எனக்கு ஒரு கடையில பாத்திரங் கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கேல்ல.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது வாழ்வியல் யதார்த்தம். இந்த யதார்த்தத்திற்குள் இருந்த ஒரு நபர் தான் தற்போது 45 வயதாகும் முருகேசு இராசேந்திரம்.
2007க்குப் பின்னர் ஏ 9 பாதைக்கு கிழக்காக முற்றிலும் முரண்பட்ட நிலையில் யுத்த பொறிமுறை மாற்றம் கண்டு இராணுவத்தினர் தமது நடவடிக்கையை முழுவீச்சுடன் முன்னெடுத்தனர்.
இதன் உக்கிரத்தால் கிளிநொச்சி, பரந்தன் என அடுத்தடுத்து வெற்றி கொண்டவர்கள் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமே இருந்தனர்.
போரின் உக்கிரம் தாங்கமுடியாத பொது மக்கள் உடைமைகளையும் உறவுகளையும் உதறித்தள்ளி எங்காவது சென்று தமது உயிரையாவது பாதுகாத்துக் கொள்வோம் என்ற மனநிலையில் முல்லைத்தீவு நோக்கிச் சிதறிச்சென்றனர்.
இதன்போது ஏற்பட்ட அவலங்களும் இழப்புக்களும் வார்த்தைகளில் கூறமுடியாத நீறுபூத்த நெருப்பாகவே இன்றும் உள்ளது.
ஆம், கிளிநொச்சி மாவட்டம் கோரைக்கன்கட்டு குடியிருப்பு 2ஆம் கட்டை பரந்தனில் அழகிய மனைவி அன்பான 5 பிள்ளைகள் என நிறைவான வாழ்வொன்றை நடத்திக்கொண்டிருந்த முருகேசு இராசேந்திரம் யுத்தத் தின் உக்கிரத்தால் இடம்பெயர ஆரம்பித்தார்.
ஆங் காங்கே குடும்பத்தாருடன் தங்கியிருந்து கொடுமையான துன்பங்களுக்கு மத்தியில் நகர்ந்து சென்றவர் ஈற்றில் பரிதாபமாக விமான தாக்குதலுக்கு இலக்காகவேண்டிய அவலத்திற்குள் தள்ளப்பட்டார்.
அவர் இன்று தன் இழப்பையும் தாண்டி குடும்பத்தாரின் இருப்பை வேண்டி உதவி கேட்டு நிற்கிறார். தனது துன்பக் கதையுடன் …………
2008ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 29ஆம் திகதி இடம் பெயர்ந்து சென்ற நாங்கள் பசிக்களை தாகமெடுக்க ஓரத்தில குந்திருந்து சாப்பிடுவம் என்றபோது நிறைஞ்ச சனக்கூட்டத்தில எங்க இருந்து வந்ததென்றே தெரியது யமன் வடிவில வந்த கிபீர் என்ர 2 காலையும் தொடையோட பறித்து விட்டது.
கண்முன்னே கால்கள் பறந்தது தான் தெரியும். நீண்ட நேரத்துக்கு பின் கண்முழிச்சு பார்த்தா சுத்திவர காயக்காரர்கள். ஆஸ்பத்திரியை சுத்தி மரண ஓலங்கள். டாக்டர் யார்? நேஸ் யார் என்று தெரியாத வடிவில அவேன்ர உடுப்பே இரத்த வெள்ளத்தில இருந்தது.
திடுக்கிட்டு முழிச்சு பார்த்தேன். உணர்வு இருந்தது. எழும்ப முற்பட தொடைப்பகுதியின் சிறிய பாகம் பந்தம் கட்டியதுபோல் இரத்தம் தோய்ந்தபடி இருந்தது. உடனே மனுசி பிள்ளையை தேடினேன்.
ஒவ்வொருவராக என்னைப்பார்த்து தழுதழுத்த குரலில் அப்பா….. அப்பா…. என்ற சத்தம் மட்டும் வந்தது. கழுத்தை உயர்த்தி பார்த்தன்.
மனைவி கையில காயப்பட்டு கைமுழுக்க கட்டி இருந்தா ஒரு மகள் தலையில காயப்பட்டு தலை முழுக்க கட்டி முகம் எல்லாம் வீங்கி இருந்தாள்.
மற்ற மகள் உடம்பு முழுக்க காயப்பட்டு நான் படுத்திருந்த இடம் தள்ளி நான்காவதாக படுத்திருந்தா. மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால் அவர்கள் எங்கேயென்றே எமக்கு தெரியாமல் சிறிது காலம் ஆஸ்பத்திரியிலே இருந்தம். அதன் பிறகு ஓரளவு காயங்கள் மாற மாற முகாம்களுக்கு ஏத்தினார்கள்.
அவ்வாறு முகாமுக்கு போன நாங்கள் ஒரு வாறாக நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் பிள்ளைகளோடு இணைந்து கொண்டோம்.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையில். ஆனால் திருமணம் செய்த பின் கிளிநொச்சி மாவட்டம் கோரைக்கன் கட்டு குடியிருப்பு 2ஆம் கட்டை பரந்தனில்தான் குடும்பத்தோட வசித்து வருகிறேன்.
ஆரம்பத்தில கமத்தொழில் செய்து வாழத்தொடங்கிய நான் எனக்கு கிடைக்கும் பணத்தில் என் குடும்பத்தையும் பார்த்து இரு வீட்டு பெற்றோரையும் கவனித்துக் கொள்ளுமளவிற்கு வளம் இருந்தது.
