அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் 26 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் பயணம் செய்த கார் மரத்தில் மோதி சுமார் 80 மீற்றர் தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்கள் விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்திருந்த இவர்களின் நண்பர்களே, வளமான வாழ்வைத் தேடி, அவுஸ்ரேலியா வந்த தமது நண்பர்களுக்கே இந்தக் கதி ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.
தமது நண்பர்களுக்கு என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக வந்திருப்பதாக, தக்சன் முருகேசு தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் நகாரா பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கூட்டாக குடியிருந்து வந்தவர்களாவர்.
உயிரிழந்த இரு இளைஞர்களும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா வந்திருந்தனர்.
மெல்பேர்னில் வசித்து வந்த இவர்கள், ஒரு ஆண்டுக்கு முன்னரே, டார்வினுக்கு குடிபெயர்ந்தனர்.
கடற்கரை ஒன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிய போது, இவர்கள் பயணித்த டொயோட்டா குரூசர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பாடசாலை அருகேயிருந்த மரம் ஒன்றுடன் மோதியது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 26 வயதுடன் வாகனச் சாரதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் தற்போது டார்வின் ரோயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் இலங்கைத் தமிழராவார்.