மருமகள்’ என்பதன் அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை. இதுவே வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை என பல பிரச்னைகளை புகுந்த வீடுகளில் பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. இதுதொடர்பான புகார்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குவிந்து கிடக்கின்றன.
சென்னை பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்த கே.ஜி.சிங்காராத்தின் மீது, அவரது மருமகள் ஷாலினி கொடுத்த பாலியல் புகாரால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஷாலினி கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் மன்னார்குடி, வடசேரி. கடந்த 2006ஆம் ஆண்டு எனக்கும், சிங்காரத்தின் மகன் விவேகானந்தனுக்கும் திருமணம் நடந்தது. மூன்று மாதங்கள் சந்தோஷமாக இருந்தோம்.
வரதட்சணையாக என்னுடைய பெயரில் உள்ள தென்னந்தோப்பை எழுதி தரும்படி சிங்காரம், மாமியார் அமுதவள்ளி, நாத்தனார் சரண்யா ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தினர்.
கொடுமையின் உச்சக்கட்டமாக தோசை கரண்டியால் என்னுடைய வலது தொடையில் சூடுபோட்டார் சிங்காரம். அதோடு இல்லாமல் சிகரெட்டால் என்னுடைய காலில் சுட்டார்.
கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு அம்மா வீட்டுக்கு சென்றேன். 8 மாதங்கள் கழித்து சமாதானம் பேசி என்னை சென்னைக்கு அழைத்து வந்து தனிக்குடித்தனம் வைத்தனர்.
இதற்கிடையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியும் மனரீதியாக என்னை துன்புறுத்தி வந்தார் சிங்காரம்.
மேலும், குழந்தையை அவருடைய மகன் விவேகானந்தனுக்கு பிறக்கவில்லை என்றும் தனக்குத் தான் பிறந்தது என்றும் சொல்லும் போது கொதிக்கின்ற எண்ணெய்யை என் மேலே ஊற்றுவது போல இருக்கிறது.
இதுபோன்று மாமியார் அமுதவள்ளி, நாத்தனார் சரண்யா ஆகியோரும் செல்போனில் என்னிடம் பேசி இருக்கிறார்கள். அதற்கான ரெக்கார்டு (பதிவு ஆதாரம்) என்னிடம் இருக்கிறது. குடும்ப நலன் கருதி எதையும் வெளியில் சொல்லாமல் பொறுமையாக இருந்தேன்.
கடந்த 23.12.2014ல் வீட்டில் இருந்த என்னை வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து வந்த சிங்காரம், நாத்தனார் சரண்யா மற்றும் ரகுராகவன் உள்பட சிலர் பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து என்னுடைய புடவையை உருவி மானபங்கப்படுத்தியதோடு சரமாரியாக தாக்கினர்.
ஆளுங்கட்சியை சேர்ந்த சிங்காரத்துக்கு அந்தப்பகுதியில் செல்வாக்கு இருப்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.
தொடர்ந்து தாம்பரம் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், இப்போது போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
என்னை மானபங்கப்படுத்தியவர்களுக்கு ஆதரவாகவே போலீஸார் செயல்படுகிறார்கள். விசாரணை என்ற பெயரில் போலீஸார், சிங்காரத்தை கொஞ்சம் அனுசரித்து செல்லுமாறு என்னிடம் சொல்கிறார்கள். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.
ஷாலினியின் கணவர் விவேகானந்தன், “என்னுடைய குடும்பத்தினர் மீது உள்ள கோபத்தால் இப்படி புகார் சொல்கிறாள் என்று முதலில் நினைத்தேன். பிறகுதான் உண்மை தெரிந்தது.
இது தொடர்பாக பல்லாவரம் போலீஸ் நிலையம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல தடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் என எல்லோரிடமும் புகார் கொடுத்துள்ளேன். வேறுவழியின்றி கடந்த ஏப்ரல் மாதத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு அம்மாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கு சென்றேன். அங்கு பூங்குன்றனை சந்தித்து மனு கொடுத்தோம். இதன்பிறகு சிங்காரத்தின் பதவி பறிக்கப்பட்டது.
ஆத்திரமடைந்த என்னுடைய குடும்பத்தினர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். என்னையும், ஷாலினியையும், குழந்தையும் கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக என்னுடைய அம்மா அமுதவள்ளி, தங்கை சரண்யா, ரகுராகவன் மற்றும் சிலர் இருக்கிறார்கள்.
ஏற்கனவே பல்லாவரத்தில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வரதட்சணை தொடர்பாக மாமனார் பிரச்னை செய்யாமல் இருப்பதற்காக ஷாலினியிடமிருந்து 3 லட்சம் ரூபாயை பேரமாக பேசி, சிங்காரத்திடம் வாங்கி கொடுத்து இருக்கிறார்.
போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால், சொத்து தகராறு என்று சொல்லி பஞ்சாயத்துப் பேசி, கேஸை முடிக்கிறார்கள்.
உண்மையிலேயே சொத்து அனைத்தும் என்னுடைய பாட்டி பெயரில் உள்ளது. அவர் இறந்தபிறகு இதுவரை சொத்தை பாகப்பிரிவினை கூட செய்யவில்லை.
காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்காததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இதுதொடர்பாக பல்லாவரம் காவல்நிலையம் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் செய்யப்படவில்லை” என்றார்.
இதுகுறித்து பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரையிடம் பேசினோம். “நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை ஏற்கனவே தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து இருக்கிறார்கள். சொத்து தகராறு என்று ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்கள்” என்றார் சுருக்கமாக.
சிங்காரம் கூறுகையில், “தேவையில்லாமல் என் மீதும், குடும்பத்தினர் மீதும் பழி போடுகிறார்கள். சொத்து தகராறு காரணமாகவே இதுபோன்ற புகார்களை கொடுத்து இருக்கிறார்கள்.
ஷாலினி எனக்கு மகள் போல. அவள் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை சொல்வது உண்மைக்கு புறம்பானது. ஷாலினிக்கு தொடையில் சூடு போட்டது விவேகானந்தன். அதை ஊர்பஞ்சாயத்தினர் நடத்திய சமாதான கூட்டத்திலேயே விவேகானந்தன் ஒத்துக் கொண்டுள்ளான்.
பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த சம்பவத்தை திரித்து சொல்கிறார்கள். பொது இடத்தில் இப்படி யாராவது நடந்தால் மக்கள் பார்த்து கொண்டு இருப்பார்களா?” என்றார்.
பாலியல் புகார் உங்கள் சட்டத்தில் சொத்து தகராறா… ? சொல்லுங்க போலீஸ்!
-எஸ்.மகேஷ்
படம்: சரவணக்குமார்