தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம், தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளது.

இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெறவுள்ளது. அதேவேளை நிகழ்வுக்கு வடமாகாண அவையின் முதலமைச்சர் திரு.க.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு அழைப்புவிடுத்தும், அவர் அதனை புறக்கணித்துவிட்டார்.

tna_electoin_meeting_001

வட, கிழக்குத் தமிழர்கள் வாக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் – சம்பந்தன் அழைப்பு


தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைவதற்கு, அடுத்தமாதம் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்துத் தமிழ்மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று மாலை திருகோணமலை சிவன் கோவிலடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, இரா.சம்பந்தன், தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் தற்போது ஜனநாயகப் போராட்டம் தொடர்கிறது.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அனைத்து உரிமைகளுடனும் எம்மை நாமே ஆளும் நிலை வரும் வரைக்கும் இந்தப் போராட்டம் தொடரும்.

எனவே, எமது இலட்சியத்தை அடைந்து கொள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ‘வீடு’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தவறாது அளிக்கவேண்டும்.

அத்துடன் தாம் விரும்பும் மூன்று வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுக்குக் கீழ் புள்ளடி இட வேண்டும். இது தமிழர் ஒவ்வொருவருடைய வரலாற்றுக் கடமையாகும்.

தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனித்தாலும் தற்போது தொடரும் ஜனநாயகப் போராட்டத்தில் ஆயுதம் என்ற ரீதியில் எமது ஜனநாயக உரிமையான – எமக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு உரிமையான வாக்குரிமை உள்ளது.

அடுத்த மாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்க வேண்டும்.

அப்போதுதான் எமது இலட்சியத்தை விரைவில் அடையமுடியும். இதன்மூலம், அதிக ஆசனங்களுடன் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும்.

இதனூடாக அனைத்துலக அரங்கில் நாம் பலமிக்க சக்தியாகத் திகழமுடியும். அத்துடன் அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் எமக்கான தீர்வைப் பெறவும் முடியும்.

இன்று அனைத்துலக சமூகம் எமது பக்கம் திரும்பிப் பார்த்துள்ளது. எனவே, கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் தக்கமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், சி.தண்டாயுதபாணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கிண்ணியாவில் இருந்து வந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version