பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவாரோ என்ற கலக்கம் ஒரு தரப்பினரிடம் இருக்க, அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் போக்கு ஒன்றையும் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் நடத்தும், சில தரப்புகள், இவ்வாறான ஒரு கருத்தை தமிழ் மக்களிடம் வலுப்படுத்தி வருவதை அண்மைய தேர்தல் பிரசாரங்களில் அறிய முடிகிறது.
ஆட்சியின் மீது பரவலாக ஏற்பட்ட வெறுப்பினால் தான், ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
அவர் தன்னைத் தோற்கடித்தது வடக்கிலுள்ள மக்கள்தான் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி, மிக அண்மையில் கூட, மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும் இதனைத் தெளிவாகவே கூறியிருக்கின்றனர்.
அதாவது ஆட்சிமாற்றத்தில் தமிழ்மக்களே பிரதான பங்கை வகித்தனர் என்பது இத் தரப்பினரின் கருத்து. அது முற்றிலும் உண்மையும் கூட. ஆட்சியில் அனுபவித்த துன்பங்கள் தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தமைக்கு காரணம்.
மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும் சரி, கூறியிருக்காது போனாலும் சரி, தமிழ் மக்கள் அவ்வாறே முடிவெடுத்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் வகையிலான ஒன்றாக அமையாத சூழலிலும்- தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத சூழலிலும்- படைவிலக்கம், மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில் தமிழ் மக்களுக்கு சாதகமான, நம்பிக்கையூட்டும் விடயங்கள் நிகழ்ந்தேறாத சூழலிலும் தான், இப்போது பாராளுமன்றத் தேர்தல் வந்திருக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் ஊடாக எப்படியாவது பிரதமர் பதவியைக் கைப்பற்றி விடுவதற்குக் கங்கணம் கட்டியிருக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ. ஜனாதிபதி தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவை கடுமையாக விமர்சித்த தமிழர் தரப்பிலுள்ள கடும்போக்கு சக்திகள், இப்போது மீண்டும் ஆட்சிக்கு வருவதை விரும்புவதாகத் தெரிகிறது.
மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், ஐ.நா. விசாரணை அறிக்கை கடந்த மார்ச் மாதமே வெளியாகியிருக்கும்.
அந்த அறிக்கையின் மீது சர்வதேச விசாரணை ஒன்று அவருக்கு எதிராகத் தொடங்கப்பட்டிருக்கும்.
அந்த விசாரணையின் மீது அவர் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும் என்ற கருத்துகள் கூறப்படுகின்றன.
மூன்றாவது பதவிக்காலத்துக்குத் தெரிவாகியிருந்தால் ஐ.நா. அறிக்கை திட்டமிட்டவாறு வெளியாகியிருக்கும் என்பது மட்டும் தான் உண்மை. அதற்கு அப்பால், சர்வதேச விசாரணை, போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரா என்பதெல்லாம், நிச்சயமற்ற விடயங்களாகவே இருந்தன.
இப்போதும் கூட அதேநிலை தான் உள்ளது. மஹிந்த ராஜபக் ஷ பிரதமர் பதவியைக் கைப்பற்றி விட்டால், சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம், அவருக்கு எதிராகத் திரும்பி விடும் என்ற கருத்து பரப்பப்படுகிறது.
மீண்டும் அமெரிக்கா, போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை தீவிரப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் காணப்படுகிறது.
ஆனால், அத்தகையதொரு நிலை மீண்டும் ஏற்படுமா? – அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதே கேள்விக்குரிய விடயம்.
ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரு காரணியை மட்டும் வைத்துக் கொண்டு, மேற்குலகம் இலங்கை தொடர்பான தமது கொள்கைகள், தீர்மானங்களை எடுக்கிறது என்பது அறிவிலித்தனமான கற்பனை.
உலகின் மிகப்பெரிய வல்லாதிக்க நாடான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையானது, நீதி, நியாயம், மனித உரிமைகள், தனிநபர்கள் மீதான விருப்பு வெறுப்பு போன்ற விடயங்களை மையப்படுத்திய ஒன்று அல்ல.
அமெரிக்காவின் மூலோபாய நலன்களின் அடிப்படையில் தான், அதன் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை முதலில் விளங்கிக் கொள்வது அவசியம்.
அதில் பிரதானமானது, பாதுகாப்பு நலன். அதையடுத்து வர்த்தக நலன்.
இந்த இரண்டு பிரதான மூலோபாய நலன்களுக்கு அப்பால் தான், மனித உரிமைகள், நீதி, நியாயம் என்பன போன்ற விடயங்களுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது.
அமெரிக்காவின் தீர்மானப்படி தான் பெரும்பாலான மேற்குலக நாடுகள் செயற்படுகின்றன.
எனவே அமெரிக்கா அல்லாத வேறு எந்த நாடுமே, போர்க்குற்ற விவகாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஜெனீவாவுக்கோ, நியூயோர்க்கிற்கோ செல்லப் போவதில்லை.
ஏற்கனவே, 2009ஆம் ஆண்டு போர் முடிந்த கையுடன், போரில் ஏற்பட்ட இழப்புகளைக் கண்டித்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது சுவீடன்.
ஆனால், காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டது போல, சுவீடன் கூட்டிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத்தை, இலங்கை அரசு தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. இதனால், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில், போரை வெற்றி கொண்ட இலங்கை அரசுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை இலங்கை அரசாங்கம் அனுபவித்த இராஜதந்திர வெற்றியின் உச்சக் கட்டம் எனலாம்.
