மக்கள் மனங்களில் உள்ள அதீத நம்பிக்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளிலும் சதிகளிலும் ஈடுபடும் சம்பவங்களை நாம் அன்றாடம் கேள்வியுறுகின்றோம். இதற்கு மத ரீதியிலான நம்பிக்கைகள், கலாசார நம்பிக்கைகள் போன்றனவும் ஒன்றும் விதிவிலக்கல்ல.
மாந்திரீக வேலைகளை செய்வோர், பூசாரிகள், சாமியார் என இப்படி நம்பிக்கைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பட்டியல் நீண்டது.
இப்படி இருக்கையில் அண்மைக்காலமாக, மாந்திரீகம் தொடர்பில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளில் அதிகாரிப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மாந்திரீகர்கள், பூசாரிகளை விட வெளி நாடுகளில் இருந்து வருவோரை அதிகமாக நம்பி மக்கள் அவர்களிடம் செல்லும் போது அவர்களில் பலர் செய்யும் மோசடிகளும் குறைந்தபாடில்லை.
கடந்த 22 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸாரினால் இந்தியாவை சேர்ந்த பூசாரி ஒருவர் பிரபலமான வர்த்தகக் கட்டடத் தொகுதி ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதன் ஊடாக கடந்த ஒரு வருடகாலமாக இடம்பெற்று வந்த கப்பம் பெறும் நடவடிக்கை ஒன்றும் மேலும் பல மோசடிகளும் அம்பலத்துக்கு வந்தன.
பம்பலப்பிட்டி பொலிஸார் அம்பலப்படுத்திய இந்த இந்திய பூசாரியின் மோசடி ஒன்றும் முதன் முறையாக இங்கு இடம்பெற்றதல்ல.
பல வருடங்களாக இந்திய பூசாரிகள் பலரின் வலையில் அப்பாவிகள் சிக்கிய சம்பவங்கள் உள்ளன. இதில் தற்போது கொழும்பு மத்திய பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சம்பிக்க சிறிவர்தன, முன்னெடுத்திருந்த ஒரு சுற்றிவளைப்பு முக்கியமானது.
அதாவது ஒரு முறை இந்தியாவில் இருந்து வந்த பூசாரி ஒருவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவாறு பரிகார வேலைகளை செய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்தார்.
அவரிடம் ஏராளமான பெண்கள் பரிகரம் பெற்றுக்கொள்ள சென்றனர். பெரும் தொகையான பணத்தையும் அவர்கள் அந்த பூசாரிக்கு வாரி இறைத்தனர்.
எனினும் இறுதியில் அந்த பூசாரியிடம் சென்ற பல பெண்கள் அவருக்கு இரையான செய்தி வெளியானது. இதனையடுத்து பொலிஸ் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை மாறு வேடத்தில் அனுப்பி அந்த சாமியாரை பொலிஸார் தமது வலையில் சிக்கவைத்தனர்.
இதே போன்று தான் கிராண்ட்பாஸ், சேதவத்த, தொட்டலங்க ஆகிய பிரதேசங்களுக்கு ஒரு முறை பரிகார பூஜை செய்யும் பூசகர்களாக வேடமிட்டு வந்திருந்த இந்தியர்கள் சிலர் வீடுகளுக்குள் ஒரு வகையான புகையை பரவவிட்டு கொள்ளைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதே போன்று கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து வந்த பூசாரிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பலர் தோட்டப் புற மக்களையும் விட்டு வைக்கவில்லை.
திருஷ்டி கழிப்பதாகவும், பரிகாரம் செய்வதாகவும் கூறி பல பெண்களை அவர்கள் தமது வலையில் வீழ்த்தி தமது இச்சைகளுக்கு உள்ளாக்கியமை தொடர்பிலான முறைப்பாடுகள் பொலிஸ் முறைப்பாட்டு புத்தகங்களை புரட்டும் போது கண்டுகொள்ள முடிகின்றது.
இது இந்திய பூசாரிகள் சார்ந்த விடயம் மட்டுமன்று. உள்ளூரிலும் பலர் போலி பூசாரி வேடமிட்டும் மாந்திரீகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டும் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அது தொடர்பில் பல தடைவைகள் நாம் எழுதியுள்ளோம்.
