நாசிக் : மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2 வயது பெண் குழந்தை ஒன்று கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த உறைய வைக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி தற்போது, அந்த வீடியோ யு டிப்பிலும் பரவி வருகிறது.
இந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ கடந்த மாதம் 18 ந்தேதி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. தனது குழந்தை தொடர்ந்து வருகிறது என்று அறியாமலேயே தாய் முன்னே செல்கிறார்.
சோயா கான் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை சாலையில் தனது தாய்க்கு பின்னால் சற்று தள்ளி நடந்து வருகிறது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்று மெதுவாக வருகிறது.
அதன் ஓட்டுநர் குழந்தையை கண்டாரா இல்லையா என தெரியவில்லை. ஒரு வினாடியில் குழந்தை மீது கார் மோதி, அதன் முன் டயரும், பின் டயரும் ஏறி இறங்கியது. பின்னர் கார் நிற்கிறது. அப்படி இருந்தும் காரின் 2 டயர்களும் குழந்தையின் மீது ஏறி இறங்கியது.
இந்த பயங்கர சம்பவத்திற்கு பிறகு குழந்தை சோயா கான் அதே காரில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்டாள். இரண்டு டயர்களும் ஏறி இறங்கியும் குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது குறித்து மருத்துவர்களும் ஆச்சர்யமடைந்தனர்.
எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படவில்லை என்றாலும், சிறிது உள்காயம் அடைந்த சோயா கானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.