மாணவி வித்தியா படுகொலை தொடர்பான மரண விசாரணை களின் போது சாட்சியமளித்த வித்தியாவின் தாயார் சரஸ்வதி, சகோதரன் நிசாந்தன் ஆகியோர் சாட்சிய மளிக்கையில் நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்ததால் பெரும்சோகமாக மன்று காட்சியளித்தது.
இந்த நிலையில், சாட்சியமளித்த பின்னர் நினைவிழந்த வித்தியாவின் தாயார் சரஸ்வதி நீதிமன்ற ஓய்வறைக்குள் ஓய்வெடுக்கச் செய்யப்பட்ட நிலையில் சாட்சிக்கூண்டுக்குள் வைத்து நினைவிழந்து பின் னர் மீண்டும் சாட்சியமளிக்கையில் நெஞ்சுவலி ஏற்பட்ட சகோதரன் நிசாந்தன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
நெஞ்சு வலி காரணமாக நீதிமன்றிலிருந்து உடனடியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிஸாந்தன்.
அங்கிருந்து அம்பியூலன்ஸ் வண்டியூடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரின் நிலை தேறி வருவதாக யாழ். வைத்தியசலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வித்தியாவின் படுகொலை தொடர்பிலான மரணவிசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன் போது வித்தியாவின் தாயார் சரஸ்வதி , வித்தியாவின் அண்ணன் நிஸாந்தன் , உறவினரான கார்திக் , சட்ட வைத்திய அதிகாரி மயூரன் , ஊர்காவற்றுறை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கியூ.ஆர்.பெரேரா , ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி காமினி ஜயவர்தன மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி நிஸாந்த டீ சில்வா ஆகியோர் மரண விசாரணை சாட்சியங்களை முன்வைத்தனர்.
சாட்சியங்களை சட்ட மா அதிபர் சார்பில் பிரசன்னமாகியிருந்த சட்ட வாதி குமார் ரட்னம் நெறிப்படுத்தினார்.
எனக்கு மூன்று பிள்ளைகளில் இளையவளே வித்தியா. மூத்த மகள் வவுனியாவில் பல்கலைக்கழகத்தில் கற்கிறாள். மகன் என்னுடன் இருக்கின்றான். அவவே குடும்பத்தைக் கவனிக்கின்றான்.
கடந்த 2015.05. 13ஆம் திகதி புதன்கிழமை வழமை போன்றே வித்தியா பாடசாலைக்கு சென்றாள். பல சமயங்களில் வித்தியாவை அவள் அண்ணன் சிவலோகநாதன் நிஷாந்தன் பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது வழமை.
எனினும் அன்று காலை நிஷாந்தனுக்கு அவசர வேலையொன்று இருந்ததால் அவரால் தனது தங்கையை பாடசாலைக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை.
இந் நிலையில் காலையில் வீட்டிலிருந்து தனது சைக்கிளில் பாடசாலைச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை. மாலை வரை காத்திருந்து நாமும் சென்று விசாரித்தோம். பலன் எதுவும் இல்லை. (அளுகின்றார்…)
சட்டவாதி குமார் : அதன்பின்னர் என்ன செய்தீர்கள்?
சரஸ்வதி: இரவானதும் பயம் அதிகரிக்கவே நாம் பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டோம்.
சட்டவாதி: அதன்பின்னர் என்ன நடந்தது?
சரஸ்வதி: காலையில் நானும் மகனும் கார்திக்கும் மீண்டும் வித்தியாவை தேடி சென்றோம்.
சட்டவாதி: எங்கு சென்றீர்கள்?
சரஸ்வதி:அவள் வழமையாக பாடசாலை செல்லும் வழியிலேயே தேடிச் சென்றோம்.
( கண்ணில் நீர் கசிய பதில் கூறுகின்றார்)
அரச சட்டவாதியும் சிறிது நேரம் தாமதித்து தமது கேள்விகளைத் தொடர்ந்தார்.
அப்போது தான் காட்டுப்பகுதிக்குள் மகன் திடீரென சென்றான். அங்கு வைத்து அவன் எதையோ கண்டு சத்தமாக கத்தினான்.
நாங்கள் வளத்த நாய் பாதணியொன்றை தூக்கி வரவே அதனைக் கண்டே மகன் காட்டுக்குள் சென்றான்.
