இலங்கையின் பொதுத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் செனல் -– 4 தொலைக்காட்சி உள்ளக விசாரணை தகவல் ஒன்றை வெளியிட் டுள்ளது.
கம்பஹா, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கே வாக்களிக்க வேண்டும் என புலம் பெயர் தமிழர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்
இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என அந்த அமைப்பு நேரடியாகக் குறிப்பிடவில்லை.
ஆனால், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழ் மக்களின் தெரிவு அதுவாகத்தானிருக்க வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினை தொடர்பாக கூட்டமைப்பே வெளிநாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கூட்டமைப்பு கூறி வருகின்றது. அத்துடன் உலகத் தமிழர் பேரவையுடனும் கூட்டமைப்பு நல்லுறவைப் பேணி வருகின்றது.
எனவே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும். பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச அழுத்தம் மிகவும் அவசியம் என்றும் உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்ற பகுதிகளில் எவ்வாறு தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்பதில் புலம் பெயர் தமிழர்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். இங்கு இடம்பெறுகின்ற பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்தரங்குகளில் அவர்கள் இவ்விடயத்தையே முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதிகளின் தெரிவு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாமல் இருப்பதற்காக பல தமிழ் சுயேச்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும். ஆனால், அதனை முறியடிப்பதற்காகவே பல தமிழ் சுயேச்சை குழுக்கள் போட்டியிடுகின்றன.
எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
எனவே, தமிழ் மக்கள் அனைவரும் உதிரிகளுக்கு வாக்களிக்காமல் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என புலம் பெயர் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்தால் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மாவட்டங்களிலிருந்து 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகும் சந்தர்ப்பம் ஏற்படும். இதனை பல புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒலி, ஒளி அலைகளில் கூறி வருகின்றனர்.
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஓரணியில் நின்று ஒரு தமிழ்க் கட்சிக்கு வாக்களிப்பதின் மூலம் இலங்கை அரசுக்கு மாத்திரமல்ல வெளிநாடுகளுக்கும் ஒரு செய்தியைக் கூறலாம்.
பொதுத்தேர்தல் குறித்து புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் வழமைக்கு கூடுதல் அக்கறை காட்டி வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயகத்தில் இருந்தும் பல வேட்பாளர்களை தொலைபேசியில் அழைத்து செவ்வி காண்பது தற்போது வாடிக்கையாக இடம்பெற்று வருகின்றது.
ஆனால், ஒருசில பிரபலமான புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் பொதுத் தேர்தல் குறித்து எதுவித கருத்தையும் வெளியிடாமல் இருந்து வருகின்றன. தாயகத்தில் நடக்கும் தேர்தலை அங்குள்ள தமிழர்களே முடிவு செய்ய வேண்டும்.
அதற்காக இங்கு தேர்தல் பரப்புரை செய்வது பொருத்தமற்றது. அங்கு மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுடன் நாம் தொடர்புகளை ஏற்படுத்தி எமது ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அமைதியை கடைப்பிடிக்கும் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் சுருக்கமான கருத்து இது. பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் இதனை ஆதரிக்கின்றனர்.
அவதிக்குள்ளான தாயக மக்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுப்பார்கள்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு அவர்கள் முடிவுகளை மேற்கொள்ள முடியாது. மிகப் பெரிய பாதுகாப்பு அரணை இழந்தவர்கள் அவர்கள். அதனையும் கருத்திற் கொண்டே அங்குள்ள மக்கள் முடிவுகளை மேற்கொள்வார்கள்.
அதே நேரத்தில் வடமாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்காவில் இருந்த போதுதான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல்வர் அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்திருந்த போது அவரை சிலர் சந்தித்ததாக இணையத்தளச் செய்தியொன்று தெரிவிக்கின்றது.
அச்சந்திப்பின் போது முதல்வரை கூட்டமைப்பிற்கு எதிரான களத்தில் இறக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்வர் மிக உறுதியாக இருந்ததினால் அந்த முயற்சி கைகூடவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகுவதற்கு அவர் தயாராக இல்லை என்பதே அந்த உறுதியாகும். அதனை அவர் பொதுக்கூட்டம் ஒன்றின் போது, லண்டனில் தெரிவித்திருந்தார் என்பதை கடந்த வாரங்களில் நாம் தெரித்திருந்தோம்.
செனல்– 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பல்வேறு ஆவணங்களை வெளியிட்டிருந்தது. மீண்டும் அந்த ஆவணங்களை வெளியிட்ட செனல் –4 தொலைக்காட்சி ஒரு கேள்வியொன்றையும் கேட்டிருந்தது.
போர்க்குற்றங்களை விசாரணை செய்த ஐ.நா விசாரணைக்குழு தமது அறிக்கையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை பரிந்துரை செய்துள்ளதா என்பதே அந்தக் கேள்வியாகும்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை விசாரணைக்கு பரிந்துரைப்பது நியாயமாகாது.
மேலும், உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கு வடமாகாண முதலமைச்சர் ஒத்துழைப்பு வழங்கவுள்ளார் என ஐ.நா தகவலொன்று குறிப்பிட்டுள்ளதையும் செனல் –- 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
ஆனால், வடமாகாண முதலமைச்சரிடம் நாம் இது பற்றி கேட்டபோது அவர் அதனை முற்றாக மறுத்தார். தம்முடன் ஐ.நா அதிகாரிகள் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லையென்று அவர் குறிப்பிட்டதாக செனல்– 4 தொலைக்காட்சி தெரிவித்தது.
