ilakkiyainfo

8 திருமண சடங்குகளின் விளக்கங்கள். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 8

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம்.

எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம்.

இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி’ என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை’ப்பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு.மணமகள் – மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

9. கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?

முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக.

இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும்,

மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக…

நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக…

5-ஆவது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக…

6-ஆவது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு…

7-ஆவது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க… தாலிக்கு அதாவது, `நம் குடும்பம் இனிமேல் ஒன்று.

13உன் அப்பா யாரோ. என் அப்பா யாரோ… ஆனால், இன்று முதல் நாம் ஒன்று’ என சங்கப் பாடல் படித்தோமே அதே பொருளுக்காக… யாகத்தை நெருங்குவதுதான் 7-ஆவது அடி.

இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர்.

இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.

இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.“மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலமும் உண்டே…’’ என்கிறது தொல்காப்பியம்.

கரணம் என்றால் கல்யாணம். அதாவது… மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்… மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால்… தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும்

கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள், தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.

மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது… அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை… பனை ஓலை கயிறை – மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.

மேற்கூறிய… தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. “மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே.’’என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். `பிற்பாடு – இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது ஒன்றாக இருந்த காலம் உண்டு’ என்று தெரிய வரும்.

ஏன் மாறிப் போனது?

முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம். அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்.

இரண்டாவது காரணம்… இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட `களவியல்’ மரபுக்காரர்களாயிற்றே.

அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்… மவுனப் புன்னகையே மந்திரமாக… கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே. அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் `விவாகரத்து’ ஏற்பட்டுவிட்டது.

இத்தகைய காரணங்களால்… சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள்.

இப்படி செய்வதற்கு… அவர்கள் கையில் கசங்காமல் இருந்த `மனு ஸ்மிருதி’ தான் ரொம்ப உதவியாக இருந்தது.

மனுமூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள்… இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.யாருக்கு க்ஷத்திரியர்களுக்கா…? வைஸியர்களுக்கா…? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.

சண்டாளர்களா? யாரவர்கள்? மனு கூற்றுப்படி `சண்டாளர்கள்’ யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை.

என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

(தொடரும்…. )

Exit mobile version