அங்கு சென்று அவன் கத்தியதும் நாம் என்ன நடந்தது என்பதை அறியாது ஓடிச் சென்றோம். அப்போது தான் மகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டோம். என்று கூறியவாறே விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்.
இதனையடுத்து தாயின் சாட்சியத்தை பதிவு செய்வதை முடித்துக் கொண்ட நீதிவான் அவரை நீதிமன்ற பார்வையாளர் பகுதிக்கு அனுப்பினார்.
இதன் போது அங்கு சென்ற தாயார் கஷ்டத்தை சகிக்க முடியமல் சத்தமாகவே அழ ஆரம்பித்தார்.)
இதனையடுத்து அருகில் இருந்த மற்றொரு பெண்ணின் தோழில் சாய்ந்தவாறே மயக்கமுற்று விழுந்தார் உடனடியாக சிறைச்சாலை பெண் ஊழியர் ஒருவரும் பிறிதொரு பெண்ணும் சேர்ந்து சரஸ்வதியை நீதிமன்ற ஓய்வறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் வழக்கு முடியும் வரை ஓய்வில் வைக்கப்பட்டிருந்தார். சரஸ்வதி சட்சியமளிக்க நீதிவானுக்கு முன்னாள் விஷேடமாக கதிரையொன்று போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சகோதரன் சாட்சியம்
இதனையடுத்து சாட்சிக் கூண்டில் வித்தியாவின் அண்ணன் நிஸாந்தன் ஏற்றப்பட்டர். அவர் வழமையான சாட்சிப் பதிவு ஆரம்ப விடயங்கள் முடிந்ததும் சட்டவாதி குமார் ரத்தினாத்தின் நெறிப்படுத்தலுக்கு அமைய சாட்சியங்களை முன்வைத்தார்.
அன்று 2015.05.13 ஆம் திகதி தங்கை காணாமல்போனது முதல் நாம் தேடலை ஆரம்பித்தோம்.
மறு நாள் நாம் அவள் வழமையாக பாடசாலைக்கு செல்லும் வழியே தேடிச் சென்றோம். அப்போது அம்மா, கார்திக் ஆகியோர் என்னுடன் வந்தனர்.
எமது வளர்ப்பு நாயும் வந்தது. புங்குடு தீவு எட்டாம் வட்டாரப்பகுதியில் வைத்து திடீரென நாய் காட்டினுள் சென்று வெள்ளை நிற சப்பாத்து ஒன்றை கவ்விக்கொண்டு வந்தது.
நானே முன்னாள் சென்றுகொண்டிருந்தேன். பின்னால் அம்மாவும் கார்த்திக்கும் வந்தனர். இதனைக் கண்டு நான் காட்டுக்குள் சென்றேன்.
அங்கு சென்று பார்த்த போதே தங்கை மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த காட்சியைக் கண்டேன். எனக் கூறியவாறே சாட்சிக் கூண்டில் மயக்கமுற்று விழந்தார்.
உடனடியாக அருகில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் நிஸாந்தனை தாங்கினர். அவரை வெளியே கொண்டு சென்றனர். தண்ணீர் கொண்டு முகம் கழுவச் செய்தனர். தண்ணீரும் அருந்த கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிஸாந்தன் மீண்டும் சாட்சியமளிக்க மன்றினுள் வந்தார். இதன் போது தாய் சரஸ்வதி சாட்சியமளிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கதிரையிலேயே அவர் அமரச் செய்யப்பட்டார்.
சாட்சியமளிக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் அரச சட்டவாதி தங்கையின் சடலம் காணப்பட்ட முறையை நிஸாந்தனிடம் வினவவே அவர் நெஞ்சில் கைவைத்தவாறு சாய்ந்தார் பதில் சொல்ல முடியது அழுதார்.
உடனடியாக அவர் மன்றிலிருந்துழுதார். உடனடியாக அவர் மன்றிலிருந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந் நிலையில் அவ்விரு சாட்சியங்களையும் தொடர்ந்து உறவினரான கார்திக் , சட்ட வைத்திய அதிகாரி மயூரன் , ஊர்காவற்றுறை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கியூ.ஆர்.பெரேரா , ஊர்காவல்த்துறை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி காமினி ஜயவர்தன மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பொருப்பதிகாரி நிஸாந்த டீ சில்வா ஆகியோர் சாட்சியமளித்தனர்.