ஆனால் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் பாதுகாப்பில் உள்ள அறிக்கை விபரம் அது வெளியிடப்படும் வரை வெளியில் வர வாய்ப்பில்லை. அந்த ஆணையகத்தோடு தொடர்புடைய மனித உரிமை அமைப்புக்கள் இதனை உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக்குழு முன் சாட்சியமளித்த சாட்சிகளின் விபரங்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பில் வைக்கப்படும் என உறுதியாக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் அவை வெளிவருவதற்கு சாத்தியமே இல்லை என ஆணையகம் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றது.
இந்நிலையில் விசாரணை அறிக்கையில் சில விபரங்கள் கசிந்துள்ளதாகக் கூறுவது எங்ஙனம் என அந்த அமைப்புக்கள் கேட்கின்றன.
ஆனால் செய்தியை வெளியிட்டுள்ள ஊடகம் செனல்– 4 போர்க்குற்றங்களுக்கு நியாயம் வேண்டும் என அந்த ஊடகம் போராடி வருகின்றது. விசாரணைக்குழுவிடம் அது தமக்கு கிடைத்த சகல ஆதாரங்களையும் முன்வைத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்குழுவின் அறிக்கைக்குறித்து செனல் –- 4 ஊடகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. எனவேதான் அது நமக்கு கிடைத்த செய்தியை சகலருடனும் பகிர்ந்துகொண்டுள்ளது.
ஆனால் அந்த செய்தி உண்மையா என்ற கேள்வியையும் அது எழுப்பியுள்ளது. விசாரணைக்குழு விசாரணையை நீர்த்துப்போக செய்யுமளவிற்கு இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஐ.நா தொழில் நுட்ப உதவிகளை வழங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கு எதிராக தமிழர் குடிசார் சமூகம் கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை அரசு ஐ.நா. வின் மேல் மட்டங்களுடன் உள்ளக விசாரணை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இன்னர்சிட்டி பிரஸ் கருத்தொன்றை வெளியிட்டுள்ளது. இதன் சாத்தியப்பாடு குறித்து அந்த மேல் மட்டம் ஆராய்ந்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த விடயமே செனல் – – 4 தொலைக்காட்சி செய்திக்கு காரணமாக இருக்கலாம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதனை தவிர விசாரணைக்குழுவின் அறிக்கையில் கசிவு ஏற்பட சாத்தியமில்லையென்றும் அவை உறுதியாகக் குறிப்பிடுகின்றன.
ஏற்கனவே போலியான ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட மஹிந்த தரப்பு முயற்சிப்பதாக இலங்கையில் சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. தேர்தல் நடைபெற சில நாட்களுக்கு முன்பே அது வெளியிடப்படலாம் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது குறித்து ஐ.நா. வின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜெனீவா ஐ.நா பணிமனை இது குறித்து விழிப்புடன் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போலியான அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படுமேயானால் அதனை உடனடியாக மறுத்து அறிக்கை விடுவதற்கும் ஜெனீவா தயாராகவே இருக்கின்றது.
சிங்கள வாக்குகளை பெறுவதற்காக மஹிந்த தரப்பு இவ்வாறான போலி அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாக தொடர்ச்சியான தகவல்கள் ஜெனீவா ஐ.நா பணிமனைக்கு வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை அரசாங்கமும் இதில் மிக அக்கறையுடன் இருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செல்வதினின்றும் மஹிந்தவை நான் காப்பாற்றியுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி குறிப்பிட்டு வருவதும் இந்த அக்கறையின் வெளிப்பாடே.
போலியான விசாரணைக்குழு அறிக்கை வெளிவருவதற்கு ஜெனீவா ஐ.நா. பணிமனை இடமளிக்கக் கூடாது என பிரதமர் ரணில் தரப்பில் இரகசியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு இணையத்தள செய்தி குறிப்பிடுகின்றது.
இலங்கையில் பொதுத் தேர்தல் முடிவடைந்ததின் பின்பே விசாரணைக்குழு அறிக்கை வெளியிடப்படும் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
அதிலும் பொதுத்தேர்தல் 17ஆம் திகதி முடிவுற்று தேர்தல் முடிவுகள் 18ஆம் திகதி வெளியிடப்படும். இரண்டு நாட்கள் கழித்து அநேகமாக மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றே ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில் ஐ.நா விசாரணைக்குழு அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐ.நாவிடம் முன்வைக்கப்படவுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல இணைந்து இதற்கான வரைவொன்று தயாரித்துள்ளமை அனைவரும் அறிந்த விடயம். இந்த வினாவில் பத்து லட்சம் பேரின் கையெழுத்துக்களை திரட்டும் வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதத்தின் பின் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால், அதில் இப்போது 13 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஐ.நா. விதிமுறைகளுக்கமைய பத்து லட்சம் பேருக்கு மேல் கையெழுத்திட்டு விடுக்கப்படும் கோரிக்கையொன்றை முக்கிய ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இருப்பினும் செப்.ெடம்பர் மாதம் முதலாம் திகதி வரை மக்களின் கையெழுத்துக்களுக்காக கோரிக்கை மனு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் இருபது லட்சம் கையெழுத்துக்களைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நாவில் மிகவும் பாரிய தாக்கம் ஒன்றை ஏற்படுத்தக்கூடிய கோரிக்கைக்கு மக்கள் ஆதரவும் சேர்ந்துள்ளதினால் ஐ.நா விசாரணைக்குழு அறிக்கையாலும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என மனித உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.