எதிர்வரும் ஆகஸ்ட் 17 பாராளுமன்ற தேர்தலில் தான் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சிக்குமோ, வேட்பாளர்களுக்கோ ஆதரவு அளித்து பிரசாரம் செய்வதில்லை என்று வட மாகாண முதல் அமைச்சர், நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார்.
ஒரு விதத்தில் இது ஏற்புடைய முன்னுதாரணமாக இருந்தாலும், பல வகைகளில், பதில்கள் இல்லாத கேள்விகளை மட்டுமே அவரது முடிவு தோற்றுவித்துள்ளது.
நான்கு முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் முதலமைச்சரான தான், எந்த ஒரு உறுப்பு கட்சியையோ, வேட்பாளரையோ சார்ந்து பிரசாரம் செய்வதில்லை என்று முதல்வர் விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார்.
தான் ஒரு மனதாக கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட காலத்திலேயே, தான் முக்கிய உறுப்பு கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியை சார்ந்தவர் போன்ற தோற்றம் எழுப்பப்பட்டதாகவும் அவர் தனது தற்போதைய அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே, தான் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பு கட்சியையும் சாராதவர் என்ற தனது நிலைப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டும் விதமாகவே, தேர்தல் பிரசாரத்தில் இருந்து தான் விலகிநிற்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதே சமயம், தமிழ் மக்கள், தங்களது வாக்களிக்கும் உரிமையை வீணாக்கி விடாமல், போட்டியிடும் வேட்பாளர்களில், சிறந்தவர்கள் என்று கருதுபவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியாயமானது, என்றாலும்…
ஒரு விதத்தில், நீதியரசர் விக்கினேஸ்வரனின் இந்த நிலைப்பாடு நியாயமானதாகவே தோன்றும். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆசனங்களுக்கு அதிகமாகவே வேட்பாளர்களை ஒவ்வொரு அரசியல் கட்சியும் களமிறக்க வேண்டும் என்ற தற்போதைய விகிதாசார முறையின் அடிப்படையில், ஒரே கட்சியில் உள்ள ஒரு சில வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், பிறர் தோல்வி அடைவதும் ஏற்புடையது அல்ல என்ற கருத்து தொனிக்கும் விதமாக முதல்வர் விக்கினேஸ்வரனின் அறிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுவும் குறிப்பாக, கூட்டமைப்பு போன்ற ‘அவியல்’ கட்சியில் தேர்தல் காரணமாக மனத்தாங்கல்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் கூட அவரது கருத்தாக இருக்கலாம். ஆனால், அதுவே, நல்லுதாரணத்தை போன்றே தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடக்கூடாது.
காரணம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் அடிப்படையே, இது போன்ற வேட்பாளர் மற்றும் உறுப்பினர் தேர்வு தான். தற்போதைய முறை இல்லை என்றால், விகிதாசார தேர்தல் முறையே இல்லை என்று கூறிவிடலாம்.
இந்த முறையில் உள்ள குற்றம்-குறைகள், ஓட்டை -உடைசல்கள் சரி செய்யப்படும் வரை, இதற்கு மாறுபட்ட தேர்தல் முறை இல்லை எனலாம். அதிலும் நிச்சயமாக இந்த தேர்தலில், மாறுபட்ட முறை இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நீதியரசர் விக்கினேஸ்வரன் வட மாகாண தேர்தலில் தான் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டமையையும் மனதில் நிறுத்தி பேசியுள்ளார். அப்போது அவர் முதன்மை வேட்பாளரே தவிர, கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் அல்ல.
தேர்தல் முடிவை ஒட்டியே அவர் முதல்வரானார். ஆனால், அந்த தேர்தலிலும், விக்கினேஸ்வரன் தற்போது குறைகளை சுட்டிக் காட்டியுள்ள தேர்தல் முறையே அமுலில் இருந்தது. எனவே, மாகாண சபை தேர்தலுக்கும், தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முறைக்கும் ஐந்து அல்லது எட்டு வித்தியாசங்கள் உள்ளது போல் அவர் பேசி உள்ளது சரியான வாதம் அல்ல.
கடந்த வட மாகாண சபை தேர்தலிலும் சரி, கூட்டமைப்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து போட்டி இட்டு வரும் பாராளுமன்ற மற்றும் பிற மாகாண சபை தேர்தல்களிலும் சரி, தற்போதைய முறையே நிலவி வருகிறது.
ஒரே கட்சி அல்லது கூட்டணி, முடிவில் வெற்றி பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்களை களம் இறக்க வேண்டி உள்ளதும், அதில் சிலர் அல்லது பலர் தோல்வி அடைவதும் தவிர்க்க முடியாத ஒன்றே.
அதற்காக அந்த கட்சிகள் எதுவும் தேர்தலில் போட்டியிடாமல் இல்லை. அந்தந்த கட்சி தலைமைகள் கொள்கை ரீதியாக தங்களது பிரசாரத்தை மேற்கொள்ளும் அதே சமயம், தங்களது அணியை சார்ந்த குறிப்பிட்ட வேட்பாளர்களை பெயர் சொல்லி ஆதரவு கேட்பது இல்லை என்பதே உண்மை.