எனினும் இவ்வாறான மோசடிக் காரர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளின் எண்ணிக்கையில் குறைவினை அவதானிக்க முடியவில்லை.
தமது கஷ்டங்களையும் கவலைகளையும் நீக்கிக்கொள்ள நம்பிக்கையுடன் செல்லும் இந்த அப்பாவிகளை ஏமாற்றி பிழைக்கும் போலி பூசாரிகள், மோசடிக்காரர்களின் கொடூர சிந்தனைகளை என்னவென்று வர்ணிப்பது.
பம்பலப்பிட்டியிலும் அது தான் நடந்தது. நல்லது நடக்கும் என எதிர்பார்ப்புக்களுடன் இந்திய பூசாரியை நாடியோருக்கு தாம் ஏமாற்றப்படுவதை உணரும் போது 365 நாட்களுக்கும் மேல் கடந்திருந்தது.
ஆம், யசீகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வர்த்தகர். புறக்கோட்டையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு கோடீஸ்வர வர்த்தகராக அவரை நாம் அடையாளப்படுத்தலாம்.
ஏனெனில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக யசீகரனுக்கு பல தவறணைகள் இருந்தன.30 வருட கொடிய யுத்தத்தில் இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்தவர்கள் பட்டியலில் நாம் யசீகரனையும் சேர்க்கலாம்.
செல்வத்துக்கு ஒன்றும் குறைவில்லாத அவர் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் வசித்து வந்தார். மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்வைக் கழித்து வந்த வேளையில் அவரது வாழ்விலும் விதி விளையடியாது.
தனது வாரிசுகளில் மூத்த மகளையும் மகனையும் திருமணம் செய்து கொடுத்திருந்த யசீகரன் தனது மனைவி மற்றும் இளைய மகளுடனேயே பம்பலப்பிட்டி வீட்டில் வாழ்ந்து வந்தார்.
இந் நிலையில் தான் அவர் விதியின் விளையாட்டுக்கு உள்ளாகின்றார். அதாவது யசீகரனின் மனைவி திடீரென மரணிக்கின்றார்.
யசீகரனின் இளைய மகள் அனுஷியா (பெயர் மற்றப்பட்டுள்ளது) தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவப் பட்டப்படிப்பினை மேற்கொண்டுவரும் அவருக்கு 24 வயது.
மனைவியின் மரணத்தின் பின்னர் யசீகரன் தனது இளைய மகள் அனுஷியாவுடன் தனியே பம்பலப்பிட்டி வீட்டில் வசித்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் அவருக்கு ஏற்பட்டது.
அனுஷியா தொடர்பில் அவருக்கு இருந்த கவலைகளுடன் வர்த்தகத்திலும் சிற்சில சிக்கல்கள் ஏற்படவே என்ன செய்வதென்று அறியாது யசீகரன் சிந்தித்தார்.
இவ்வாறான பிரச்சினைகள், குழப்பங்கள் ஏற்படும் போது தனது பூர்வீக இடமான யாழ்ப்பாணத்துக்கு யசீகரன் சென்று வருவது வழமை. அதே நடவடிக்கையை அப்போதும் அவர் கையாண்டுள்ளர்.
யாழில் உள்ள தனது உறவுக்காரர் ஒருவரை சந்தித்துள்ள அவர் விடயத்தை கூறியுள்ளார். தனது மனக் கஷ்டங்களை கொட்டித்தீர்த்துள்ளார்.
இந் நிலையில் தான் பரிகார பூஜை ஒன்றினை செய்யும் யோசனை யசீகரனிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. அது வரை பரிகார பூஜை ஒன்று தொடர்பில் எவ்வித எண்ணமும் ஏன் நம்பிக்கையும் இல்லாதிருந்த யசீகரனுக்கு அந்த புதிய யோசனை ஒரு வகையில் மன ஆறுதலை கொடுத்திருக்க வேண்டும்.
