இலங்கையின் வரைபடத்தில் வடக்கு,கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைத் திட்டமாகும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐ.ம.சு.மு.வின் குருணா கல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
சமஷ்டிக்கு அப்பால் சென்ற தனிநாடே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். இதனோடு ரணில் எவ்வாறு இணங்கினார் என்பது கேள்விக் குறியாகவுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு விஹார மகாதேவி உள்ளக அரங்கில் 64 சிங்கள பௌத்த அமைப்புக்கள் இணைந்து கையெழுத்திட்ட பொது உடன்பாட்டு மாநாட்டில் நேற்றைய தினம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அமைப்புக்கள் இன்று ஓரணியில் திரண்டு எம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.
இதேவேளை இன்று நாட்டை நேசிக்காத மற் றும் மக்களை நேசிக்காத டொலர்களுக்கு அடிமையானவர்கள் எம்மை தோல்வியடையச் செய்ய கங்கணம் கட்டி செயல்படுகின்றனர்.
எமது நாடு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு எவ்வாறு இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எமது முப்படையினரும் உயிரை அர்ப்பணம் செய்து சுக துக்கங்களை மறந்து நாட்டுக்காக போராடி நாட்டை மீட்டெடுத்தனர். அதேபோன்று நாட்டின் விடுதலைக்காக பொது மக்களும் அர்ப்பணிப்புச் செய்தனர்.
நாடு என்னிடம் கையளிக்கப்பட்டபோது நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி எமது கட்டுபாட்டின் கீழ் இருக்கவில்லை. கடல் எல்லைகளும் எமக்கு சொந்தமாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்த நாட்டை மீட்டெடுத்து சுதந்திரமான நாட்டை மக்களுக்கு கையளித்தேன்.
யுத்தத்தை முடித்து பயங்கரவாதத்தை முற்றாக அழித்தது மட்டுமின்றி நாட்டின் அபிவிருத்திகளை துரிதப்படுத்தினேன். பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தேன். 98 சதவிகிதம் பேருக்கு நாட்டில் மின்சாரம் வழங்கப்பட்டது.
120 சதவிகிதத்தினருக்கு தொலைபேசி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு கொழும்பு என நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது இன, மத, மொழி பிரதேச பேதங்கள் பார்க்கப்படவில்லை. அனைவருக்கும் அபிவிருத்திகளின் பயன் கிடைக்கப்பெற்றன. அனைத்து இன மக்களும் அச்சமின்றி சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் நாடு இன்று பின்னோக்கி செல்கிறது. அபிவிருத்திகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. நாடு தொடர்பில் பயங்கரமான அச்ச நிலைதோன்றியுள்ளது.
எமது நாடு எமது கையை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் குடிகொண்டுள்ளது. ரணிலின் புதிய நாட்டை கட்டிடயெழுப்பும் கொள்கையும் இதற்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. இது தான் உண்மை.
இலங்கையின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணிலின் புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கையாகும்.
வடக்கு கிழக்கு பிரிந்த பின்னர் இலங்கைக்கான புதிய வரைபடம் உருவாகும். இதற்கான உறுதி மொழியையே ரணில் புதிய நாடு கட்டியெழுப்பப்படும் என்பதன் ஊடாக வெளியிட்டுள்ளார் வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி முறைக்கு அப்பால் சென்ற தனிநாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்கின்றனர்.
இதற்காக எந்தவிதமான உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டதோ தெரியாது. அத்தோடு இத் திட்டத்திற்கு ரணில் எவ்வாறு இணங்கினார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நாடு பிரிந்தால் அதனை மீண்டும் இணைப்பது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும். எனவே எமது கொள்கை தெளிவாகவுள்ளது.
ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாடு. மதச் சுதந்திரம், மதப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நாடே எமது கொள்கையாகும் என்றும் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.