காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாச்சாரம் சீரழிந்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போயிருந்த தனது மகளை இளைஞன் ஒருவர் மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தி, அந்த இளைஞனுக்கும், அவருடைய பெற்றோருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில், தனது மகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி, அவரை மீட்டுத் தருமாறு கோரி தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ஒரு வருட காலமாக எதிர் மனுதாரர்கள் தனது மகளை மறைத்து வைத்திருப்பதாகவும், அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை எனவும், தனது மகள் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது கூட தெரியாதுள்ளதாகவும்,
எனவே, அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரச் செய்து பிள்ளையை மீட்டுத் தரவேண்டும் என அந்த மனுவில் அந்தத் தாயார் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர் மனுதாரர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட இளைஞனின் பெற்றோரும், சகோதரர்களும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். சம்பந்தப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
தமது மகனையும் காணவில்லை என்றும், அவரும் எங்கு இருக்கின்றார் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் இளைஞனின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து அடுத்த வழக்குத் தவணையாகிய ஜுலை மாதம் 22 ஆம் திகதி உங்களுடைய மகனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும். அவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராக்கத் தவறினால், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு விசேட விசாரணைக்காக இந்த வழக்கை மாற்றுவேன்.
அவ்வாறு அனுப்பினால், பொலிஸ் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என நீதிபதி இளஞ்செழியன் இளைஞனின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து, 22 ஆம் திகதி அந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் திகதி சம்பந்தப்பட்ட இளைஞன் அந்தப் பெண்ணுடன் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளின் ஊடாக முன்னிலையாகியிருந்தார்.
அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலிக்கொடி ஏறியிருந்தது. இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்த சட்டத்தரணிகள், அந்தப் பெண் 17 வருடங்களும் 2 மாதமும் நிரம்பிய வயதுடையவர் என்றும், அவர் இந்து சமயாசாரப்படி திருமணம் செய்திருப்பதாகவும், அதற்கு சாட்சியாக அவர் தாலி அணிந்திருப்பதாகவும், அத்துடன் அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தனது மகளுடன் தனியாகப் பேசுவதற்கு சில நிமிடங்கள் அனுமதியளிக்க வேண்டும் என ஆட்கொணர்வு மனுதாரராகிய பெண் நீதிபதியிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டார்.
ஆயினும், தாயாருடன் பேசுவதற்கு முடியாது என்று அந்தப் பெண் மறுத்தார். தாயாரின் வேண்டுகோளை ஏற்ற நீதிபதி அந்தப் பெண்ணை எச்சரிக்கை செய்ததையடுத்து, தாயாரும் மகளும் சில நிமிடங்கள் தனிமையில் உரையாடியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகின.
அப்போது, தாயாரை நோக்கி, நீங்கள் கேட்டவாறு பெண் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றார். பெண்ணுக்கு 17 வயது. அவருக்குத் தாலிகட்டி திருமணம் நடைபெற்றிருக்கின்றது.
அவரும் 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த நிலையில் நீதிமன்றத்திடம் என்ன விண்ணப்பம் செய்கின்றீர்கள் என நீதிபதி இளஞ்செழியன் வினவினார்.
அதற்கு அந்தத் தாயார், எனது மகள் எனக்கு வேண்டும். அவரை என்னிடம் பாரப்படுத்துங்கள் என விண்ணப்பம் செய்தார்.
அதனையடுத்து, மண்டபம் நிறைய பார்வையாளர்கள் நிறைந்திருந்த நிலையில், அந்தப் பெண்ணை நீதிமன்றத்தின் நடுவில் நிறுத்திய நீதிபதி, தீர்மானம் எடுக்கின்ற தற்துணிவு அதிகாரம் உங்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அம்மாவிடம் செல்வதாக இருந்தால் அம்மாவுடன் நீங்கள் செல்லலாம். காதலனுடன் செல்வதாக இருந்தால் காதலனிடம் செல்லலாம் என தெரிவித்தார்.
நீதிபதி அவ்வாறு தெரிவித்ததையடுத்து, அங்கு என்ன நடக்கப் போகின்றதோ என்று சட்டத்தரணிகள், பொலிசார் உள்ளிட, நீதிமன்றத்தில் குவிந்திருந்த அனைவரும் ஆவலோடு பார்த்திருந்தனர்.
