மும்பையில் குடித்து விட்டு கார் ஓட்டிய பெண் ஒருவர் சோதனைச் சாவடியில் பிடிபட்டதும், காரை பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்ததால், போலீசார் 2 மணி நேர போராட்டம் நடத்தி மீட்டனர்.
மும்பை ஒர்லி பகுதியை சேர்ந்த ஷிவானி பாலி (42). தனியார் நிறுவன அதிகாரி. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் மும்பை புறநகர் பகுதியான ‘கார்’ என்ற இடத்தில் நடந்த பார்ட்டியில் பங்கேற்ற ஷிவானி நன்றாக மது குடித்துள்ளார்.
பின்னர் காரை ஓட்டிக் கொண்டு ஒர்லியில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். பாந்த்ரா ரெக்லமேஷன் பகுதிக்கு கார் வந்ததும் சோதனைச் சாவடியில் போலீசார், ஷிவானியின் காரை நிறுத்தி பரிசோதித்துள்ளனர். அப்போது ஷிவானி மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காரை விட்டு இறங்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.
ஆனால் இறங்குவது போல பாவ்லா காட்டிய ஷிவானி, கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு காரை எடுக்க முயற்சித்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அதனை தடுத்துள்ளனர்.
இதனால் அதே பகுதியிலேயே காரை நிறுத்திய ஷிவானி, போலீசாரை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்துள்ளார்.
அதோடு காருக்குள்ளேயே இருந்து கொண்டு தொடர்ந்து சிகரெட்டுகளையும் புகைத்து தள்ள ஆரம்பித்தார்.
தொடர்ந்து பாந்த்ரா போலீஸ் நிலையத்துக்கு அவரை கொண்டு சென்ற போலீசார், ஷிவானி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கார் மற்றும் டிரைவிங் லைசென்சுகளை பறிமுதல் செய்ததோடு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நேரடியாக வந்து அபராதத்தை செலுத்த வேண்டுமென்றவும் போலீசார் அவரிடம் அறிவுறுத்தினர்.
ஆனால் நேற்று நீதிமன்றத்திற்கு ஷிவானி வரவில்லை. தொடர்ந்து ஷிவானிக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.