அவர் ஏன் வழிவிடக்கூடாது?


யோகேஸ்வரன்
மட்டக்களப்பின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் 2010ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 5ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்து இளைஞர் பேரவை தலைவராகவும் ஆலய பூசகராகவும் இருக்கும் அவர் ஒரு பிரமச்சாரி, அவர் கூட இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கி கல்குடா தொகுதியில் ஆற்றல் மிகுந்த ஒருவருக்கு வழி விடுவதே சிறந்ததாகும்.

கடந்த மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை புறக்கணித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் போட்டியிட்ட இக்கட்சி யாழ் மாவட்டத்தில் 6362 வாக்குகளையும் திருகோணமலை மாவட்டத்தில் 1182 வாக்குகளையும் பெற்றிருந்தது.

இம்முறை இக்கட்சி யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய வடகிழக்கு மாகாணம் முழுவதும் போட்டியிட உள்ளது. தொகுதி ரீதியான தேர்தல் நடத்தப்பட்டால் கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி வெற்றி பெறுவது இயலாத காரியம்.

ஆனால் தமிழ் மக்களின் வாக்கைப்பிரித்து ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக்கொடுக்க தமிழ் காங்கிரஷ் உதவலாம்.

யாழ்ப்பாணம் வன்னி மாவட்டங்களில் கூட தொகுதி ரீதியான தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் போன்ற கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்பு அரியதாகவே இருக்கும். மாவட்ட ரீதியான தேர்தல் நடத்தப்பட்டால் சில வேளைகளில் ஒரிரு ஆசனங்களை இக்கட்சி பெறலாம்.

இந்த வேளையில் வாக்களிக்கும் மக்கள் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

1. 10 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தால் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

2. மக்களை ஏமாற்றும் வெறும் வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சு சுகபோகங்களை அனுபவிப்பவர்களை மக்கள் நிராகிக்க வேண்டும்.

3. கடந்த காலங்களில் ஆயுத வன்முறைகளில் ஈடுபட்டு மக்களை கொலை செய்த ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களையும் இதற்குள் அடக்க வேண்டும்.

4. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வருடம் ஒன்றிற்கு சராசரியாக 32இலட்சம் ரூபாவை வருமானமாக பெறுகிறார். அது தவிர ஒரு கோடி ரூபா பெறுமதியான வாகனத்தை பெறுகிறார். எனவே மாதாந்தம் அவர் சராசரியாக இரண்டு இலட்சம் ரூபாவை பெறுகிறார். அதில் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவை பொதுநலத்திட்டங்களுக்கு வழங்குவேன் என உறுதியளிப்பவர்களையே வேட்பாளர் பட்டியலில் கட்சிகள் இணைக்க வேண்டும். அவ்வாறு உறுதியளிப்பவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழருக்கான கட்சி என்ற அடையாளத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர். மக்களின் இந்த எண்ண ஓட்டத்தை தமக்கு சாதாகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றன. சாகும் வயதில் உள்ள சம்பந்தனும் 25வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாவை, சுரேஷ் அல்லது செல்வம் போன்றவர்களுக்கு தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்ற எழுதப்படாத சட்டத்தை எதிர்காலத்தில் மக்கள் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகள் பெறப்பட வேண்டும் என்பது நிராகரிக்கப்பட முடியாது என்பதற்காக சிங்க கொடியை தூக்கி பிடிக்கும் சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதன் மூலம் அதனை பெறலாம் என நினைப்பது முட்டாள்தனமாகும். இந்த முட்டாள்தனங்களிலிருந்து மக்கள் மீள வேண்டும்.

தமிழ் அரசியல் கட்சிகளின் போக்கையும் முடிவுகளையும் மக்களே தீர்மானிக்கின்ற காலம் வர வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version