2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற போதிலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களின்போது இருந்த தேர்தல் வன்முறைகள் இம்முறை குறைவாகவே காணப்படுகின்றன.

மாறாக, கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் உட்பூசல்களுமே அதிகரித்தவண்ணம் உள்ளன. நுகேகொடை பிரதேசத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தை அடுத்து, அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், நாட்டுக்குள் பாரிய பூகம்பத்தையே கட்டவிழ்த்து விட்டுள்ளது.

Mahinda-Rajapaksaஜனாதிபதி பதவியில் இருக்கும்போதே தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன ஜனாதிபதி என்ற வரலாற்றுப் பதிவில் இடம்பெற்றுள்ளவர் மஹிந்த ராஜபக்ஷ.

கடந்த 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவிக்கு வந்த அவர், 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் இரண்டாவது முறையாக ஜனாதிபதி வரத்தைப் பெற்றார்.

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அவர் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி போட்டியிட்டு, தன்னை எதிர்த்து களத்தில் குதித்த மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்றுப்போனார்.

அதற்குப் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைமைத்துவதத்தையும் மைத்திரிக்கே விட்டுக்கொடுத்துவிட்டு மெதமுலனவுக்குச் சென்ற மஹிந்தர்,

தற்போது மீண்டும் பதவி ஆசையில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இவர், ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என முயற்சிக்கின்றார்?, அதற்கான பதில் யாருக்கு தேவைப்படுகிறது?, இக்கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட போது ஏற்பட்ட குழப்பங்கள் என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய தேவை இந்நாட்டிலுள்ள  அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இவற்றுக்கு பதில் தேட வேண்டிய தேவை பொதுமக்களுக்கு இல்லை என்பதே யதார்த்தமாகும்.

பொதுத் தேர்தல் களத்தில் குதித்துள்ள அரசியல்வாதிகள், யார் ஆட்சிக்கு வர வேண்டும்?, பிரதமர் ஆசனத்தில் யாரை அமரவைப்பது?

உள்ளிட்ட விடயங்களைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர, மக்கள் நலன் சார்ந்த விடயங்களைப் பற்றி யோசிப்பதையோ அல்லது அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுவதையோ காணக்கூடியதாக இல்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவதற்கு, அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால ஏன் அனுமதியளித்தார் என்ற கேள்வி போய், தேர்தலில் அக்கட்சி தலைமையிலான ஐ.ம.சு.கூ வெற்றிபெற்றால், பிரதமர் பதவி யாருக்கு வழக்குவது என்ற கேள்வியே தற்போது தலைதூக்கியுள்ளது.

ஜனாதிபதியும் அவர் சார்ந்த கட்சியின் ஓரிருவரும் தவிர்ந்த, ஏனைய அனைவரும் மஹிந்தவே பிரதமராக வர வேண்டும் என்று ஒரே தொனியில் கோஷமிட்டு வருகின்றனர்.

அதுவே சரியென்ற உறுதியான தீர்மானத்திலும் அவர்கள் உள்ளனர். இவ்வாறிருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர், அவர்களுக்கான பதிலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மிகத் தெளிவாக வெளியிட்டிருந்தார்.

அவர் அன்று வெளியிட்ட கருத்து, அக்கட்சியை உலுப்பிவிட்டது மாத்திரமன்றி, எரிகின்ற நெருப்பில் எண்ணெயை வார்த்தது போலாகிவிட்டது.

ஆனால், போட்டியில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிகளுக்கு, ஜனாதிபதியின் அந்த கருத்து மனத்திருப்தியையே வழங்கியுள்ளது என்பதே உண்மை.

‘கட்சிக்குள் சிரேஷ்டர்கள் பலர் இருக்குமிடத்து மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்க மாட்டேன், இந்த தேர்தலில் மஹிந்த தோற்பது உறுதியே’ என்று ஜனாதிபதி அன்று கூறினார்.

அவரது கருத்து, அனைவர் மத்தியிலும் இன்னும் புகைந்துகொண்டே இருக்கின்றது. ஜனாதிபதியின் கூற்று எவ்வாறு சாத்தியமாகும்? பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கா உள்ளது?, அல்லது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பங்களைப்  பெறும் ஒருவருக்கா உள்ளது என்ற கேள்விக்கு இப்போது அனைவரும் பதில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

எதுவாகவிருப்பினும், மஹிந்தவே அடுத்த பிரதமர் என்றும் அதற்கான அதிகாரம் தங்களுக்கே உண்டு (பெரும்பான்மை விருப்புக்களை கொண்டுள்ள எம்.பி.க்கள்) என்ற கருத்திலேயே மஹிந்த தரப்பினர் உள்ளனர். சரி, அந்த அதிகாரம் யாரிடம்தான் உள்ளது என்பதை நாமும் சற்றுத் தேடிப் பார்த்தோம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பைப் பெற்ற ஒருவரையே பிரதமராக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் சிலர், பிரதமராக வரத் தகுதி பெற்றவர் யார் என்பதை சிந்தித்து அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்றும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். அந்தவகையில், இது தொடர்பில், முக்கியஸ்தர்கள் சிலர் கூறியதாவது,

கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவ

‘நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் விசுவாசத்துக்கு உள்ளான நபரையே நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பிரதமராக நியமிக்க முடியும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இன்னமும் உள்ளது.

