எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறுவது என்பது முக்கியமல்ல. ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கும் வகையிலான அரசாங்கம் ஒன்றே எனக்கு அவசியமாகும்.
மஹிந்த ராஜபக் ஷவுடன் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த வைராக்கியம் இன்னும் உள்ளது. தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றாலும், பிரதமர் பதவி என்று வரும்போது மஹிந்த ராஜபக்ஷவைவிட சிரேஷ்டமானவர்கள் பலர் கட்சியில் இருக்கிறார்கள்.
எனினும் வரும் பாராளுமன்றத் தேர்த லில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற மாட்டார். அவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார் . அவர் தோல்வியடைந்தே சரித்திரம்.
நான் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்முறை காரணமாகவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
அவருக்கு வேட்பு மனு வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் ..
கடந்த வருடம் நவம்பர் மாதம் 21 ஆம் திகதிக்கு பின்னர் இப்படி ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் உங்களனைவரையும் சந்திப்பது இதுவே முதல் தடவை என நினைக்கின்றேன்.
உங்களனைவரையும் மீண்டும் ஒரு முறை சந்திக்க கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சி. அத்துடன் உங்கள் அனைவரையும் நான் வரவேற்கின்றேன்.
விஷேடமாக தற்போதைய அரசியல் சூழ் நிலை தொடர்பிலேயே சில தெளிவு படுத்தல்களை நான் செய்ய எதிர்பார்க்கின்றேன்.
42 நாட்களில் ஜனநாயக புரட்சி
நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முன்னர் அல்லது ஜனநாயக புரட்சியை ஏற்படுத்த எடுத்துக்கொண்ட காலம் வெறும் 42 நாட்கள் மட்டுமே.
அது தொடர்பில் நான் முன் வைத்த காரணிகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம், மனித உரிமை, சுதந்திர ஊடகம் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய எமது திட்டங்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்ததனாலேயே புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த முடிந்தது. அவ்வாறு நான் முன் வைத்த விடயங்களே என்னை ஜனாதிபதியாக ஆக்கியது.
49 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட நான் எம்.பி.யாக, பிரதியமைச்சராக அமைச்சராக பல பதவிகளை வகித்துள்ளேன்.
இந் நிலையில் நான் தவறானவன் அல்ல என்பது தொடர்பிலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடியவன் அல்ல என்பது தொடர்பிலும் இந் நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய ஒரு நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே பொது அபேட்சகராக என்னை மாற்றியது. நான் பொது அபேட்சகராக அறிவிக்கப்பட முன்னர் ரணில் விக்கிரம சிங்கவை ஒரு முறை கூட சந்திக்கவில்லை.
சந்திரிகாவை ஒரே ஒரு தடவை மட்டுமே சந்தித்தேன். எனது வெற்றி தொடர்பில் 49 அரசியல் மற்றும் பிற குழுக்கள் பாடுபட்டன. ஒத்துழைத்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்திருக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி, சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் எனக்கு ஆதரவளித்தன.
உண்மையில் எனக்கு இரண்டு ஒப்பந்தங்கள் இருந்தன. அதில் ஒன்று 49 குழுக்களும் எனக்கு ஆதரவு தெரிவித்து கைச்சாத்திட்ட ஒப்பந்தம். மற்றையது ரணிலை பிரதமராக்குவது என்பதாகும்.
அதன்படியே நான் ஜனாதிபதியான அடுத்த நிமிடம் ஒப்பந்தப்படி பிரதமராக ரணிலை நியமித்தேன்.
47 பேரின் தலைவரை பிரதமராக்கியது எப்படி?
அந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் நான் 47 பேரின் ஆதரவு கொண்ட ரணிலை பிரதமராக்கினேன்.
இன்றுள்ள அரசியல் சூழ் நிலைகளை வைத்து நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றது தவறானது என எனக்கு நெருங்கிய பலரும் விமர்சிக்கின்றனர்.
உண்மையில் எனது எதிர்பார்ப்பு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பதவியேற்றதும் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்வதாகும்.
எனினும் ரணிலை பிரதமராக்கல், 49 குழுக்களுடன் செய்த ஒப்பந்தம் பிரகாரம் உடன்பாடு காணப்பட்ட 100 நாள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை எனக்கு இருந்தது.