அதனாலோ என்னவோ யசீகரன் அந்தயோசனைக்கு சம்மதித்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் இருந்து பூசாரி ஒருவரை இலங்கைக்கு வரவழைக்க அந்த உறவுக்கரர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
ஆம், அந்த பூசாரி தான் கணேஷ்(பெயர் மாற்றப்பட் டுள்ளது) 33 வயதுடையவர். தமிழ் நாடு, விருது நகர் மாவட்டத்தின் சிவகாசி பிரதேச கோயில் ஒன்றில் கடமையாற்றுவதாக அறியப்பட்டவர். இலங்கைக்கு அடிக்கடி சுற்றுலா விசாவில் வந்து செல்பவரும் கூட.
பரிகார வேலைகள் நிமித்தமே அடிக்கடி இலங்கைக்கு வந்து பழக்கப்பட்ட பூசாரி கணேஷ் இங்கு வரும் போதெல்லாம் செட்டியார் தெருவில் உள்ள ஒரு தற்காலிக தங்குமிடத்திலேயே தங்குவாராம்.
இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் அதாவது தனது 25 ஆவது வயதில் பூசாரி கணேஷ் இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளதுடன் அன்று முதல் அடிக்கடி இங்கு வந்து பலரது தேவைகளுக்காக பரிகார பூஜைகளில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசரணைகளில் தெரியவந்துள்ளது.
இப்படி வந்த போது அவர் மேற்கொண்ட பல மோசடியான வேலைகள் மற்றும் கீழ்த்தரமான வேலைகள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளில் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பூசாரி கணேஷ் தொடர்பில் பதிவுகள் அப்படி இருக்க நாம் விடயத்துக்கு வருவோம்.
யசீகரனின் சம்மதத்துக்கு அமைய இலங்கைக்கு பூசாரி கணேஷ் வரவழைக்கப்பட்டுள்ளார். அது 2014 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தின் ஒரு தினத்திலாகும்.
இலங்கை வந்த பூசாரி கணேஷ் பம்பலப்பிட்டியில் உள்ள யசீகரனின் வீட்டில் பரிகார பூஜைகளில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு பல மணி நேரம் தங்கியிருந்து பூஜையில் ஈடுபட்ட பூசாரியுடன் யசீகரனுக்கு தெரியாமல் அவரது மகள் அனுஷியா தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
அதாவது அனுஷியாவின் காதல் விவகாரம் ஒன்று தொடர்பில் தந்தை யசீகரனின் சம்மதத்தை பெற்றுக்கொள்வதற்காக ஒரு வசிய மாந்திரீகத்தை செய்வதே அந்த தொடர்பின் நோக்கமாக இருந்தது.
‘ ஐயா… நான் ஒரு பையனை காதலிக்கின்றேன். இப்போது ஐந்து வருடங்களாகிறது. அதாவது 18 வயதிலிருந்து நாமிருவரும் காதலிக்கின்றோம்.
பையன் எங்களது அந்தஸ்தை விட குறைந்தவன் என்பதாலோ என்னவோ அப்பா ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அவன் நல்ல பையன். என்னை நன்றாக கவனித்துக்கொள்வன் என எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
எனவே தான் தந்தையின் சம்மதம் கிடைக்க ஒரு வசிய மாந்திரீகம் செய்ய வேண்டும்…’ என அனுஷியா தனது கோரிக்கையை பூசாரி கணேஷ்விடம் போட்டுடைத்தார்.
இந்தக் கதையைக் கேட்ட பின்னர் பூசாரியோ, எந்த முற்பணத்தையும் வாங்காமல் சட்டென்று சம்மதித்தார். சிறிது நேரத்தில் மீண்டும் பேசத் தொடங்கியுள்ள பூசாரி ‘ இந்த வசிய மாந்திரீகத்தை இங்கிருந்து செய்ய முடியாது.
நான் இந்தியாவுக்கு சென்று அங்கிருந்து செய்கின்றேன்…’ என தனது சம்மதத்தை உறுதிப்படுத்தியதுடன் ‘ எனினும் அதில் ஒரு சிக்கல் உள்ளதே…’ என ஏதோ ஒன்றை மென்று விழுங்கியுள்ளார்.
