சார்ல்ஸ்டன்: எங்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன் எங்கள் நாட்டையே ஆக்கிரமித்துக் கொள்வீர்களா என்று சொல்லி சொல்லி தெற்கு கரோலினா தேவாலயத்தில் இருந்த கருப்பினத்தவர்களை டிலன் ரூப் (Dylann Roof) துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பிரார்த்தனை கூட்டம் நடந்தபோது கருப்பினத்தவர்களின் தேவாலயத்திற்குள் புகுந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த டிலன் ரூப்(21) துப்பாக்கியால் கணமூடித்தனமாக சுட்டார்.
இதில் கருப்பினத்தைச் சேர்ந்த பாதிரியார் உள்பட 9 பேர் பலியாகினர். பலியான 9 பேரில் 6 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள்.
எங்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன் எங்கள் நாட்டையே ஆக்கிரமித்துக் கொள்வீர்களா என்று சொல்லி சொல்லி டிலன் சுட்டுள்ளார். அவர் தனது துப்பாக்கியை 5 முறை லோட் செய்து சுட்டுள்ளார்.
எங்களை விட்டுவிடுங்கள் என்று தேவாலயத்தில் இருந்தவர்கள் கெஞ்சியும், கதறியும் அவர் கேட்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் டிலனை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க தேவாலயத்தில் 9 பேரை கொன்று குவித்த கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கிய உறவினர்கள்
அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் சார்லஸ்டன் நகரில் அமைந்துள்ள கருப்பர் இனத்தவரின் தேவாலயத்தில் கடந்த 17-ந்தேதி வெள்ளை இன வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் குண்டு பாய்ந்து 9 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கி உள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய வெள்ளை இன வாலிபர் டிலான் ஸ்டார்ம் ரூப் (வயது 21) கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நேற்று அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு ஜேம்ஸ் காஸ்நெல் முன்னிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது தேவாலய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர், ஒவ்வொருவராக அவரை பார்த்தனர். அனைவரும் கண்ணீருடன் அவருக்கு மன்னிப்பு வழங்கினர். இது அனைவரையும் உருக்குவதாக அமைந்தது.
இந்த தாக்குதலில் பலியானவர்களில் மிகவும் இளையவரான டிவான்ஸா சாண்டர்ஸ் (வயது 26) என்பவரின் தாயார் பெலிசியா, “ கடவுள் உன் ஆன்மா மீது கருணை கொண்டிருக்கிறார்.
நான் அறிந்த, மிக அழகான சிலரை கொன்று விட்டாய், எனது உடலில் உள்ள ஒவ்வொரு தசைநாரும் காயப்பட்டுள்ளது” என கூறினார்.
தனது குடும்ப உறுப்பினரை பலி கொடுத்த அந்தோணி தாம்ப்சன் என்பவர், “நான் உன்னை மன்னிக்கிறேன். என் குடும்பம் உன்னை மன்னிக்கிறது. நீ மனம் திருந்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அதை செய்” என கூறினார்.
பலியானவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினாலும், கொலையாளி ரூப், சட்டப்படி விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோர்ட்டில் கோர வேண்டும் என அரசு வக்கீல்களை தெற்கு கரோலினா மாகாண கவர்னர் நிக்கி ஹேலே கேட்டுக்கொண்டார்.