19 ஆவது அரசியல் திருத்தம், நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தல், தகவல் அறியும் உரிமை உள்ளிட்ட பலவற்றை அரசியல் யாப்பில் திருத்தத்தைச் செய்து கொண்டுவரக் கூடிய தேவை இருந்தது.
நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை ஏற்றது தவறானது எனக் கூறுவோர், இந்த 100 நாட்களில் 47 பேரின் ஆதரவு மட்டுமே கொண்ட ஒருவரை பிரதமராக்கி அதனூடாக 100 நாள் திட்டங்களை நிறைவேற்றியது எப்படி என சிந்திக்க வேண்டும்.
நான் அதிகாரத்தை நாட்டுக்காக குறைக்க தயாரானவன். சுதந்திர கட்சியின் தலைமை பதவியை நான் பலாத்காரமாக கைப்பற்றவில்லை.
எனக்கு அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு வந்தது. அதனை நான் ஏற்றுக்கொண்டதாலேயே 100 நாள் திட்டம் வெற்றியளித்தது.
இன்று விலைக்குறைப்பு, 19 ஆவது திருத்தம், மக்கள் நிவாரணங்கள் குறித்து பெருமையாக பேசுகின்றனர். அவை கிடைக்க நான் சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றமையே பிரதான காரணமாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு நான் தலைவராக இல்லாது மஹிந்த ராஜபக் ஷ தலைவராக இருந்திருந்தால் பெரும்பான்மை இல்லாத பாராளுமன்றத்தில் 19 ஆவது திருத்தம் நிறைவேறியிருக்காது. மக்களுக்கு நிவாரணம் அளித்த ரவி கருணாநாயக்கவின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியிருக்காது.
எனவே இந்த நூறு நாள் திட்டம் நிறைவேறியதன் பெருமை பாராளுமன்றில் அது தொடர்பில் கையுயர்த்திய ஒவ்வொருவரையும் சாரும்.
காட்டிக்கொடுத்தவன், கெட்டவன், துரோகி என்கின்றனர்
கடந்த இரு வாரங்களாக என்னைப் போன்று விமர்சிக்கப்படுபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. கெட்டவன், காட்டிக்கொடுத்தவன், துரோகி என என்னை வர்ணிக்கின்றார்கள்.
இவை 1978 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு ஜனாதிபதியும் கேட்டிராதவை. ஜனநாயகத்தை நிலை நிறுத்த பாடுபடும் அதிகாரத்தை குறைத்த நான் இவ்வாறான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளேன்.
எனினும் நான் ஏற்படுத்திய ஜனநாயகம், சுதந்திரத்தை அனைவரும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியும் போது சந்தோசமாக உள்ளது. விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொள்பவர்கள். அதுவே ஒருவரை மேலும் உயர்வடையச் செய்யும்.
மஹிந்தவை இப்படி விமர்சித்திருந்தால்…
இப்போது என்னை விமர்சிப்பது போன்று கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த ராஜபக் ஷவை விமர்சித்திருந்தால் அல்லது இதில் நூற்றில் ஒரு பங்காக அவரை விமர்சித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனினும் இப்போது அப்படியான சூழல் கிடையாது. ஜனநாயகத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்க முடியுமாக உள்ளது.
6 மாதத்தில் சிறந்த மாற்றம்
கடந்த ஆறு மாதங்களில் நாட்டில் இரத்தம் எங்கும் கொட்டப்படவில்லை. கொலைகள் இல்லை. எனவே சிறந்த மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 19 உள்ளிட்ட பல தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதனை 47 பேரின் ஆதரவு கொண்ட அரசாங்கம் ஒன்றினால் செய்ய முடியுமா?
சுதந்திர கட்சிக்குள் குழப்பம்
இப்படி பெரும்பான்மையற்ற அரசாங்கத்தை வைத்து நான் அரசாங்கத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் போது தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள்ளும் கூட்டமைப்புக்குள்ளும் பிளவு ஏற்பட்டது.
தலைமை பதவியை கையளித்து காலைவாரிவிட்டனர்
தலைமை பதவியை எனக்கு அளித்த கட்சி, எனது காலை வாரிவிட்டது. நல்லவர்களை உள்ளடக்கிய கட்சியொன்றை கட்டியெழுப்ப நான் படாத பாடு படவேண்டியிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைவர்கள் நாடளாவிய ரீதியில் சென்று எனக்கெதிராக மேடையமைத்தனர்.
