உடல் நலமில்லாமல் மருத்துவமனையிலிருக்கும் மூத்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனை நேரில் சென்று சந்தித்த இளையராஜா, அவருக்கு தன் கையால் உணவு ஊட்டினார். மெல்லிசை மன்னர் என்று புகழப்படும் எம்எஸ் விஸ்வநாதன் கடும் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவரது உடல் நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. நேற்று மாலை அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் இளையராஜா.
அப்போது எம்எஸ்வி சாப்பிட மறுப்பதாகவும், பிற்பகலிலிருந்து எது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்வதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
உடனே இளையராஜா எம்எஸ்வியின் அருகில் போய், “அண்ணா, சாப்பிடுங்கள்… நீங்க சீக்கிரம் எழுந்து வரணும்,” என்றார். ஆனால் எம்எஸ்வியோ, “எனக்கு எதுவும் வேண்டாம். நீங்க சாப்பிடுங்க ராஜா,” என்று சைகையில் கூறினார்.
அதற்கு இளையராஜா, ‘சரி, நான் சாப்பிடறேன். அப்ப நீங்களும் சாப்பிடுவீங்களா?’ என்று கேட்டதும், சரி சாப்பிடுகிறேன் என்றார் எம்எஸ்வி. உடனே அங்கிருந்தவர்களிடம் கூறி இருவருக்கும் உணவு கொண்டு வரச் சொன்னார்கள்.
எம்எஸ்விக்காக கொண்டுவரப்பட்ட உணவை, இளையராஜா வாங்கி, தன் கையாலேயே அவருக்கு ஊட்டிவிட்டார். சிறிதளவு உணவு உட்கொண்ட பிறகு, போதும் என்று எம்எஸ்வி சொல்லிவிட்டார்.
இளையராஜா அங்கிருந்து கிளம்பும்போது, “அண்ணா சீக்கிரம் குணமாகி நம்ம ஸ்டுடியோவுக்கு வாருங்கள். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்,” என்று கூறிவிட்டு வந்தார்.
Share.
Leave A Reply

Exit mobile version