புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை யில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த பயணிகள் பொதியொன்றுக்குள் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கைவிடப்பட்டிருந்த குறித்த கறுப்பு நிறத்தினாலான பெரிய பொதியினை திறந்து பார்த்த புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தின் நடைபாதை வியாபாரி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த இடத்துக்கு விரைந்த புறக்கோட்டை பொலிஸார் இந்த சடலத்தை நேற்று காலை 9.00 மணியளவில் மீட்டனர்.
இதனையடுத்து புறக்கோட்டை பஸ்நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது. மக்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடியதை அவதானிக்க முடிந்தது.
28 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு அந்த பயணப் பொதிக்குள் மர்மமாக உயிரிழந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சடலமானது அரை நிர்வாணமாக இருந்ததாகவும், மேல் பகுதி ரீ சேட் அணிந்திருந்ததால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் கீழ் பகுதியில் நீல நிற உள்ளாடை மட்டுமே இருந்ததாகவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
பெட்டிக்குள் குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கத்தக்க ஆடைகள் பலவும் இருந்ததாகவும் சடலத்திலும் கழுத்திலும், இடது கையிலும் தங்கச் சங்கிலிகள் இருந்ததாகவும் காதில் உள்ள கம்மல்களும் அப்படியே இருந்ததாகவும் கழுத்தில் இருந்த சங்கிலியில் பென்டன் ஒன்றும் காணப்பட்டதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
கறுப்பு நிறமான அந்த பெட்டியானது 15 ஆம் இலக்க கொழும்பு – அனுராதபுரம் தனியார் அரை சொகுசு மற்றும் சாதாரண கட்டணம் அறவிடும் 31 ஆம் இலக்க தரிப்பிடத்திலேயே கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கொழும்பு – அனுராதபுரம் பஸ் வண்டிகளுக்கு மேலதிகமாக கொழும்பிலிருந்து, ஸ்ரீபுர, கஹட்டகஸ்திகிலிய, ஹொரவபொத்தானை, கல்னேவ மற்றும் வேவல ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் பஸ் வண்டிகளும் நிறுத்தப்படுவதற்கான அடையாளங்களும் காணப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றுக் காலை புறக் கோட்டை பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை தொடர்புகொண்டுள்ள புறக் கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தின் நடை பாதை வியாபாரியான செல்லையா வீரப்பன் என்பவர் கைவிடப்பட்ட பெட்டியொன்றுக்குள் சடலம் ஒன்று காணப்படுவதாக தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்தே காலை 9.30 மணியளவில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். எனினும் நேற்று மாலை வரை குறித்த சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் கொழும்பு புதுக்கடை 9 ஆம் இலக்க நீதிவான் திலின கமகேயின் மஜிஸ்திரேட் பரிசோதனையின் பின்னர் சடலமானது பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினூடாக கிடைத்த சில தகவல்கள் வருமாறு
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த இரு வருடங்களாக சாரதியாக கடமையாற்றி வந்த எம்.எம்.சி. மொஹித்தீன் என்பவர் தனது மனைவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊரான அனுரதபுரத்தை நோக்கிச் செல்ல புறக் கோட்டை பஸ் தரிப்பு நிலையத்துக்கு இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் ஒன்றில் வந்துள்ளார்.
அந்த பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ள அவர் தனது பயணப் பொதிகளுடன் போக்கு வரத்து சபை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்துள்ளார்.
இதன் போது அவரது பொதிகளை தூக்கி வருவதில் சிரமங்கள் இருக்கவே சுமார் 48 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் அவருக்கு அதனை சுமந்து செல்ல உதவியுள்ளார்.
குறித்த உதவி செய்த நபர் தானும் தம்புள்ளைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து சுமுகமாகவே உரையாடி 15 ஆம் இலக்க பஸ் தரித்து நிற்கும் இடத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அதிக சுமை காரணமாக பொதியை பிடித்திருந்த கையை எடுத்து மறுகைக்கு மாற்ற மொஹிதீன் முனைந்த போது குறித்த நபர் அப்பொதியுடன் அங்கிருந்து பிறிதொரு பஸ் வண்டிக்குள் ஏறி மறைந்துள்ளார்.
இதனையடுத்து தனது பயணப் பொதியைத் தேடி மொஹிதீன் பஸ் தரிப்பு நிலையம் எங்கும் அலைந்துள்ளார்.
இதன் போது அங்கிருந்த நடைபாதை வியாபாரிகளையும் அவர் வினவியுள்ள நிலையில் அவர்களும் அது தொடர்பில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் 15 ஆம் இலக்க பாதையில் பயணிக்கும் கொழும்பு – அனுராதபுரம் பஸ் வண்டி தரிக்கும் இடத்தில் பிரயாணிகள் வரிசையாக இருக்க அங்கு கைவிடப்பட்ட கறுப்பு நிற பயணப் பொதியொன்று இருந்துள்ளது.
மொஹிதீனின் பயணப் பொதியைத் தேடியோர் அதுவா பொதி என கேட்ட போதும் மொஹிதீன் அது தனது பொதியல்ல என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் அதனை தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்யும் நடைபாதை வியாபரியொருவர் திறந்துள்ளார்.
இதன் போதே துணிகள், ஆடைகளுக்கு மத்தியில் மடித்து போடப்பட்டிருந்த சடலத்தை அவர் கண்டுள்ளார். இதன் பின்னரேயே விடயம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேல் மாகணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த சிறிவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சஞ்ஜீவ பண்டாரவின் ஆலோசனைக்கு அமைவாக புறக் கோட்டை பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் இணைந்து விரிவான விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் மீட்கப்பட்டமை குறித்து அவ்விடத்தில் இருந்த பலரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ள பொலிஸார் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தைலும் அதற்கு அண்மித்த பகுதிகளிலும் உள்ள சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமரக்களையும் சோதனை செய்து வருகின்றனர்.
வீட்டு வேலைக்காக வருகை தந்திருந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இவ்வாறு பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்க்லாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.