எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்க கூடாது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்க கூடாது.
தனியாக போட்டியிடட்டும் என்றார்கள். ஆனால் மக்களின் ஆதரவால் அவர்கள் தால்வியடைந்துவிட்டார்கள் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கூட தூற்றாத வார்த்தைகளால் என்னை தூற்றினார்கள்.
என்னை துடைப்பத்தால் பெருக்கி தள்ளவேண்டும். புதைக்க வேண்டும். இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்கள்.
பிரபாகரனும் இதையே தான் சொன்னார். அதையே அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். மேலும் வடக்கு கிழக்கில் மிகவும் பயங்கரமான நிலை காணப்படுகின்றது. மக்கள் அங்கு செல்ல மிகுந்த அச்சம் கொள்கின்றார் எனவும் தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மெதமுலனவுக்கு சென்றேன்
‘தீர்மானமிக்க ஆட்சியை வரலாற்று சிறப்புமிக்க இடமான அநுராதபுரத்தில் ஆரம்பித்துள்ளோம். இந்த புதிய பயணத்தை ஆரம்பிக்கும் போது யுத்தத்தை வெற்றி கொண்ட நாள் ஞாபகத்துக்கு வருகின்றது. எனினும் என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முவுடிகள் வெளியாவதற்கு 12 மணித்தியாலங்கள் இருப்பதற்கு முன்னரே மெதமுலனவுக்கு சென்றேன்.
மெதமுலனவுக்கு சென்றதிலிருந்து நாட்டு மக்களை பற்றிய கவலையே எனக்கு இருந்தது. ஆனால் நாட்டின் சகல மாவட்டங்களிலும் இருந்து பிள்ளைகளை தூக்கிகொண்டு தாய்மார்களும், இளைஞர்களும் யுவதிகளும் எல்லோரும் என்னை பார்க்க வந்தார்கள்.
நான் தேசத் துரோகியாம்
கடந்த ஆறு மாத காலத்தில் எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நான் அரசியலில் இருந்த காலம் முதல் வீட்டுக்கு செல்லும் வரை இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தது இல்லை.
என்னை ஒரு குற்றவாளியாகவும் தேசத்துரோகியாவும் உருவகித்தனர். ஆனால் நாட்டு மக்களுக்கு தெரியும் நான் யார் என்று.
பயங்கரவாதம்
நாட்டில் பயங்கரவாதம் காணப்பட்ட போது எத்தனை சடலங்கள் வந்து இங்கு விழுந்தன. இரத்த ஆறு ஓடியது. இந்த இரத்தம் தான் என்னை துடிதுடிக்க வைத்தது.
நல்லாட்சி
நான்கு ஆட்சிக்கு வரும் போது நாடு இருந்த நிலையும் தற்போதைய நிலையையும் நீங்கள் காண முடியும்.
வீதி அபிவிருத்தி, மின்சாரம், பாடசாலை, கல்வி, மருத்துவம் என சகலத் துறைகளையும் அபிவிருத்தி செய்தேன். நாட்டையே சுத்தம் செய்தேன்.
இதனால் தான் உலகவரலாற்றில் மிக விரைவாக அபிவிருத்தி அடைந்;து வரும் நகரமாக கொழும்பு நகரை மாற்றியமைத்தேன்.
வடக்குக்கு ரயில் சேவை
25 வருடங்களுக்கு மேல் வடக்குக்கு ரயில் செல்லவில்லை. அங்குள்ள பிள்ளைகளுக்கு ரயில் என்றால் என்னவென்று தெரியாது. பீப்பாய்களை காட்டி இதுவே ரயில் என்பார்கள்.
இதுபோன்றே நாகதீபம் என்றால் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. இலங்கை புறஉருவ படத்தில்தான் நாக தீபத்தை பார்த்து இருப்போம். ஆனால் இவற்றையெல்லாம் மாற்றிமைத்துள்ளேன். பயங்கரவாதத்தை ஒழித்து பல அபிவிருத்திகளை செய்த என்னை நாட்டை பாதாளத்துக்கு கொண்டுச் சென்றேன் என்றார்கள்.
பிரஜா உரிமை
பிரஜா உரிமையை இல்லாமல் செய்வதாக குற்றம் சுமத்தினார்கள். பிரஜா உரிமையை ஏற்படுத்தியது நான் தான். அதனால்தான் ரணில் விக்கிரம சிங்க நாட்டில் பல இடங்களுக்கு சென்று என்னை விமர்சிக்கின்றார்.
கட்சியை கட்டியெழுப்புவேன்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப எதை வேண்டுமென்றாலும் செய்வேன். அதற்காக தான் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். கட்சியை காப்பாற்ற எதையும் இழப்பேன் என்பதை உறுதியாக கூற விரும்புகின்றேன். ஜனாதிபதி தேர்தலின் போது எனக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்தன.
துன்பத்தில் அரச ஊழியர்கள்
தற்போதைய ஆட்சியில் அரச ஊழியர்கள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு ஊசலாடுகின்றது. எனவே நாம் ஆட்சிக்கு வந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
நல்லாட்சி ஏற்பட வேண்டும் என வாக்களித்தார்கள். ஆனால் அதன் பயனாக என்ன நடந்துள்ளது என்று தெரியவில்லை.
