சேலம்: சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஜாகீர்அம்மாபாளையம் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41). சலூன் கடைகள் நடத்தி வந்தார்.
இவரது மனைவி சுந்தரி (33), மகன்கள், பரத் (16), பவித்ரன் (15), ஹரிபிரசாத் (6). இந்நிலையில், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பாலகிருஷ்ணனை காணவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பாண்டுரங்கன், இவ்வாண்டு பிப்ரவரியில், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் பாலகிருஷ்ணனை தேடி வந்தனர்.
ஆனால், வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாலகிருஷ்ணனை மனைவி சுந்தரியும் அவரது கள்ளக்காதலன் லோகநாதன் (28) மற்றும் அவரது நண்பர்கள் தாவித்குமார், தேவன் ஆகியோர் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுந்தரியை கைது செய்தனர். அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: நாங்கள் சாஸ்திரி நகரில் வாடகைக்கு குடியிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் மகன் லோகநாதனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
என் கணவருக்கு உப்பு நோய் ஏற்பட்டதால், உடல் உறவில் நாட்டமில்லை. எனவே, நானும் அவரும் அதிக நாட்கள் உறவு கொள்ளாமல் இருந்தோம். இதனால், லோகநாதனுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டேன்.
இதுகுறித்து நான் லோகநாத்திடம் கூறினேன். பின்னர் இருவரும் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்தோம். கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி இரவு என் கணவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது லோகநாதன், கணவனின் பின் மண்டையில் அடித்து கொலை செய்தார். பின்னர் உடலை இரண்டாக வெட்டி, சாக்கு பையில் அடைத்து லோகநாத் வீட்டு பிரிட்ஜில் வைத்து விட்டார்.
அடுத்த நாள் வீட்டின் வளாகத்தில் செப்டிக் டேங்க் கட்டுவதாக கூறி 6 அடி பள்ளம் தோண்டி நண்பர்களுடன் சேர்ந்து என் கணவர் சடலத்தை அதில் புதைத்தார்.
அங்கு என் கணவர் குறித்து கேட்டு தகராறு செய்ததால் எனது மாமனாருடன் சென்று சூரமங்கலம் போலீசில், எனது கணவர் காணாமல் போனதாக புகார் செய்தேன். புகார் கொடுத்தது குறித்து லோகநாத்திடம் கூறினேன்.
இதையடுத்து, லோகநாத் என் கணவரின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து, காட்டு பகுதியில் வீசிவிட்டார். இவ்வாறு சுந்தரி போலீசில் வாக்குமூலம் தெரிவித்தார்.
லோகநாத், பி.காம் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தனது தந்தைக்குள்ள 5 வீட்டு வாடகையில் இருந்து கிடைக்கும் பணத்தில் உல்லாசமாக பெண்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
லோகநாதனின் தந்தை ராஜேந்திரன் பாலக்காடு ரயில்வே கோட்ட பகுதி அதிகாரி என்து குறிப்பிடத்தக்கது.