லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் தீயுடன் சங்கமமானது..

லண்டனிலிருந்து எடுத்து வரப்பட்ட பாவலனது பூதவுடல் யாழ். பருத்தித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பாவலனது பூதவுடலுக்கு கிரிக்கெட் வீரர்கள், பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

bavalan_pathmanathan_001அதனைத் தொடர்ந்து மாலையில் பருத்தித்துறை, சுப்பர்மடம் இந்து மயானத்தில் பாவலனின் பூதவுடல் தீயுடன் சங்கமமாகியது.

லண்டன் சறே-சேர்பிட்டன் பகுதியிலுள்ள ரீகிரியேஷன் மைதானத்தில் கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய தமிழர் கிரிக்கெட் சம்மேளனம் நடாத்திய கிரிக்கெட் போட்டித் தொடரில், மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழக அணியில் பத்மநாதன் பாவலன் பங்கேற்றிருந்தார்.

எதிரணியினர் வீசிய பந்து அவரது நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதால் அவ்விடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

பாவலனைக் காப்பாற்ற மைதானத்துக்கு விரைந்து மருத்துவர்கள் கடுமையாக முயற்சிகள் எடுத்த போதும் அவை பலனளிக்கவில்லை.

உயிரிழந்த பத்மநாதன் பாவலன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

அவர் 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

உயர்தரத்தில் கணிதத்துறையில் கல்வி பயின்ற அவர். பாடசாலைக் காலத்தில் கிரிக்கெட் அணியிலும், சதுரங்க அணியிலும் பங்கேற்று பாடசாலைக்கு பல வெற்றிகளைத் பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version