ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், தேசியக்கொடியில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகள் பறக்கவிட்டிருந்த சம்பவமொன்று யட்டிநுவர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றிருந்தது.

நடுவில் சிங்கமும் நான்கு மூலைகளில் அரச இலைகளும் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருந்த மேற்படி கொடியை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தரப்பினர் என்று கூறப்படும் சிலரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்த கெமராக்களும் பறிக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களின் தோற்பட்டையைப் பிடித்து பாதுகாப்பு அரணுக்கு இழுத்துச் சென்றுள்ள மேற்படி பாதுகாப்பு தரப்பினர், பிரசாரக் கூட்ட மேடைக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த விசேட தேசியக் கொடிகளை இறக்கும் வரையில் அவர்களை தடுத்து வைத்திருந்துள்ளனர்.

இதன்போது, ஊடகவியலாளர்களிடம் பேசியுள்ள அந்த பாதுகாப்பு தரப்பினர், ‘மேற்படி கொடிகளை பிரசாரக் கூட்ட ஏற்பாட்டாளர்களே தொங்கவிட்டனர்.

அக்கொடிகளை ஏற்றுவதால் எந்த பிரயோசனமும் இல்லை, அதனால் அவற்றை ஏற்ற வேண்டாம் என்று கூறிய போதிலும் ஏற்பாட்டாளர்கள் அவற்றை ஏற்றிவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த புகைப்படங்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம் என்றும் ஊடகவியலாளர்களை எச்சரித்துள்ள மஹிந்தவின் பாதுகாப்பு தரப்பினர், இவற்றைக் கண்டால் மஹிந்த இதில் பங்கேற்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்காக அங்கு சென்ற பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, ஆணைக்குழுவுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் தேசியக்கொடியென்று மேற்படி கொடியையே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vlcsnap-2015-07-27-00h15m20s136-1-600x338

Share.
Leave A Reply

Exit mobile version