திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (வயது 72). இவரது மனைவி சலோமி. இந்த தம்பதியினரின் மகன் யேசுதாஸ் (34). இவரது மனைவி சுகந்தி. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் சுகந்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சாமுவேலின் பூர்விகம் இலங்கையில் உள்ள கண்டி என்ற இடமாகும். தொடக்க காலத்தில் அங்கு வசித்து வந்த சாமுவேல் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்ததால் கடந்த 1982-ம் ஆண்டு இலங்கையில் இருந்து குடும்பத்துடன் திருச்சி வந்தார்.
சாமுவேலுடன் அவரது தங்கை லீதியாளும் உடன் வந்தார். லீதியாளும், கணவருடன் சாமுவேல் வீடு அருகே வசித்து வருகிறார்.
சாமுவேலின் அக்காள் ஞானப்பூ(74). இவரது கணவர் ராஜய்யா. இலங்கையில் வசித்து வந்த ஞானப்பூவும், அவரது கணவர் ராஜய்யாவும் அங்கிருந்து கடந்த 1979-ம் ஆண்டு குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள கானம் கிராமத்திற்கு சென்றனர்.
சாமுவேல் வருவதற்கு முன்பே ஞானப்பூ வந்ததால் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சாமுவேலுக்கும், அவரது சகோதரி லீதியாளுக்கும் தெரியவில்லை.
அந்த கால கட்டங்களில் தொலை தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாததால் ஞானப்பூ பற்றி விசாரிக்க முடியவில்லை.
தங்களது உறவினர்கள் சிலரிடமும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தேடிப்பார்த்து உள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதேபோல ஞானப்பூவும் தனது தம்பி, தங்கை பற்றி விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. காலங்கள் கடந்தன.
இந்தநிலையில் சாமுவேலின் மருமகள் சுகந்தி, சாமுவேல் படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பினார். மேலும் ஞானப்பூ பற்றி தேடி வருவதையும், அவரை பற்றி தகவல் தெரிந்ததால் தொடர்பு கொள்ளும்படியும் செல்போன் எண்ணை கொடுத்து வாட்ஸ்- அப்பில் அனுப்பினார்.
இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் உள்ள ஒரு குரூப்பில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் சாமுவேல் திருச்சியில் இருப்பதாகவும் அவரும் ஞானப்பூவை தேடி வருவதாகவும் உறவினர்கள் மூலம் ஞானப்பூவின் மகன் லாசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லாசர், செல்போன் மூலம் சாமுவேலின் மருமகள் சுகந்தியை கடந்த வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டார். அப்போது சாமுவேலும், அவரது தங்கை லீதியாளும் திருச்சியில் குடும்பத்துடன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருந்து ஞானப்பூ, அவரது மகன்கள் லாசர், ஜெயராஜ் ஆகியோர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று காலை திருச்சி வந்தனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கினர். மகன், மகள்கள், பேரக்குழந்தைகளை இரு குடும்பத்தினரும் உறவு முறைகளை கூறி பாசத்தோடு அழைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.
36 ஆண்டுகளுக்கு பின்னர் எங்களது உறவினர்களோடு இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தந்தை ராஜய்யா உயிரோடு இருக்கும்போது நாங்கள் ஒன்று சேர்ந்திருந்தால் எனது தந்தையும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என உருக்கமாக கூறினார்.
ஞானப்பூவிற்கு தாசன், ஜெயராஜ், லாசர், ராஜமணி, பாலசிங் என்ற 5 மகன்கள் உள்ளனர். இதேபோல லீதியாளுக்கு திருசெல்வி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்தது அவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.