அந்த விதத்தில், தற்போதும் தேசிய அளவில், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் தங்களது அணிகளுக்கு ஆதரவு கோரும் அதேநேரம், தங்களது அணிகளை சார்ந்த குறிப்பிட்ட கட்சிகளையோ, வேட்பாளர்களையோ தேர்வு செய்யும்படி கேட்பதில்லை.
இதுவே, ரணில் மற்றும் மஹிந்த ஆதரவு, முஸ்லிம் மற்றும் மலையக தமிழர் கட்சிகளுக்கும் பொருந்தும். இதிலிருந்து, முதல்வர் விக்கினேஸ்வரன் எவ்வாறு மாறுபட்ட அரசியல் செய்ய முடியும் என்றோ, அதனை முழுமையாக நியாயப்படுத்த முடியும் என்றோ புரியவில்லை.
சிறிசேனவின் நிலை ஒரு விதத்தில், முதல்வர் விக்கினேஸ்வரனின் நிலை, தேசிய அளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டுடன் ஒத்து நிற்பது என்று கூறலாம். ஆனால், அதிலும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.
அரசியல் தர்மம் ரீதியாக, எதிர்வரும் தேர்தலில் எந்த அணியினரையும் ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அவர் எடுத்துள்ள முடிவு, மிகச் சரியான முன்னுதாரணமே.
ஆனாலும், அரசியல் சட்டரீதியாக இது கட்டாயமானது அல்ல. மாறாக, கடந்த ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட அப்போதைய அதிபர் மஹிந்தவை தற்போதும் பிரதமராக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற சிறிசேனவின் ஆதங்கமே அவரது முடிவின் உள்ளார்ந்த கருத்து. அதுவும் கூட, அரசு முன்னுதாரணங்கள் காரணமாக அல்ல. மாறாக, இதுவும், சிறிசேனவின், ஜனாதிபதி தேர்தல் கால நிர்ப்பந்தங்களின் தொடரும் வெளிப்பாடே.
இதுபோன்ற நிர்ப்பந்தங்களோ, நிலைப்பாடுகளோ எதுவுமே முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால், சிறிசேனவைப் போன்று, அரசு மற்றும் கட்சி ஆகிய இரு தளங்களிலும், தனது அதிகாரம் கேள்விக்குறி ஆக்கப்படுவதற்கு இந்த தேர்தல் வழிவகை செய்து விடுமோ என்ற எண்ணக் கூற்றும் அவருக்கு இல்லை.
தனது பதவிக்கு உரிய அரசு அதிகாரங்கள் இல்லை என்று அவர் அடிக்கடி சுட்டிக்காட்டும் உண்மைகளும் கூட தற்போதைய தேர்தலுக்கு அப்பாற்பட்டவை.
வெளிநாட்டுப் பயணம்
பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தான் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்டதாலேயே தனது நிலைப்பாட்டை தற்போது அறிவிக்க வேண்டி உள்ளது என்றும் நீதியரசர் விக்கினேஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மின்னஞ்சல் போன்ற ஊடகங்கள் பயன்பாட்டில் உள்ள தற்போதைய காலகட்டத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளுக்கு சென்ற அவர், அங்கெல்லாம் இலங்கை அரசியல் பேசாதவர் அல்ல.
அதேசமயம், தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் செவ்வி, உள்நாட்டில், அதிலும் குறிப்பாக தனது தமிழ் மக்களிடையே தேர்தல்கால குழப்பங்களை தோற்றுவித்துவிடக் கூடாது என்று அவர் நல்லவிதமாகவே எண்ணி இருக்கலாம். ஆனால், அவர் நாடு திரும்பியதும் இது போன்ற ஒரு முடிவை அறிவித்ததன் மூலம் மட்டும், தான் சார்ந்த கூட்டமைப்பின் உள்ளோ, தனக்கு பெருவாரி ஆதரவு நல்கிய தமிழ் வாக்காளர்களிடையேயோ குழப்பம் ஏற்படுத்தவில்லை என்று பொருளாகி விடாது என்பதே உண்மை.
ஒரு விதத்தில், விக்கினேஸ்வரனின் தற்போதைய நிலைப்பாடு, கூட்டமைப்பு தலைமையால் வரிசைக் கிரமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை தான் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற பொருள் தொனிக்கிறது.
மற்றொன்று, தான் சார்ந்த கூட்டமைப்பிற்கு அப்பாலும், சில-பல நல்ல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு, தேர்ந்தெடுக்க வேண்டியது தமிழ் வாக்காளர்களின் கடமை. அதற்கு எதிர்மறையாக எந்த கட்சிக்கும் அல்லது வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தான் பிரசாரம் செய்யமாட்டேன் என்பதும் அவரது நிலைப்பாடு என்ற கருத்தும் தோன்றலாம்.