எனவே, அமெரிக்கா அல்லாத வேறொரு மேற்குலக நாடு, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை கையில் எடுக்க முனையாது.
அமெரிக்கா தான் எதையும் செய்தாக வேண்டும்.
இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் ஏற்படுமானால், அமெரிக்கா உடனடியாகவே அவருக்கு எதிராகத் திரும்பி விடும் என்று இலகுவாக கனவு காண முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தனிப்பட்ட பகையோ கொடுக்கல் வாங்கலோ கிடையாது.
போரை முடிவு செய்த போது மஹிந்தவின் பக்கமே நின்ற அமெரிக்கா, அவர் தனது சொல்லைக் கேட்கத் தவறிய போதும் – இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது பாதுகாப்பு, வர்த்தக நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீனாவுடன் கோர்த்த போதும் தான், இலங்கைக்கு எதிராகத் திரும்பியது.
மஹிந்த – சீன கூட்டணி வலுப்பெற்ற பின்னர் தான், அவரை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கும், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கும் அமெரிக்கா நகர்வுகளை மேற்கொண்டது.
இப்போது, அமெரிக்காவுக்குச் சாதகமான ஓர் அரசாங்கம் கொழும்பில் உருவாகியிருக்கிறது என்பது உண்மை.
அது நிலைக்க வேண்டுமென்று அமெரிக்கா எதிர்பார்ப்பதும் உண்மை.
ஆனால், தனது எதிர்பார்ப்புக்கு முரணாக, ஒருவேளை மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகும் நிலை ஏற்பட்டு விட்டால், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா திரும்பி விடும் என்று கூற முடியாது.
மஹிந்த ராஜபக் ஷவுடன், நட்புக் கொள்வதோ, விரோதம் கொள்வதோ மட்டும் தான் அமெரிக்காவின் இலக்கு அல்ல.
இந்தியப் பெருங்கடலில், தனது பாதுகாப்பு, வர்த்தக நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் கடந்த சில மாதங்களில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அவையனைத்தும் மாற்றம் காணாமல் தொடர வேண்டுமாக இருந்தால், மஹிந்த ராஜபக் ஷவுடன் விரோதங்களை வளர்த்துக் கொள்ள முடியாது.
அதைவிட, மஹிந்த ராஜபக் ஷவின் பலம், பலவீனம் என்னவென்பதை அமெரிக்கா நன்றாகவே அறிந்து விட்டது. அதனை வைத்து, இனிமேல் அவரை இலகுவாகக் கையாள முடியும் என்ற நம்பிக்கையும் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும். அதுபோலவே, தனது பலம், பலவீனம் இரண்டையும் மஹிந்த ராஜபக் ஷவும் அறிந்து கொண்டிருக்கிறார்.
ஜனவரி 8 தோல்வி அவருக்கு அந்தப் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட்ட போதே, தனது கடந்தகாலத் தவறுகளை உணர்ந்து பாடம் கற்றுக் கொண்டு வந்திருப்பதாக கூறியிருந்தார். எனவே, அமெரிக்காவுடனோ மேற்குலகுடனோ முரண்படாத ஒரு நிலையையே கடைப்பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே ஒருமுறை, தோல்வியை அனுபவிக்க காரணமான சூழலை அவர் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பமாட்டார்.
மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ பிரதமரானாலும் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையை மீறி, எல்லா விடயங்களிலும் அவரால் தீர்மானத்தை எடுத்து விட முடியாது.
எனவே, சீனா விவகாரத்தில் என்றாலும் சரி, இந்தியா விடயத்தில் என்றாலும் சரி, அமெரிக்காவுடனான உறவுகளிலும் சரி- நிதானமான ஒரு போக்கை கடைப்பிடிக்கும் வாய்ப்பே உள்ளது. கடந்த காலத் தவறுகளை மீண்டும் விடாத ஒரு வெளிவிவகாரக் கொள்கையை மஹிந்த ராஜபக் ஷ கடைப்பிடிப்பார் என்றே பரவலாக நம்பப்படுகிறது.
அதனால் தான், 2009இல் இலங்கைக்கு இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவர்களில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலகவை தமது வெளிவிவகார ஆலோசகராக்கியிருக்கிறார்.
அவர் தான், மஹிந்த ராஜபக் ஷவின் வெளிவிவகாரக் கொள்கையை – தேர்தல் அறிக்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். தயான் ஜயதிலகவின் ஆலோசனைகளை மதியாமல் நடந்து கொண்டதும், மஹிந்த அரசு ஜெனீவாவில் பல தோல்விகளை சந்தித்தமைக்கு ஒரு காரணம். அந்த தவறுகளை திருத்திக் கொண்டு புதியதொரு முகத்தை காட்ட மஹிந்த ராஜபக் ஷ முனைந்தால், அது அமெரிக்காவுக்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அவ்வாறானதொரு நிலையில், மீண்டும் மஹிந்தவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை விவகாரத்தை அமெரிக்கா தீவிரப்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகும். அத்தகையதொரு நிலை ஏற்பட்டால், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அதி காரத்துக்கு கொண்டு வந்து விட்டதற்கான விலையைத் தமிழர்கள் கொடுத்தேயாக வேண் டியிருக்கும்.