‘ சிக்கலா..!.என்ன ஐயா சொல்கின்றீர்கள்….’ அனுஷியா ஒரு நிமிடம் அதிர்ந்து வினவியுள்ளார்.
அனுஷியாவின் ஆச்சரியத்தை வைத்து அவர் எந்தளவு தூரம் இந்த வசிய மாந்திரீகத்தை செய்வதில் குறியாகவுள்ளார் என்பதை கணித்துக்கொண்ட பூசாரி கணேஷ்,
‘ ஆம்.. வசிய மாந்திரீகத்தை ஆரம்பித்த பின்னர் இடையில் நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்தினால் உனது தந்தையின் உயிருக்கு அது ஆபத்தாக அமைந்துவிடும்…’ என தனது சதித் திட்டத்தின் முதல் கட்டத்தை சத்தமில்லாமல் அரங்கேற்ற அத்திவாரமிட்டார் பூசாரி முத்தையா.
இதனையடுத்து வசிய மாந்திரீக பூஜைகள் இடையில் நின்று விடாது இருக்க முற்பணத் தொகை ஒன்றினையும் கையோடு கொடுத்த அனுஷியா, இந்தியா சென்று தன்னை தொடர்புகொள்ளத் தக்க தொலைபேசி இலக்கத்தையும் கூடவே கொடுத்து அனுப்பினார்.
பூசாரி கணேஷும் இந்தியா திரும்பினார். ஒருவாரம் ஆனது. ஒரு நாள் அனுஷியாவின் தொலைபேசி சிணுங்கியது. இந்திய இலக்கம் ஒன்றிலிருந்து அழைப்பு.
ஆவலாய் பதிலளித்தவருக்கு மறுமுனையில் பூசாரி கணேஷின் குரல். மாந்திரீக வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக கூறிய அவர் அதனை தொடர ஒரு தொகை பணத்தைக் கோரலானார்.
இப்படி சில நாட்களுக்கு ஒரு முறை அழைப்பை ஏற்படுத்தும் அவர் கொடுத்து வைத்திருந்த வங்கிக்கணக்கொன்றுக்கு அடிக்கடி பணம் போடும் படி கூறி வந்துள்ளார்.
காதலும், பாசமும் கண்ணை மறைக்க தொடர்ச்சியக பணம் கொடுத்து வந்தார் அனுஷியா. அப்படி பணம் செலுத்த அனுஷியாவுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து என நீங்கள் மனதால் நினைப்பது புரிகின்றது. ஆம், அந்த கேள்விக்கான பதில் தான் இந்த சம்பவத்தின் கிளைமாக்ஸ்.
சுமார் ஒருவருடம் கழிந்தது. பூசாரியின் பணம் கோரல் நிற்கவில்லை. தொடர்ந்தது. எனினும் தந்தை அனுஷியாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை.
இதனால் அனுஷியாவுக்கு சந்தேகம் வந்தாலும் மாந்திரீகம் முடிவடையாததாலும் கணேஷ் பூசாரி பலமிக்கவர் என பலரும் கூற கேட்டிருப்பதாலும் அவரது மாந்திரீக நம்பிக்கை தளரவில்லை. தொடர்ந்து பணம் கொடுத்தார். இவ்வாறு சுமார் 12 இலட்சம் ரூபா வரை அவர் பணம் செலுத்தியிருந்தார்.
இந் நிலையில் மிக அண்மையில் ஒரு நாள் தனது மனைவி பயன்படுத்திய அலுமாரி ஒன்றினை யசீகரன் திறந்து பார்க்கலானார். சடுதியாக இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மனைவியின் நகைகளில் பெரும்பாலானவை குறைந்திருப்பதை யசீகரன் அவதானித்தார்.
மனைவியின் மறைவுக்கு பின் அந்த அலுமாரியின் திறப்பையும், அந்த நகைகளையும் இளைய மகள் அனுஷியாவுக்கே கொடுத்திருந்த யசீகரன், ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஊகித்துக்கொண்டுள்ளார்.
மகள் வீட்டுக்கு வந்ததும் அமைதியாக நகைகள் தொடர்பில் யசீகரன் வினவியுள்ளார்.
