கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை ஜப்பான் நாட்டு தொழிலதிபருக்கு அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே விற்பனை செய்ததாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இயக்கத்துக்காக பொதுமக்களிடம் இருந்து தங்க நகைகளைப் பெற்று தங்கமாக வைத்திருந்ததாக கூறப்படுவது உண்டு.

தற்போது இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில் விடுதலைப் புலிகளை முன்வைத்து தீவிரமான பிரசாரம் நடைபெற்று வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மகிந்த ராஜபக்சே பணம் கொடுத்தே தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற பரபரப்பான குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒருபகுதியை ஜப்பான் நாட்டு தொழிலதிபருக்கு மகிந்த ராஜபக்சே விற்றுவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஊவதென்னே சுமண தேரர் என்பவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது:

புலிகளின் தங்கத்தை ஜப்பான் வர்த்தகருக்கு மகிந்த ராஜபக்சே விற்பனை செய்ததற்கான ஆதாரமும் ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது.

இதை நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் கொடுக்க இருக்கிறேன். இந்த தங்கம் விற்பனையில் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சேவின் அணியைச் சேர்ந்த காமினி செனரத், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கும் தொடர்பிருக்கிறது.

கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இரண்டு பெரிய பெட்டிகளில் புலிகளின் தங்கம் வைக்கப்பட்டிருந்தது.

அவை 16 முறை பகுதி பகுதியாக கப்பலில் ஏற்றப்பட்டன. இந்த தங்க விற்பனை தொடர்பான சட்ட ரீதியான தன்மையை அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு சுமண தேரர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version