அந்த முறைமை நூற்றுக்கு நூறு சதவீதம் இல்லாமல் செய்யப்படவில்லை. இருப்பினும், ஜனாதிபதியினால் தான்தோன்றித்தனமாக பிரதமரை நியமிக்க முடியாது.

காரணம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பு உள்ள நிலையில், ஜனாதிபதி அதை நிராகரிப்பாராயின் அதில் பிரச்சினை ஏற்படும். அதனையும் மீறி ஜனாதிபதி செயற்படுவாராயின், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படும்.

அதற்கு எதிராக அவரால் ஒருபோதும் செயற்பட முடியாது. பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு.

அதுவே அரசியல் யாப்பிலும் உள்ளது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் அதிக விருப்புக்கள் கொண்ட ஒருவரை பிரதமராக ஜனாதிபதி நியமிக்காவிட்டால், அதன் விளைவுகளை ஜனாதிபதி எதிர்கொள்ளவேண்டிவரும்’ என்றார்.

முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, ‘பிரதமர் தெரிவு தொடர்பில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் அது மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அது தொடர்பில் எந்தவொரு அதிகாரமும் இல்லை.

நாடாளுமன்றத்தில் அதிக ஆதரவு பெற்றவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என யாப்பில் இருந்தது. அதுவே 19ஆவது திருத்தச் சட்டத்தின் நிறைவேற்றத்துக்கு பின்னரும்; உள்ளது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிக விருப்பங்களைப் பெற்ற ஒருவரே பிரதமராக முடியும் என்று மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது’ என்றார்.

பிரசன்ன ரணதுங்க

இது குறித்து கருத்து தெரிவித்த மேல் மாகாண முதலமைச்சரும் வேட்பாளருமான பிரசன்ன ரணதுங்க, ‘மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறதியாக உள்ளார்.

ஆனால், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில், நாடாளுமன்ற பெரும்பான்மை விருப்பத்தைப் பெறும் ஒருவரே பிரதமராக முடியும் என தெளிவாக உள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பொதுமக்கள் எமக்கு வழங்கும் வாக்குகளின் அடிப்படையில், நாட்டின் எதிர்கால பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நாம் நியமிப்போம்’ என்றார்.

ராஜித சேனாரத்ன

அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன இது குறித்து கூறுகையில், ‘பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதுவே அரசியல் யாப்பிலும் உள்ளது. யாப்பை வாசித்துவிட்டே இது தொடர்பில் பேச வேண்டியவர்கள் பேச வேண்டும்.

தவிர முட்டாள்தனமான கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கக் கூடாது. இது கூடத் தெரியாதவர்கள் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கிறார்கள் என்றால், அக்கட்சிக்கு கடவுள் தான் துணை நிற்க வேண்டும்’ என்றார்.

விஜேதாச ராஜபக்ஷ

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ‘1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்தின் படியும் 19ஆவது திருத்தச் சட்டத்தின் படியும், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.

அதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும், மஹிந்த ராஜபக்ஷவினால் பிரதமராக முடியாது’ என்றார்.

‘பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது என்பதை மஹிந்த தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை வென்றவர் யார் என்பதை ஜனாதிபதி சிந்தித்து அவருக்கு பிரதமர் பதவியை வழங்க முடியும் என்றே அரசியலமைப்பில் உள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதியின் விருப்பத்தின்படியே பிரதமர் நியமிக்கப்படுவார் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபாலவின் எண்ணத்தை அவர் அறிவித்துவிட்டார்’ என சுட்டிக்காட்டினார்.

19ஆவது திருத்தச் சட்டம்

இவர்களது கருத்துக்கள் இவ்வாறிருக்க, பிரதமர் தெரிவு தொடர்பில் அரசியலமைப்பில் எவ்வாறு உள்ளது என நாமும் சற்று தேடிப் பார்த்தோம். ‘சனாதிபதி, அவரது கருத்துப்படி பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவராக ,ருக்கின்றாரோ அந்த உறுப்பினரை பிரதம அமைச்சராக நியமித்தல் வேண்டும்’ என்று அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த உறுப்புரையின் விளக்கத்தை தெளிவாக அறிந்துகொண்டவர்களுக்கு, தலைப்பில் நாம் எழுப்பிய கேள்விக்கான பதில் தெளிவாகவே கிடைத்துவிடும்.

Share.
Leave A Reply

Exit mobile version