சென்னை: தமிழகத்தில் தற்போது யாருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும் என்றால் அது நிச்சயம் போலீஸாருக்குத்தான் என்று ஈஸியாக பதில் சொல்லி விடலாம்.
அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் மது எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக நேற்று தமிழகம் முழுவதும் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை மது எதிர்ப்புப் போராட்டங்கள் களை கட்டியிருந்தன.
பெண்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்து போலீஸாரை திணறடித்து விட்டனர்.
மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்கள் குறித்த தொகுப்பு:
அரியலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடந்த போராட்டங்களில் ஈடுபட்டதாக 200 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தடியடியைக் கண்டித்து மாநிலக் கல்லூரி மாணவ மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்களும் கல்லூரியில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் கலைந்து சென்றனர்.
சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர்.
சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி 300க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு, ரோகினி தியேட்டர் அருகில் உள்ள மதுக்கடை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை ஆவடி காமராஜர் நகரில் உள்ள மதுக்கடையை முற்றுகையிட முயன்ற இளைஞர் காங்கிரசார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆவடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் மது பாட்டில்களை சாலையில் உடைத்து போராட்டம் நடத்தினர்.
திருநின்றவூர் காந்தி சிலை அருகே மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூரை அடுத்த பாடி காந்தி சிலை அருகில் தமிழர் விடுதலை கழகத்தினர் அதன் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 25 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்க தலைவி செல்வகுமாரி தலைமையில் பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் பரங்கிமலை ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தனர். கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியும் அவர்கள் கேட்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆலந்தூர் மண்டித் தெருவில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சீராளன், இன்பரசன், வக்கீல் ஏழுமலை, மனிதநேய மக்கள் கட்சியினர் ஜாகீர், சலீம் உள்பட 50 பேர் ஊர்வலமாக வந்தனர்.இவர்களை பரங்கிமலை போலீசார் கைது செய்தனர்.
பெருங்குடி எம்.ஜி.ஆர். நகரில் போராட்டம் நடத்திய 25 ம.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ம.தி.மு.க.வினர் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
விருத்தாசலம் அருகே உள்ள மேலப்பாளையூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மக்கள். மதுவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
கடை கதவு மீது கற்களை வீசினர். காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மதிமுக ஒன்றிய செயலாளர் துரைபாலாஜி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் மேனகா கோமகன், தேமுதிக நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை வழி மறித்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் 39 ஆண்கள், ஒரு பெண் உள்பட 40 பேரை கைது செய்தனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மீஞ்சூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10 பேரும் காட்டூரில் 2 பேரும் பொன்னேரியில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமின்போது, மனிதம் அறக்கட்டளை மாநில தலைவர் சலீம் தலைமையில் அதன் நிர்வாக இயக்குனர் ஜலீனா சலீம், செயலாளர் ராம்குமார், பொருளாளர் சுடர்மணி, அனீஷ், வின்ஸ், சிவகுமார், அய்யப்பன், அஸ்வதி, அல்போன்சா உள்ளிட்டோரும் மனு கொடுத்தனர்.
அப்போது ஜலீனா சலீம் தனது கழுத்தில் மது பாட்டில் மாலை போட்டிருந்தார். சேலத்தில் 4 இடங்களில் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 144 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுதொடர்பாக 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரத்தில், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சாலையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதானார்கள்.
கீழ்வேளூர் அருகே ஓர்குடியில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போட்டு விட்டு ஆர்ப்பாட்டம் செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் மது விலக்கு கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்டார்.
மணப்பாறையில் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தேமுதிக கவுன்சிலர் ராஜ்குமார் உள்பட 3 பேர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்த பின்னர் இறங்க வந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு மருத்துவமனை அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து
திமுகவினர் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உளுந்தூர்பேட்டையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று விருத்தாசலம் சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.