நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கை இன்று (15) பரிசீலனைக்கு வந்தபோது சந்தேகநபர்களை 1 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆள் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதிபதி சரோஜினி குசலா வீரவர்த்தன உத்தரவிட்டார்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடுமாறு நீதிபதி சந்தேகநபர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடுவல நீதவான் நீதிமன்றால் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் மேல் நீதிமன்றின் பிணை உத்தரவு கடுவல நீதவான் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னரே பசில் ராஜபக்ஷ விளக்கமறியலில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தாவின் தந்திரோபாய நகர்வு – இந்தியன் எக்ஸ்பிரஸ்
15-06-2015
பாதுக்கவில் உள்ள பௌத்த விகாரையில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கோத்தாபய ராஜபக்ச, தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், இது அவரது ஒரு தந்திரோபாய நகர்வு என்று தெரிவித்த்தாக இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
“தனது சகோதரரான மகிந்த ராஜபக்சவை வெற்றி பெற வைக்கும் பெரியதொரு இலக்கை மனதில் கொண்டு அவர் ஒதுங்கியிருக்கத் தீர்மானித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதன் மூலம், ராஜபக்ச குழுவுக்கு ஆதரவாக நாடு முழுவதிலும் சுதந்திரமாக பரப்புரை மேற்கொள்ளலாம்.
இவர் மிகப் பிரபலமான இரண்டாவது தலைவர் என்பதுடன் இவரது பரப்புரை எல்லா தொகுதிகளிலும் தேவைப்படுகிறது.
இரண்டாவதாக, தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதன் மூலம், ராஜபக்ச குழுவுக்குள் பிளவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கொழும்பு மாவட்டத்தில் ராஜபக்ச அணியில் பல முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கோத்தாபய ராஜபக்சவும் களமிறங்கினால், அவர்களுடன் விருப்பு வாக்குகளுக்காக மோத நேரிடும். அதுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, கோத்தாபய ராஜபக்ச, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்க கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.
ராஜபக்ச ஆட்சியமைத்தால், அவர் அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.