காட்டி கொடுத்தார்கள்
பிரபாகரனிடம் மண்டியிட்டவர்கள் தான் தற்போது ஆட்சியில் உள்ளார்கள். நாட்டை காட்டிகொடுக்க எதை வேண்டுமாலும் செய்வார்கள். ஜே.ஆர். காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்கள். இந்த காலப்பகுதியில் பல பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு வரலாற்றை கூறி எந்தவித பயனும் இல்லை. ஆனால் அனைத்தையும் ஞாபகம் வைத்துகொள்ள வேண்டும். கடந்த ஆட்சியில் சந்திரிக்கா நாட்டை பிளவுப்படுத்த சதிசெய்தார்.
எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் என நம்புகின்றேன். ஆனால் எனது ஆட்சியில் இவ்வாறு எந்த பிழையும் நடக்க இடம்கொடுக்கவில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்யவில்லை.
தற்போதைய ஆட்சியில் நாட்டுக்கு துரோகமிழைத்தவர்கள் கூடவே இருக்க எனக்கு விரல் நீட்டி கதைக்கின்றார்கள்.
கண்ணாடியை பார்க்கட்டும்
இடுப்பில் சக்தி இல்லாதவர்கள் தான் இவ்வாறு கதைக்கின்றார்கள். இவர்கள்தான் தேசத்துரோகிகள். இவர்கள் காலை எழுந்தவுடன் கண்ணாடியை பார்க்க வேண்டும். அப்போது அவர்களுக்கு புரியும் யார் துரோகி என்று.
நாட்டின் சொத்தை சர்வதேசத்துக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தினார்கள். அவ்வாறு ஒன்றை நான் செய்யவில்லை. ஆனால் தற்போதைய ஆட்சியில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய முறைமுக கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. நான் மக்களிடம் திருடவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள்.
எத்தனோல், மதுபான நிலையங்கள்
மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாகவும், நாட்டுக்கு எத்தனோல் கொண்டு வருவதற்கான அனுமதிபத்திரங்கள் வழங்கியதாகவம் பாராளுமன்றத்தில் தெரிவிக்கின்றனர்.
என்மீது குற்றம் சுமத்தும் போது எத்தனோல் கொண்டுவர 28 அனுமதி பத்திரங்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை கூடி 300 ஆக உயர்ந்துள்ளது. இது நல்லாட்சியில் நடந்துகொண்டிருக்கின்றது.
பாடசாலைகளுக்குள் போதை வஸ்த்து விநியோகிக்கப்படுகின்றது. நாங்கள் இதை செய்யவில்லை.
1989,90 களில் இடம்பெற்ற சம்பவங்கள் யாருக்கும் நினைவு இல்லை. இதனால் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தார்கள். இக்காலத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், கொலைகள் என மனிதர்களை உயிருடன் எரித்தார்கள்.
100 நாட்கள் தான் போனது
நாங்கள் ஆட்சிக்கு வந்து நாட்டை அபிவிருத்தி செய்ய நான்கு வருடங்கள் முடிவடைந்தன. ஆனால் இவர்களின் நல்லாட்சியில் நாட்டை பின்னோக்கி கொண்டுச் செல்ல 100 நாட்கள் மாத்திரமே போனது.
ஆறு மாதத்திலேயே இந்த ஆட்சி இவ்வாறு இருக்கின்றது என்றால் ஐந்து வருடத்தில் என்ன நடக்கப்போகின்றது.
வடக்கில் பயங்கரமான நிலை
வடக்கில் தற்போது பெண் பிள்ளைகள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாமல் உள்ளது. தெற்கில் இருந்து வடக்கு கிழக்குக்கு செல்ல மக்கள் அச்சம் கொள்கின்றனர். அவ்வாறான பயங்கரமான நிலை வடக்கில் ஏற்பட்டுள்ளது. இது பயங்கரவாதம் ஆரம்பமாகுவதற்கான நிலையாகும்.
நான் எனது ஆட்சியில் மேற்கொண்ட சகல அபிவிருத்திகளையும் நிறுத்தியுள்ளார்கள். 100 நாட்களில் மக்களுக்கு அநியாயம் செய்துள்ளார்கள்.
வங்கியில் பாரியகொள்ளை
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையும், மத்திய வங்கியின் ஆளுநரும் இணைந்து பாரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது மிகப்பெரிய கொள்ளையாகும்.
எதிர்காலம் எனது கையில்
நாட்டை மீண்டும் இவர்களிடமிருந்து மீட்டெக்க வேண்டும். புதிய தலைவரை உருவாக்குவோம். புதிய ஆட்சியை அமைப்போம். தமிழ் சிங்களம் முஸ்லிம் என சகலரையும் இணைத்து கொண்டு நல்ல ஆட்சியை செய்வோம்.
மேலும் ஏனைய மதங்களின் உரிமையை உறுதிப்படுத்துவோம். முஸ்லிம்களுக்கு இன்றைய நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். எம்மிடம் இனவாதம் இல்லை. ஆனால் என்னை இனவாதியாக வர்ணிக்கின்றனர். எனது கையில் எதிர்காலம் உள்ளது எண்ணுடன் வாருங்கள்.