அமெரிக்காவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள சவுத் கரோலினா மாநிலம். அங்கு கறுப்பர்கள் செறிந்து வாழும் சார்ள்டன் நகர். அதிலுள்ள ஆபிரிக்க- – அமெரிக்க மெத்தோடிஸ்ட் தேவாலயத்தில் பைபிள் கூட்டம் நடைபெறுகிறது.
மதப்போதகர் அடங்கலாக 13 பேர் வரை அமர்ந்திருந்திருக்கிறார்கள். அநேகமாக எல்லாரும் கறுப்பினத்தவர்கள், ஒருவரைத் தவிர. மதப் போதகர் விவிலியத்தின் பெருமைகளை விபரிக்கிறார். கடிகார முட்கள் சுழல்கின்றன. ஒரு மணித்தியாலம் வரை கழிகிறது.
கறுப்புத் தோல் உள்ளவர்களுடன் அமர்ந்திருந்த வெள்ளைத்தோல் இளைஞன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுக்கிறான்.
ஒவ்வொருவராக சுட்டுத் தள்ளுகின்றான். தோட்டாக்கள் தீர்கின்றன. மீண்டும் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புகிறான்.
கடவுளின் ஆணையால் துப்பாக்கியைக் கீழே போடு என்று தம்மை நோக்கி இறைஞ்சும் பெண்மணியைப் பார்க்கிறேன்.
நான் இதைச் செய்தே ஆக வேண்டும் என்கிறான். எங்கள் பெண்களை நீங்கள் கற்பழிக்கிறீர்கள், எமது நாட்டை ஆக்கிரமிக்கிறீர்கள் என்று கூறிக் கொண்டு மீண்டும் மற்றவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டுகிறான்.
இங்கே நடந்ததை மற்றவர்களிடம் சென்று சொல் என்று கட்டளையிடுகிறான். தொடர்ந்து, தேவாலயத்தை விட்டு வெளியேறிச் செல்கிறான்.
இது கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சம்பவம். துப்பாக்கி கலாசாரம் தீவிரமாக பரவியுள்ள அமெரிக்க சமூகத்தில், இது பத்தோடு பதினொன்றாவது சம்பவமாக இருக்கலாம்.
வயிற்றுப் பசி தீர்க்க பல்பொருள் அங்காடியைக் கொள்ளையிடும் சந்தர்ப்பத்தில் அடுத்தவனை சுட்டுத் தள்ளும் திருடனை விட்டு விடலாம். கோஷ்டி மோதலில் பழிவாங்கும் உணர்ச்சி மேலிட அடுத்தவனின் நெஞ்சில் குறிவைக்கும் இளைஞனையும் மறந்து விடலாம்.
பாடசாலை சென்று சக மாணவர்களையும் ஆசிரியரையும் போட்டுத் தள்ளி விட்டு, தம்மைப் பாதித்த மன அழுத்தம் துப்பாக்கியைப் பிரயோகிக்க தூண்டியது என்று தயக்கமின்றி கூறும் மாணவர்கள்.
தமக்குப் பயந்து ஓடிச் செல்லும் கறுப்பின இளைஞரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி விட்டு, கடமையைச் செய்தேன் என்று கொலையை நியாயப்படுத்தும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்.
இதுபோன்று வன்முறை மலிந்த அமெரிக்க சமூகத்தில், சார்ள்ஸ்ட்ன் தேவாலய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இன்னொருவன்முறையென மறந்து விட முடியாது.
இந்தச் சம்பவம், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது கொண்டுள்ள தீவிர வெறுப்புணர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருப்பது இதற்குக் காரணமாகும்.
மத வழிபாட்டுக்காக ஒன்றுகூடிய அடியார்களை தேவாலயத்திற்குள் சுட்டுக் கொன்ற இளைஞனின் மனோநிலை. சவுத் கரோலினா மாநிலத்தின் வரலாறு. இவை இரண்டையும் சற்று ஆழமாக ஆராய்ந்தால், இதனை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள டிலான் ரூஃப் என்ற 21 வயதுடைய இளைஞன். இவன் தேவாலயத்தில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட விதமும், உச்சரித்ததாகக் கூறப்படும் வார்த்தைகளும் போதும். இவனின் வெள்ளையின மேலாதிக்க சிந்தனையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
தனது பேஸ்புக் கணக்கில் டிலான் சேர்த்துள்ள புகைப்படம், வெள்ளையின மேலாதிக்க சிந்தனை எந்தளவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இங்குள்ள இரு கொடிகளும் இரு ஆபிரிக்க நாடுகளை வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டவையாகும். ஒரு கொடி தென்னாபிரிக்காவுடன் சம்பந்தப்பட்டது. மற்றைய கொடி சமகாலத்தில் ஸிம்பாப்வே என்றழைக்கப்படும் ரொடீஸியாவுடன் தொடர்புடையது.
தென்னாபிரிக்காவில் வெள்ளையர்கள் கறுப்பர்களை ஒதுக்கித் தள்ளிய ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், ஸிம்பாப்வேயும் வெள்ளையர்களின் பிடியில் இருந்து சுதந்திரம் பெற்றுள்ளது.
இருந்தபோதிலும், வெள்ளையர்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் அமெரிக்க அமைப்புக்கள் கறுப்பர்கள் மீதான அடக்குமுறையின் குறியீடாக முன்னைய கொடிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்தக் கொடிகள் பொறிக்கப்பட்ட மேலங்கி, எவ்வாறு டிலானுக்குக் கிடைத்தது என்பது முக்கியமான கேள்வியாகும்.