அந்த விதத்தில், கூட்டமைப்பின் எதிரணியாக போட்டியிடும் கஜேந்திர குமார் பொன்னம்பலம் சார்ந்த அணியில் இருந்தோ அல்லது பத்திரிகையாளர் வித்தியாதரன் தலைமையிலான, முன்னாள் விடுதலை புலிகள் இயக்கத்தினர் சார்ந்த ஜனநாயக போராளிகள் குழுவில் இருந்தோ ஒரு சில வேட்பாளர்களாவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விக்கினேஸ்வரன் விரும்புகிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.
அந்த வகையில், அவரது ஆதரவு நிச்சயமாக, டக்ளஸ் தேவானந்தா அல்லது ரணில் மற்றும் மஹிந்த தலைமையிலான கூட்டணிகளுக்கு இல்லை என்பதை வேண்டுமானால் உறுதியாக கூறி விடலாம்.
‘தமிழ் தேசியம்…’
அவ்வப்போது, உள்ளும்- புறமும் போட்டி அரசியல் காரணமாக, தங்களுக்குள் ‘தமிழ் தேசியம்’ பேசுவதில் யார் உயர்ந்தவர் என்று கூட்டமைப்பின் பல்வேறு உறுப்பு கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பிரசாரம் செய்வது உண்டு.
அது, புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் சில சமயம் அமைவது உண்டு. அல்லது, கூட்டமைப்பு அரசியலில், தாங்கள் விரும்புவதை பெறுவதற்காகவும் கூட சில தலைவர்கள் அவ்வாறு செய்வது உண்டு.
இவை எதுவுமே ஏற்புடைய செயல் அல்ல என்றாலும், நிதர்சனமான உண்மை. ஆனால், அடிமட்ட அரசியலில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள என்றுமே விரும்பியிராத நீதியரசர் விக்கினேஸ்வரன் இது போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது அவரது ஆதரவாளர்களையே குழப்பமடையச் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
அதேசமயம், அவரும் கூட தமிழ் தேசியம் குறித்த அரசியலில், கடும்போக்கு நிலைமையை ஆதரிப்பவர் என்று எண்ணமும் உருவாகி வந்துள்ளது.
ஆனால், அந்த நிலைப்பாட்டிற்காக, தீவிரவாதத்தையும் ஆயுத போராட்டங்களையும், விக்கினேஸ்வரன் ஆதரிப்பவர் அல்ல. அந்தவகையில், கூட்டமைப்பின் தற்போதைய தலைமை பொறுப்புகளில் உள்ள பலரும், வழிமுறையில் மட்டுமல்ல, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதிலும், கடும்போக்கை கடைப்பிடிப்பவர்கள் அல்ல.
ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த காலம் துவங்கி பொறுப்பு கூறல் பிரச்சினை உள்ளிட்ட இனப்பிரச்சினை குறித்த அரசியலில் முதல்வர் விக்கினேஸ்வரன் கடும் போக்கையே கடைப்பிடிப்பவர் போல் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.
அதுபோன்றே, பாராளுமன்ற தேர்தல் உறுதியாக நிகழ உள்ளது என்ற காலகட்டத்தில், அவர் புலம் பெயர் தமிழர் மத்தியில் அரசியல் செய்ததும், தென்னிலங்கை என்று மட்டுமல்ல, உள்நாட்டில் உள்ள தமிழர் தலைமைக்கும் முழுமையாக ஏற்புடையதாக இருந்திருக்க முடியாது
‘மீண்டும் பிழை விட்டோம்…’
இந்த பின்னணியில், விக்கினேஸ்வரனின் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறெல்லாம் தென்னிலைங்கையில் திரித்து பிரசாரம் செய்யப்படுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அந்த பிரசாரம் தவறானது, பொய்மையானது என்ற வழக்கமான தமிழர் பல்லவியையே தற்போதும் யாராவது பாடுவார்கள் என்றால், அதன் அரசியல் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பாளிகள் ஆக வேண்டும்.
ஆனால், தற்போது, பழத்தில் ஊசி இறக்குவது போல், ஒரு கடும் போக்கை மெத்தனமாகவே எடுத்து விட்டு, அதன் எதிர்மறை விளைவுகள் தோன்றும் போது, நாங்கள் மீண்டும் பிழை விட்டோம் என்று தமிழர் அரசியல் தலைமை கூறுமேயானால், அது தென்னிலங்கை அரசியலை விட கொச்சைப்படுத்தப்பட்ட விடயமாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.
இதனிடையில், இலங்கை தமிழர் இனத்தின் ஒரே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தலைவரை, ஏன் கூட்டமைப்பு தலைமை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதும் அவர்கள் தங்களுக்குள் எழுப்பிக் கொண்டு, பதில் காண வேண்டிய விடயமும் கூட.
காரணம் எதுவாக இருந்தாலும், இன்றளவும், முதல்வர் விக்கினேஸ்வரன், கூட்டமைப்பு தலைமை பீடத்தில் குறிப்பிட்ட அங்கம் எதுவும் வகிக்கவில்லை என்பதே உண்மை. அதனால், அவருக்கு, கட்சியில் முக்கியத்துவம் மட்டுமல்ல, பொறுப்பு கூறும் கடமையும் கூட இல்லை என்றாகிவிட்டது!———–
என். சத்திய மூர்த்தி