ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கமைய பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு கலைக்கப்பட்டது. இதன்பிரகாரம் ஏழாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்துள்ளதை வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவித்தல் உறுதிப்படுத்தியிருக்கின்றது.
புதிய பாராளுமன்றத்தை அமைத்துக் கொள்வதற்கென ஆகஸ்ட் 17 ஆம் நாள் திகதியிடப்பட்டுள்ள அதேவேளை, ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி பொன்சேகா உறுதிப்படுத்தினார்.
நேற்று நள்ளிரவு 12.00 மணி வரையில் நடைமுறையில் இருந்து வந்த ஏழாவது பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் புதிய பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்வதற்கான தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை தீர்மானித்திருந்ததாக
தகவல்கள் வெ ளியாகியிருந்தன. ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் நள்ளிரவில் வெ ளியாகிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் வலுவற்றதாக ஆக்கப்பட்டதுடன் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியிழந்தவர்களாயினர்.
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டிருந்த பாராளுமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டு பத்து மாதங்களுக்கு முன்பதாகவே அதாவது ஐந்து வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்திருந்த நிலையிலேயே நேற்று நள்ளிரவு ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டது.
ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் கால வாக்குறுதியின் பிரகாரம் நூறு நாள் வேலைத் திட்டத்தை முன்னெடுத்ததன் பின்னர் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது கைகூடியிருக்கவில்லை. அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் 20ஆவது திருத்தச் சட்டம் என்கின்றதான புதிய தேர்தல் முறைமையை நிறைவேற்றியதன் பின்னரே பாராளுமன்றத்தை கலைப்பது என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்து வந்தார்.
எனினும் புதிய தேர்தல் முறைமையை நிறைவேற்றிக் கொள்வதற்காக சாதக நிலைமை காணப்படாததன் பின்னணியிலேயே நேற்று ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியானது. மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான அதிகாரபூர்வ விளக்கத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு குறித்துரைக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு 1981 ஆம் ஆண்டின் ஓராம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 10ஆம் பிரிவின் ஏற்பாடுகளை பயன்படுத்தியும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய நான் இத்தகைய பிரகடனத்தின் இன்று (நேற்று வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைத்து 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் முதலாம் திகதியன்று புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கிறேன்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியாக நிர்ணயிக்கின்றேன்.
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் காலப்பகுதியை வேட்பாளர் மனுவை தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியாக குறித்துரைக்கிறேன்.
மேற்படி காலப்பகுதிக்குள் பெயர் குறிப்பிடப்பட்ட வேட்பு மனுக்கள் தெரிவத்தாட்சி அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட மற்றும் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டிருப்பதாக நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போதும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தமது உரைகளின்போது குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையிலேயே பாராளுமன்றம் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்று அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை தேர்தல்களுக்கான வாக்களிப்பு நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து பெரும்பான்மை ஆசனங்களை பெறுகின்ற கட்சி அரசாங்கத்தை அமைக்கும் தகுதியை பெறும் அதேவேளை செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை புதிய அமைச்சரவையுடனான பாராளுமன்றம் அமையவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.