ஒரு கூட்டத்துக்கு 20 பேர் என்றனர். பின்னர் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் என்றனர். பின்னர் 55 பேர் என்றனர். இப்படி இவர்கள் ரணிலுக்கு எதிராக சவால் விடவில்லை. எனக்கு எதிராகவே மேடை ஏறி சவால் விட்டனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?
இவ்வாறு மேடை மேடையாக ஏறியவர்களுக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என பலர் கேட்கின்றனர். எப்படி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது. 47 பேரின் ஆதரவு மட்டுமே கொண்ட பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் அல்லவா?
இதனாலேயே கட்சியின் தீர்மானங்களுக்கு அப்பால் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் கண்டும் காணாமல் இருக்கும் விதமான போக்கொன்றை நான் கடைப் பிடிக்கவேண்டியிருந்தது. அப்படி இருத்திருக்காவிட்டால் இந்த 100 நாள் திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது.
மூன்று குற்றச்சாட்டுக்கள்
இப்போது நாம் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளோம். அடுத்த 5 வருடங்களுக்கான எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் அது. இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு எதிராக 3 குற்றச் சாட்டுக்கள் விமர்சகர்களால் சுமத்தப்படுகின்றன.
ஒன்று கட்சியின் தலைமை பதவியை ஏற்றமை. அடுத்தது மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்தமை, மற்றது மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுத்தமை.
முதலில் நான் மஹிந்தவை சமல் ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து சந்தித்தேன். பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் காரியாலயத்தில் வைத்து சந்தித்தேன்.
இதன்போது மஹிந்த தரப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒன்று தேர்தலின் பின்னர் மஹிந்தவை பிரதம ராக்குவது. மற்றது பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது. மற்றையது பல பாராளுமன்ற செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளிப்படுத்துவது போன்றன அவர்களது கோரிக்கைகளாக இருந்தன.
எனினும் நான் உடனடியாகவே அந்த கோரிக்கைகளை மறுத்தேன்.
மஹிந்தவை பிரதமராக்க மறுத்தமைக்கான காரணங்கள்
நான் அவ்வாறு மறுத்தமைக்காக அவர்கள் காரணம் கோரினர். நான் அதனையும் அவர்களுக்கு விளக்கினேன். மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சிக்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம்கள் எம்மை அங்கீகரிக்க மாட்டார்கள்.
துஷ்பிரயோகம் அற்ற நல்லாட்சிக்கான அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கான தகுதி மஹிந்தவுக்கு இல்லை என்று கூறினேன். அவர் தேர்தலில் களம் இறங்கினால் இளைஞர்களின் வாக்குகளும் எமக்கு இல்லாமல் போகும் என்பதையும் விளக்கிவிட்டு நான் அங்கிருந்து வெளியேறியிருந்தேன்.
அதனால் கட்சியை தோற்கடிக்காதீர்கள் என நான் அப்போது மஹிந்த முன்னிலையிலேயே கூறிவிட்டே சென்றேன்.
19 ஆவது அரசியல் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை எனக்கும், ஐ.தே.க.வுக்கும், ஜே.வி.பி.க்கும் மு.கா.வுக்கும் இருந்ததுடன் எமக்கு வரமளிக்க ஆதரவு தந்த 49 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கும் இருந்தன.
19 ஐ நிறைவேற்ற முற்பட்ட போது முதலில் 20 ஐ நிறைவேற்ற வேண்டும் எனவும் அது தொடர்பிலும் 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சுதந்திர கட்சிக் காரர்கள் என்னிடம் வாதாடினர்.
பின்னர் 19 ஐயும் 20 ஐயும் ஒரே நேரத்தில் கொண்டுவர வேண்டும் என்றனர். 19 ஐ ஆதரித்து கைதூக்க 20 ஐ கொண்டுவருமாறு கோரினர். இதனை ரணில் உள்ளிட்டவர்களுக்கு நான் சொல்லி அது தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.
இந் நிலையில் சு.க.வின் தலைவன் என்ற வகையில் கட்சியினரை சமாதானப்படுத்தும் நிலைமைகளை விளக்கி முதலில் 19 ஐ கொண்டுவந்து 215 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றினோம். எனினும் பின்னர் 20 ஐ கொண்டுவர முடியாமல் போனது துரதிஷ்டவசமானது.
மத்திய வங்கியின் ஆளுநர் விவகாரம்
இப்படி போகும் போது தான் மத்திய வங்கியின் ஆளுநர் விவகாரம் பூதாகரமானது. அது தொடர்பிலான பிரச்சினையை விசாரிக்க பாராளுமன்றில் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
ரணில் நல்லவர்
ரணில் தொடர்பில் எனக்குள்ள நல்லெண்ணம் போன்றே மக்கள் மத்தியிலும் அவர் நல்லவர் என்ற நிலைப்பாடு இருந்ததை நான் அறிந்தேன்.
ஆளுநரை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு ஆலோசனை
இந் நிலையில் மத்திய வங்கி ஆளுநர் பிரச்சினை பூதாகரமாக மாறியதைத் தொடர்ந்து அதற்கான சிறந்த வழி. ஆளுநரை இராஜினாமா செய்ய வைப்பதே என தோன்றியது. அது தொடர்பில் நான் ரணிலிடம் கூறினேன். உமக்குள்ள (ரணிலுக்கு) நல்லெண்னத்தை சிதைத்து விட வேண்டாம் என்றேன். இந்த பிரச்சினைகளைத் தொடர்ந்தே நான் பாராளுமன்றத்தை கலைத்தேன்.
வேட்பாளர் தெரிவு
சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் முறைமை அக்கட்சியினுள் இருப்பவர்களுக்கே தெரியும். விசேடமாக விண்ணப்பம் கோரப்பட்டு வேட்பு மனு குழு நியமிக்கப்பட்டு அதற்கு மத்திய செயற்குழுவின் அனுமது அளிக்கப்பட்டே அந் நடவடிக்கை இடம்பெறும்.
இந் நிலையில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்பு மனு வழங்குவதில் துளியளவும் எனக்கு இஷ்டமில்லை.
தினேஷ், வாசு, விமல், டியூ உள்ளிட்டவர்கள் இதே மண்டபத்தில் மஹிந்தவுக்கு வேட்பு மனு கோரி நான் முடியாது என்பதால் என்னை திட்டி விட்டு சென்றனர்.
இந்த சுவர்களுக்கு பேச முடியுமாக இருந்தால் இவை சாட்சியம் சொல்லும்.
சு.க.வில் மைத்திரிக்கு இருந்த இரு வழிகள்
இதனைத் தொடர்ந்து சுதந்திர கட்சி மற்றும் கூட்டமைப்பு தொடர்பில் எனக்கு இரு வழிகளே இருந்தன.
ஒன்று நான் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும்.
தலைமை பதவியில் இருந்து விலகினால்…
நான் தலைமை பதவியில் இருந்து விலகினால் அந்த இடம் நிச்சயம் மஹிந்த ராஜபக் ஷவுக்கே செல்லும். நான் அப்படி மஹிந்தவுக்கு தலைமை பதவியை கொடுப்பது அநியாயமாகிவிடும். அப்படி மஹிந்த கட்சிக்கு தலைமை தாங்கினால் நல்லாட்சிக்காக ஒத்துழைத்த கட்சி உறுப்பினர்களின் நிலைமை கேள்விக்குள்ளாகிவிடும். அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையே ஏற்படும். வேட்பு மனுக்கள் அவர் சார்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருக்கும்.
மஹிந்த பிரபலமானவர் என நான் கூற மாட்டேன். அவர் தோல்வியடைந்த ஒரு சரித்திரம்.
இந் நிலையில் மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்குவதே இரண்டாவது வழி.
நாம் மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்காவிட்டால் அவர் சார்ந்தோர் தனியாக கூட்டமைப்பு செய்து தேர்தலில் குதிக்க ஆயத்தமாகவே இருந்தனர். நான் வேட்பு மனு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மஹிந்த பாராளுமன்றத்துக்கு வரப் போவது உறுதி. அதனை தடுக்க முடியாது.
இந் நிலையில் எனக்கு சுதந்திர கட்சியின் ஒரு பகுதியை உடைத்துக்கொண்டு வெளியேறவும் வாய்ப்பிருந்தது. அது எனக்கு அழகல்ல.
கட்சியை பிளவுபடுத்தாதது ஏன்?
1956 ஆம் ஆண்டு முதல் இந் நாட்டை ஐ.தே.க.வும் சுதந்திர கட்சியுமே மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இவ்வாறு இருக்கையில் கடந்த காலங்களில் இவ்விரு கட்சிகளிலும் ஏற்பட்ட பிளவுகள் ஜனநாயகமற்ற செயற்பாடுகளையே பலப்படுத்தின. 1972 தேர்தலின் பின்னர் நடந்தது என்ன.
பண்டார நாயக்கவின் கீழ் அமைச்சராக தயாரான ஜே.ஆர்.
பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கீழ் அமைச்சராக இருக்க ஜே.ஆர். ஜயவர்த்தன கூட தயாராக இருந்தார். அந்தக் கட்சிக்கு அப்போது 7 ஆசனங்கள் மட்டுமே இருந்தன.
இந் நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தேர்தலை ஐ.தே.க. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வெற்றிகொண்டது. அதன் பிரதிபலன் அரசியல் யாப்பே மாறியது.
குழப்பத்தின் ஆரம்பம்
தற்போதைய அரசியல் குழப்பங்கள் மஹிந்தவால் ஏற்பட்டதன்று.
தற்போதுள்ள அரசியல் குழப்பங்களின் ஆரம்பம். இந்த 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். காலத்தில் ஆரம்பமானதே. அதன் தொடரையே இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
நாட்டின் அரசியல் கலாசாரத்தை சீரழித்தது இந்த யாப்பு மாற்றம் தான்.
நான் பொது வேட்பாளராக பெயரிடப்பட்ட போது எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராக கூட இருக்காத ஒருவரால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் என கிண்டலடித்தனர். எனினும் நாட்டில் வரலாற்றில் தோல்வியடைந்த ஜனாதிபதி மஹிந்த மட்டுமே. ஏனையோர் ஓய்வு பெற்ற பின்னர் மீண்டும் அரசியலுக்கு வரவில்லை.
ஐ.தே.க.வின் பிளவும் 18 ஆம் திருத்தமும்
இந் நிலையில் 2010 ஆம் ஆண்டு தேர்தலை எடுத்துப் பாருங்கள். ஐ.தே.க.வால் பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட பாதுகாக்க முடியாமல் போனது.
ஒரே தடவையில் 22 பேர் மஹிந்தவுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டனர். இதன் பிரதிபலன் 18 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறை மன்னர் முறைக்கு ஒப்பாக மாற்றப்பட்டது.
இந் நிலையில் அப்போது ஐ.தே.க.பிளவுபடாதிருந்திருந்தால் 18 நிறைவேறியிருக்காது. எதிர்க்கட்சி ஸ்திரமாக இல்லாமையினாலேயே 18 நிறைவேற்றப்பட்டது. பிளவில்லாமல் இருந்திருந்தால் 18 நிறைவேறியிருக்காது.
சுதந்திர கட்சியை பிளவுபடுத்த விரும்பாமைக்கான காரணம்
கடந்த காலத்தை வைத்தே எதிர்காலம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. அப்படி உடைத்தால் அது நாளை ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகளுக்கு வாய்ப்பாக அமையலாம்.
சுதந்திரக் கூட்டமைப்பு 100 வீதம் மஹிந்தவுடன்; ஆனால் நானில்லை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 100 வீதமும் சுதந்திர கட்சியில் 99 வீதமும் மஹிந்தவை மீண்டும் கொண்டுவர விரும்புகின்றனர். எனினும் நான் அதனை முற்றாக எதிர்க்கின்றேன். அதனை நான் விரும்பவில்லை. அதனாலேயே உங்கள் பெரும்பான்மை தீர்மானத்தின் படி செய்துகொள்ளுங்கள். அதில் நான் இல்லை என கட்சியிடம் நான் கூறிவிட்டேன்.
யார் ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை
எனக்கு யார் ஆட்சிமைப்பது என்பது முக்கியமல்ல. எனினும் ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற புரட்சியை பாதுகாக்கும் அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு. அதனால் நான் இம்முறை தேர்தலில் நடு நிலையாகவே செயற்படுவேன்.
நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு
நீதியான தேர்தல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸாருக்கு நான் பூரண ஆதரவு வழங்குவேன்.
கட்சி வென்றாலும் மஹிந்த பிரதமர் அல்ல
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றாலும், பிரதமர் பதவி என்று வரும்போது மஹிந்த ராஜபக் ஷவைவிட மூத்தவர்கள் பலர் முன்னணியில் இருக்கிறார்கள் .
எனினும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற மாட்டார். அவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார். நான் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர் இல்லை.
ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
எனவே ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பெற்றுத் தந்த ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதனை தாரைவார்த்து விடாதீர்கள் என்பதையே என்னால் கூற முடியும் என்றார்.