21-year-old Dylann Roof,
அமெரிக்காவின் சவுத் கரோலினா மாநிலத்தில், வெள்ளையர்களின் மேலாதிக்கத்திற்காக போராடும் 16 அமைப்புக்கள் இயங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுடன் டிலான் எத்தகைய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருந்தபோதிலும், தென் கரோலினா மாநிலத்தில் தீவிரமாக பரவியிருக்கும் வெள்ளையின மேலாதிக்க சிந்தனை, டிலானுக்கு உந்துசக்தியாக அமைந்திருக்கலாம் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இனவாதமும், மேலாதிக்க சிந்தனையும் செறிந்த மாநிலங்களில் ஒன்றாக சவுத் கரோலினா (South Carolina) கருதப்படுகிறது.
ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாதம் கழிவதற்குள், அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்லக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றிய மாநிலம் இதுவாகும்.
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் பட்சத்தில், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக அடக்கியொடுக்கும் ஆட்சிமுறையைப் பேண முடியாது என்பதால், தாம் பிரிந்து செல்வதாக சவுத் கரோலினாவின் மேலாதிக்க சிந்தனையாளர்கள் கூறினார்கள்.
அத்தகைய சிந்தனையின் தொடர்ச்சி, தென் கரோலினாவில் இன்னமும் நிழலாடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறதென மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சிந்தனைகளை பரப்பும் அமைப்புக்களில் ‘கூ குளுஸ் கிலான் (கேகேகே)’ என்ற இயக்கம் முக்கியமானது. சரியாக 52 வருடங்களுக்கு முன்னர், கறுப்பினத்தவர்கள் வழிபடும் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் கேகேகே நடத்திய தாக்குதலில் நான்கு சிறுமிகள் கொல்லப்பட்டிருந்ததை ஞாபகப்படுத்தலாம்.
கேகேகே என்பது முகமூடி அணிந்து கறுப்பர்களைத் தாக்கும் அமைப்பாக வளர்ச்சி கண்டபோதிலும், அதன் வழியைப் பின்பற்றி நேரடியாக கறுப்பர்களை விமர்சிக்கும் பல அமைப்புக்கள் சவுத் கரோலியாவில் தலைதூக்கியிருப்பதைக் காணலாம்.
சமகால அமெரிக்க சமூகத்தில் கறுப்பினத்தவர்கள் அதிக அனுகூலங்களைப் பெற்று வருகிறார்கள் என்ற பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.
*இத்தகைய நிலைமையை தவிர்க்க வேண்டுமானால், கேகேகே உடன் இணைந்து கொள்ளுமாறு சவூத் கரோலினா மாநிலத்திலுள்ள வெள்ளையர்களை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் சமீபத்திலும் விநியோகிக்கப்பட்டதை அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வெள்ளையின மேலாதிக்க சிந்தனையின் விளைவுகள் பாரதூரமானவை. கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வோல்ட்டர் ஸ்கொட் என்ற நிராயுதபாணி கறுப்பின இளைஞனை சுட்டுக்கொன்ற சம்பவத்தை நினைவுகூர முடியும்.
இந்த சம்பவம் சவுத் கரோலினா மாநிலத்தில் வெள்ளையின மேலாதிக்க சிந்தனை எந்தளவு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
இங்கு முக்கியமான விடயம் யாதெனில், இத்தகைய சம்பவங்களை அமெரிக்க அதிகாரிகள் கையாளும் விதம் தான்.
மேலாதிக்க சிந்தனை நிறுவனமயப்படுத்தப்பட்ட சமூகத்தில் வெள்ளையின சமூகத்தைச் சேர்ந்த மனிதர் மத வழிபாட்டுத் தலத்தில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை சுட்டுக் கொல்லும் சமயத்தில், அது வெறுப்புணர்வில் செய்த குற்றச்செயல் என்று அமெரிக்க அதிகாரிகள் சொல்வார்கள்.
அத்தகைய செயலை ஒரு இஸ்லாமியர் செய்திருந்தால், அது பயங்கரவாதமாகக் கருதப்படும்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர், இரு இஸ்லாமிய சகோதரர்கள் பொஸ்டன் மரதனோட்டப் போட்டியை இலக்கு வைத்து நடத்திய குண்டுத் தாக்குதல்களை உதாரணமாகக் கூறலாம்.
செச்சன்ய வம்சாவளி த்சார்நெவ் சகோதர்கள் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்புடையவர்கள் அல்லர். எனினும், இவர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டார்கள். இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெ டுக்கப்பட்டன.
சார்ள்டன் தேவாலய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பற்றி கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வெள்ளையின மேலாதிக்கம் பற்றி பேசியிருக்கிறார். தமது நாட்டில் துப்பாக்கிகளின் வியாபகத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாகவும், இதனை விபரித்திருக்கிறார்.
எனினும், இதனைப் பயங்கரவாதமாக விபரிக்கும் தைரியம் அவருக்கு இருக்கவில்லை. இத்தகைய சிந்தனைப் போக்கு நீடித்து பிரச்சினையை சரியான முறையில் அணுகும் வரையில், அமெரிக்காவில் ஆட்கொலைகளுக்கு முடிவிருக்காது என்றே சொல்லத் தோன்றுகிறது.
-சதீஷ் கிருஸ்ணபிள்ளை-