அப்போது அந்தப் பெண் தனது காதலனை நோக்கி நடந்து சென்றார். அவர் அவ்வாறு சென்றதைக் கண்ட அந்தத் தாயார் துயரம் தாங்க முடியாமல் சத்தமிட்டு அழுதார்.
நீதிமன்றத்தில் இருந்தவர்கள் என்ன செய்வது என்ற தெரியாமல் திகைத்திருந்தனர். நீதிமன்றம் முழுவதும் நிசப்தம் நிலவியது. அந்தத்தாயார் வாய்விட்டு அழுது அரற்றினார்.
அதனைக் கண்ட பொலிசார் அவரை நோக்கி பாய்ந்து சென்றனர். அதனை அவதானித்த நீதிபதி அந்தத் தாயாரின் துயரம் வெளிப்படுவதற்காக, அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் ஒதுங்கியிருங்கள் என சைகை மூலம் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
அப்போது, அந்தத் தாயாரின் அவலக்குரல் நீதிமன்றத்தை சிறிது நேரம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
இதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தமது தீர்ப்பை வாசித்தார்.
சமூகத்தில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அனைவரும் சிறுவர் சிறுமியராவர். ஆகவே, அவர்களுடைய பாதுகாப்பு விடயத்தில் சட்டப்படி, தாய் தந்தையருக்கே முதலிடம் வழங்கப்படுகின்றது.
அதேநேரம் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எவரும் திருமண கட்டளைச் சட்டத்தின்படி. பதிவுத் திருமணம் செய்ய முடியாது.
அவ்வாறு பதிவுத் திருமணம் செய்தால், அந்தத் திருமணம் செல்லுபடியற்றது என குணரட்னம் எதிர் திருமணப் பதிவாளர் நாயகம் வழக்கில் நீதியரசர் ஷிராணி திலகவர்தன தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் 17 வருடம் 2 மாதம் வயதுடையவராக இருக்கின்றார். சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் ஒரு சிறுமி. இவர் பதிவுத் திருமணம் செய்யவில்லை. ஆனால் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக 6 மாத கர்ப்பிணியாகவும் இருக்கின்றார் என குறிப்பிட்ட நீதிபதி அந்தத் தாயாரை நோக்கி, உங்கள் மகள் அணிந்திருக்கின்ற தாலியை அறுக்கும்படி நீதிமன்றத்தைக் கோருகின்றீர்களா? அவர் 6 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.
எனவே பிறக்கப் போகின்ற அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன? சமயாசாரப்படி நடந்துள்ள திருமணத்தைப் பிரித்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு யார் தந்தை? – இந்தக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என கூறினார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு அந்தத் தாயார் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, நீதிபதி, அந்தப் பெண்ணின் விருப்பப்படியே அவருடைய காதலன் – (தாலிகட்டிய கணவன்) கணவனுடன் செல்வதற்கு அனுமதி வழங்கினார். அதனையடுத்து தாயின் அவலமான அழுகை நீதிமன்ற மண்டபத்தை நிறைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் உயர்ந்த கலாச்சார பாரம்பரியங்கள் நிறைந்திருந்தன. அந்த கலாசாரமும், பாரம்பரியமும் சீரழிந்திருப்பதையும், சீரழிந்து செல்வதையும் இந்த வழக்கில் காணக் கூடியதாக உள்ளது.
பெற்ற தாயின் அவலத்தை விளங்காத நிலையில் பிள்ளையும், பிள்ளையின் தற்சமய நிலையை – அவர் கர்ப்பிணியாக இருக்கின்ற நிலையில்கூட, அவரை மன்னிக்க முடியாத நிலையில் தாயார் இருப்பதையும் காண முடிகின்றது.
ஆயினும் இந்த வழக்கில் தாலி கட்டிய கணவனை, அல்லது காதலனை வேண்டாம் என்று சொல்லுகின்ற உரிமை அந்தப் பெண்ணுக்கே உள்ளது. அந்த உரிமையோ அதிகாரமோ தாயாருக்கு இல்லை.
காணாமல் போன பிள்ளையை நீதிமன்றத்தில் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனுவின் விண்ணப்பத்திற்கு அமைவாக எதிர் மனுதாரர்கள்னால் அந்தப் பிள்ளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதனால், இந்த வழக்கை, தொடர்ந்து நடத்துவது பலனில்லை எனக் கூறி நீதிபதி இளஞ்செழியன் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தார்.