அமைதியாக தந்தை தொடுத்த அந்த கேள்விக்கணையில் அனுஷியா அகப்பட்டுக்கொண்டார். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறினார்.
தந்தையின் பாசத்துக்கு இடையே அவரால் பொய் கூற முடியவில்லை. நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாது ஒப்புவித்தார். தந்தை யசீகரன் கோபப்படவில்லை. மகளை அமைதிப்படுத்தினார்.
மகள் மோசடிக்குள் சிக்கியுள்ளதை உணர்த்தியுள்ளார். அதனால் தொடர்ந்தும் பணம் கொடுக்க வேண்டாம் என மகளுக்கு கூறினார்.
இந் நிலையில் இக்காலப்பகுதிக்குள் அதாவது கடந்த ஜூன் மாதம் பூசாரி கணேஷ் மீண்டும் இலங்கை வந்தார்.
ருசி கண்ட பூனையல்லவா?… அனுஷியாவின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார் பூசாரி.
மாந்திரீக வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பணத்தொகை ஒன்றினை அவர் கோரியுள்ளார். இந் நிலையில் அனுஷியா இம்முறை ஏமாறவில்லை. தனது தந்தைக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட யசீகரன் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் சென்ற அவர் இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.
கூடவே சென்ற அனுஷியாவும் நடந்தவைகளை பொலிஸாருக்கு கூற கப்பம் பெற்ற குற்றச் சாட்டின் பூசாரி கணேஷை கைது செய்ய பொலிஸார் திட்டம் தீட்டினர்.
கடந்த ஜூன் 21 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து விசேட விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.
கொழும்பு தெற்குக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல் தெனிய ஆகியோரின் மேற்பார்வையில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் பெரேராவின் ஆலோசனையின் பிரகாரம், அந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி அஜித் மெத்தானந்தவின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பமானது. இதில் பொலிஸ் சார்ஜன்களான அழகக்கோன் (30353),
மற்றும் கான்ஸ்டபிள்களான யுரேஷன் (76818),குமார (60021),பிரியங்கர (76782), சம்பத் (70693),தரங்க (66499)வாசல (71146), சில்வா (81778), ரணசிங்க (20710) ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்டு சந்தேக நபரான பூசாரி கணேஷை கைது செய்யும் திட்டம் ஆரம்பமானது.
முறைப்பாடு கிடைக்கப் பெற்ற மறு நாள் 22 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபலமான வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்றுக்கு அனூஷியா ஊடாக பூசாரி கணேஷ் வரவழைக்கப்பட்டார்.
பணம் பெறும் நோக்கில் அங்கு வந்த பூசாரி கணேஷ் பணத்தினைப் பெற்ற போது அவரது கைகளுக்கு மறைந்திருந்த பொலிஸார் விலங்கு மாட்டினர்.
பொலிஸாரின் விசாரணைகளில் 9000, 5000 என இரு வேறு சந்தர்ப்பங்களில் தனது வங்கிக்கணக்கிற்கு பணம் பெற்றுள்ள பூசாரி பின்னர் இலங்கையிலுள்ள தனது நண்பர் ஒருவரின் வங்கிக்கணக்கு இலக்கம் ஊடாக மிகுதித் தொகையை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திலேயே பல பரிகாரபூஜைகளை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்த பூசாரி ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க அனுசியா மறுத்த போது பூஜையை நிறுத்தினால் தந்தை இறந்து விடுவார் என மிரட்டி தொடர்ந்து பணம் பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் செய்த மேலும் பல மோசடிகள் குறித்து தகவல்கள்குறிப்பிடப்பட்டாலும் முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கவில்லையென பம்பலப் பிட்டி பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் பெரேரா தெரிவிக்கின்றார்.
இந் நிலையில் கைதான பூசாரி, நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று அது தொடர்பில் மீண்டும் விசாரணைகள் இடம்பெற்ற போது பூசாரி கணேஷ் தான் மோசடி செய்த 12 இலட்சம் ரூபாவை திருப்பிச் செலுத்த உடன்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர்