ஆக்ரா: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தாஜ்மஹால் அருகே காதல் ஜோடி ஒன்று பரஸ்பரம் ஒருவர் கழுத்தை ஒருவர் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ராவை சேர்ந்தவர்கள் ராஜ்வீர் சிங் ( 25 ), ஷபனம் அலி (18). இருவரும் கடந்த 12 வருடங்களாக நட்புடன் பழகி வந்தனர். ராஜ்வீர் குடும்பம் ஆக்ராவை விட்டு வெளியேறி டேராடூன் சென்றது. இருந்தாலும் இவர்கள் இடையிலான நட்பு தொடர்ந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியது.
ராஜ்வீர் சிங் இந்து மதத்தை சேர்ந்தவர். ஷபனம் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக ஷபனம் வீட்டில் ராஜ்வீரை காதலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் அவர் செல்லும் இடம் எல்லாம் பாதுகாப்புக்காக அவரது வீட்டார்கள் சென்றார்கள். இருந்தாலும் ஷபனம் ராஜ்வீரை ரகசியமாக சந்த்தித்து தனது காதலை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ராஜ்வீர் ஆக்ரா வந்து காதலியை அழைத்து உள்ளார். ஷபனம் தனது வீட்டில் நடன பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டு காதலருடன் சென்று உள்ளார்.
பின்னர் இருவரும் காதலின் சின்னமாக திகழும் தாஜ்மகால் அருகே தங்கள் உயிரை மாய்த்து கொள்வது என முடிவு செய்தனர்.
அதன்படி தாஜ்மகால் அருகே மரம் அடர்ந்த பகுதியில் இருவரும் அமர்ந்து கொண்டு ஒருவர் கழுத்தை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டு உயிருக்கு போராடியபடி இருந்தனர்.
அப்போது அங்கு வந்த வன இலாகா அதிகாரிகள் பார்த்து இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.
ராஜ்வீர் பேசக்கூடிய உணர்வு நிலையில் இல்லை. அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர் ஆனால் எந்த பதிலும் இல்லை. ஷபனமின் குடும்பத்தினர் மட்டும் பதறியடித்தபடி ஓடிவந்தனர்.
தற்போது கழுத்து முழுவதும் கட்டுகளுடன் மருத்துவமனையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியபோது, “ஷபனம் மற்றும் எனது வீட்டாரையும் எங்கள் திருமணத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சமாதானப்படுத்த முயற்சி செய்தேன் ஆனால் மத எல்லைகள் எங்களுக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது” என ராஜ்வீர் கூறி உள்ளார்.
இந்நிலையில் ஷபனம் இன்னும் மயக்கம் திரும்பாமலேயே உள்ளார். அவர் அளிக்கும் தகவலை தொடர்ந்தே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிகிறது. அதே சமயம் இருவர் மீதும் போலீஸார் தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.