கமலின் ‘பாபநாசம்’ வெற்றி அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த படக்குழுவையும் பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழாவை சென்னையில் இன்று நடத்திய படக்குழு, ‘நாங்க ஜெயிச்சதுக்கு காரணம் மீடியாக்கள் கொடுத்த சர்டிபிகேட்தான்’  என்று நன்றி பட்டாசை கொளுத்தி போட்டது.

‘பாபநாசம்’  படத்தில் இடம்பெற்ற பிரசித்தி பெற்ற டீக்கடை, சுயம்புலிங்கம் வீடு, போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை தத்ரூபமாக மேடையில் செட் போட்டு அசத்தினர். படக்குழு மொத்தமும் நன்று நவில, கடைசியாக மைக் பிடித்தார் கமல்.

”நான், ‘அவள் ஒரு தொடர் கதை’ படத்தில் இருந்து இப்படி ஒரு வெற்றியை மீடியாக்களுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. இப்போதுதான் கொண்டாடுகிறேன்.

‘பாபநாசம்’ படப்பிடிப்பை 40 நாளில் முடித்து கிளம்பும்போது எல்லோருடைய கண்களிலும் ஈரம்.  படப்பிடிப்பில் சகநடிகர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடைசியில்தான் திட்டமிட்டதை வெற்றிகரமாக படமாக்கினார் ஜித்து ஜோசப்” என்றவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு…

சுயம்புலிங்கம் வீட்டில் காமராஜர், ஆதித்தனார் படங்களை வைத்தது திட்டமிட்டு எடுத்ததா?

ஆமாம் நிச்சயமாக அப்படி எடுக்கப்படதுதான். என்னுடைய ‘தேவர்மகன்’ படத்தில்கூட பெரியார், முத்துராமலிங்க தேவர் படங்களை மாட்டி வைத்து இருப்பேன்.

‘பாபநாசம்’ படத்தில் போலீஸிடம் அடி வாங்குவது போல் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

எனக்கு தனியாக முகவரி கிடையாது. நான் ஒரு நடிகன். நீங்கள் தான் ‘உலக நாயகன்’ என்று பட்டத்தை கொடுத்து தள்ளிவைத்து இருக்கிறீர்கள். என்னை கமல்ஹாசன் என்று அழைப்பதைவிட நடிகன் என்று கூப்பிட்டால் பெருமைப்படுவேன்.

நீங்கள் மலையாள ரீ-மேக்கில் நடித்தது பற்றி?

சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி பார்த்தால் நமக்கு எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். நான் இங்கே தமிழ் மீடியாக்கள் மத்தியில் நின்று சொல்கிறேன். நான் பாதி மலையாளி. இதை அப்படியே கேரளாவில் சொன்னால் ‘கமல் முழு மலையாளி’ என்று உரிமையாக சண்டைக்கு வருவார்கள்.

குடும்ப படமான ‘பாபநாசம்’ படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு தரவில்லையே?

வரிவிலக்கு தராமல் இருப்பதற்கான காரணங்களை அவர்கள் இணைய தளத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனை நானும் அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.

நடிகர் சங்க பிரச்னை குறித்து மூத்த நடிகரான  உங்களின் கருத்து என்ன்?

இது ‘பாபநாசம்’ படவிழா இங்கே அதுபற்றி சொல்ல விரும்பவில்லை.  பின்னர் தனியாக அழைத்து பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

– எம்.குணா

Share.
Leave A Reply

Exit mobile version