மூன்றாவது மகன் இப்ப (17வயது) ஆரோகனம் உருத்திரபுரம் கொஸ்டல்ல இருந்து படிக்கிறார். அவருக்கு ஆரம்பத்தில எங்களோட (அம்மா, அப்பா) இருக்கத்தான் விருப்பம்.
ஆனால் அவரை வைத்திருந்து படிப்பிக்கவோ, சாப்பாடு கொடுக்கவோ எங்களிட்ட வழி இல்லை. எங்கட நிலைமையை அறிந்தே மகன் ஆரோகனத்தில் இருக்க சம்மதித்து விட்டார்.
கடைசி இரண்டு பெண் பிள்ளைகளும் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில தரம் 7 தரம் 9 படிக்கினம். எனக்கு இரண்டு காலும் இல்லாததால வேலைக்கு போகவோ அல்லது வீட்டில இருந்தேனும் குடும்பத்தை கவனிக்க முடியாத நிலையில இருக்கிறன்.
என்ர நிலையை கருத்தில் கொண்டு மனைவி இப்ப கரடிப்போக்கு சந்தியிலுள்ள பேக்கரி ஒன்றில வேலை செய்யிறா. காலை 6மணிக்கு போனால் மாலை 6 மணிக்கு வருவா.
மாதம் 9ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். தற்போது அவாக்கு கிபீர் குண்டுபட்டு கை பாதிக்கப்பட்டதில இப்ப வேலை செய்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கு. ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி போய் வாறா.
இவ்வாறான நிலையில் நான் இராப்பகலா யோசிப்பன். எனக்கு ஒரு கடையில பாத்திரங்கழுவுற வேலை கிடைச்சாலும் சரி இருந்தபடி கழுவி குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று போகாத சாப்பாட்டு கடையேயில்லை. வேலை கேட்காத ஆட்கள் இல்லை. ஆனால் வேலை ஒன்றும் கிடைக்கேல்ல.
இதனால் 2014 இல் பேப்பர்ல விளம்பரம் வந்தது. கிளிநொச்சி தொழில் நுட்பக் கல்லூரியில தொழில்நுட்ப பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக இருந்தது.
நான் ஆரம்பத்தில் உள்நுழையும் போது எனக்கு வயது 44 அங்க போனால் என்ற மகள் வயசுப்பிள்ளையலோட நானும் வீல்சியரில போய் இருந்திட்டன்.
நான் தெரிவு செய்த பாடம் ஓட்டோ மொபைல் சேர்விஸ் “ஆனால் எனக்கு நல்ல விதத்தில அட்வைஸ் பண்ணினம்.
இதற்கான கேள்வி குறைவு அதிகம் வன்னியில மொபையில திருத்த ஆட்கள் வரவே மாட்டார்கள். நீங்கள் தையலை படிச்சா வீட்டை மெசின் வச்சோ அல்லது தையல் கடையில சேர்ந்தோ வேலை செய்யலாம் என தையல் படிக்க ஆரம்பிச்சன்.
ஒரு மாத வகுப்பு முடிஞ்சதும் வீட்டில பிள்ளைக்கு மனைவிக்கு என சட்டைகள் தைக்க ஆரம்பித்தேன். டிப்ளோமா முடியும் போது முழுமையாக ஆடை வடிவமைப்புக்கு தகுதி பெற்று விட்டேன்.
எனக்கு தையல் படிப்பிச்ச ரீச்சர்ஸ் மற்றைய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து என்ற திறமையை இனம் கண்டு பல அமைப்புக்களோட சேர்ந்து எனக்கு 2 மெசின் வாங்கி தந்திருக்கிறார்கள். அதில நான் என்ர மகளின்ட பாடசாலை பிள்ளைகளின் ஓடர்ஸ் கிடைக்கும் போது தைத்திட்டு வாறன். ”
ஆனால் எனக்கு நூல் பட்டின் துணி லாஸ்டிக் என்று தையலுக்கு தேவையான பொருட்கள் கட்டாயமாக தேவைப்படுகிறது. ஆனால் இதற்கு என்னட்ட முதல் இல்லை.
என்ட பிள்ளையையும் மனைவியின்டையும் நிலையை அறிந்து எனக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் எனக்கு ஒரு சிறிய தையல் கடை போட ‘உதவி செய்தால் போதும். யாராவது கொஞ்ச துணி நூல்களை வாங்கி தந்தால் நான் கொஞ்ச சட்டைகளை சேட்டுக்களை தைத்து வீடு வீடாக கொண்டு போய் யாவாரம் செய்து கொள்ளுவேன்.
ஆட்கள் ஓடருக்கு கொண்டு வந்து தரும்போது தையல் காசு மட்டும்தான் கிடைக்கும். ஆனால் நானாக துணி வெட்டி தைச்சு சட்டைகளாகவோ சேட்டாகவோ கொடுக்கும்போது ஓரளவு இலாப மீட்ட முடியும்.
எனவே என் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனக்கு யாராவது உதவிக்கரம் நீட்டுவீர்களா? நான் என் வாழ்வை நல்லதாய் நகர்த்துவேன் என வேண்டி நிற்கின்றார்.
-சிந்துஜா பிரசாத்-