அம்மா என்னை எக்ஸ்சாம் எழுத விடமாட்டினமாம். அனுமதி அட்டை வந்தது. ஆனால் தரமாட்டினமாம். நான் உங்களை ஏமாற்ற விரும்பல. நான் உங்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுறன்.  இது தான் திவ்வியாவின் இறுதி வரிகள்.

திவ்வியா என்ற மாணவி ஏன் இந்த முடிவெடுத்தாள்..? நடந்தது என்ன..? என பொலிசார் தேடிய போது சிக்கிய கடிதத்தின் வரிகளே இவை.

வவுனியா, பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் உயர்தரம் கலைப் பிரிவில் கல்வி கற்று வந்த மாணவியே குணசேகரம் திவ்வியா.

ஒரு அண்ணா, ஒரு அக்கா, தம்பி என அழகிய குடும்பத்தில் பிறந்த திவ்வியா சிறு வயதில் இருந்து கல்வியில் ஆர்வத்துடன் செயற்பட்டாள்.

28-1024x768ஆனால் அவளுக்கு இறுதி வரை கணிதம் மட்டுமே எட்டாக்கனியாக இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிய திவ்வியா உயர்தரம் கற்பதற்கான சிறந்த பெறுபேற்றை பெற்ற போதும் கணித பாடத்தில் அவளால் சித்திபெற முடியவில்லை.

அவளுடைய பெறுபேற்றை அடிப்படையாக கொண்டு கணிதத்தை பின்னர் எடுத்து தருமாறு கூறி பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு அனுமதியும் கிடைத்தது.

தனது குடும்பம் வறுமைக்கு மத்தியிலும் என்னை கஸ்ரப்பட்டு படிக்க வைக்கிறது. நான் எப்படியாவது பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்த திவ்வியா அதன் பின் நடந்த சாதாரணதரப் பரீட்சையில் கணித பாட பரீட்சையில் தோற்றிய போதும் அவளால் நல்ல பெறுபேற்றை பெறமுடியவில்லை. இருப்பினும் அவள் உயர்தரம் தொடர்ந்து கற்க அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

கடந்த 4 ஆம் திகதி ஆரமபமாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைக்கு வந்தது.

அனைவருக்கும் அனுமதி அட்டைகளை வழங்கிய விபுலானந்த கல்லூரி அதிபர் திவ்வியாவுக்கு மட்டும் அனுமதி அட்டையை கொடுக்க மறுத்தார்.

கணித பாடத்தில் சித்தி பெறாமையால் அனுமதி அட்டை தரமுடியாது என பதில் அளித்தார். சிறந்த பெறுபேற்றை பெறவேண்டும் என ஆர்வத்துடன் படித்த திவ்வியாவுக்கு பரீட்சை எழுத அனுமதி அட்டை வழங்க மறுத்தமையால் மனவிரக்தி ஏற்பட்டுள்ளது.

பாடசாலையில் பல தடவை தனது அனுமதி அட்டையை கேட்டுள்ளாள். ஆனால் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவள் கற்கும் பாடங்களில் ஒன்றாகிய தமிழ் பாட பரீட்சை கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமையே நடக்க இருந்தது.

அதற்குள் தனது அனுமதி அட்டையை அதிபர் தந்து விடுவார் என நம்பியிருந்தவள் அது கிடைக்காமையால் ஏமாற்றம் அடைந்தாள். இதனால் கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்து புறப்பட்டாள் திவ்வியா.

இருள் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. வழமையாக வேளைக்கு வீட்டுக்கு வந்துவிடும் திவ்வியாவை அன்று மட்டும் நீண்ட நேரமாகியும் காணாததால் தேடத் தொடங்கினர்.

அக்கம் பக்கம், நண்பர்கள் வீடு என எல்லா இடமும் தேடியும் திவ்வியா கிடைக்கவில்லை. இறுதியில் இரவு 7 மணியளவில் திவ்வியாவின் வீடு அமைந்திருந்த வேப்பங்குளம், 7ம் ஒழுங்கையில் வீட்டிற்கு அண்மையில் இருந்த பொதுக் கிணற்றில் திவ்வியா இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாள்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலம் மீட்கப்பட்டு மரணத்திற்கான காரணம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்றது. இதியில் திவ்வியா எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

கணித பாடத்தில் நான் சித்தியடையவில்லை என்பதால் எனக்கு பரீட்சை அனுமதி அட்டை தரமாட்டார்களாம். அம்மா என்னை கஸ்ரப்பட்டு செலவழித்து படிப்பீங்கிறீங்க.

ஆனால் நான் பரீட்சை எழுத முடியாது. நான் ஏமமாற்ற விரும்பல. அம்மா இனி எனக்கு சாப்பாடு தீத்தி விடமாமட்டார்.

எனக்கு தூக்கமே வரவில்லை. உமையவன், கபிலன், மதுஜா நீங்கள் நல்லா படித்து பரீட்சை எழுதுங்கள். நான் உங்கள் எல்லோரையும் மிஸ்பண்ணுறன். இது தான் திவ்வியாவின் இறுதி வரிகள்.

சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநதான் கிசோர் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்தார்.

அதனடிப்பைடையில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ பரிசோதனையின் பின்னர் நீரில் திவ்வியா குதித்தமையால் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தையடைத்து தனது தொலைபேசிகளை அணைத்துவிட்டு பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ளார்.

குறித்த விடயம் வலயக்கல்வித் திணைக்களம் ஊடாக கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அதிபர் தற்காலிகமாக உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். தற்போது வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சக மாணவிகளும் நண்பர்களும் கனத்த மனங்களுடன் கண்ணீர்விட்டபடி பரீட்சைக்கு சென்று வருகின்றார்கள். ஆர்வத்துடன் படித்த திவ்வியா மட்டும் படமாக இருந்து அவர்களை வழி அனுப்பி வைக்கிறாள்.

தோல்விகளுக்கு தற்கொலை தான் முடிவு என்றால் இந்த பூமியில் யாருமே வாழமுடியாது. அனுமதி அட்டையை பெறுவதற்கு திவ்வியா வேறு வழிகளில் பாடசாலையை அணுகியிருக்க முடியும்.

ஆனால் அவசரப்பட்டு எடுத்த இந்த விபரித முடிவு அவள் மேல் பாசத்தை வைத்திருந்த அவள் உறவுகளை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அனுமதி அட்டை விடயத்தில் பாடசாலை நடந்து கொண்ட விதம் சரியானாதா என்ற வினா எல்லோர் மனதிலும் எழுகின்றது.

கல்விப் பொதுசாதர தரப் பரீட்சையில் கணித பாடத்தை சித்தியடையாத பல மாணவர்கள் உயர்தரம் கற்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவர்கள் அடுத்த வருடம் இடம்பெறும் பரீட்சையில் தோற்றி கணித பாட பெறுபேற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது கடந்த கால வரலாறு.

அவ்வாறு செய்யாது விடின் அம் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்படுவர். இது சாதாரணமாக நடைமுறையில் உள்ள விடயம்.

ஆனால் திவ்வியா பரீட்சை எழுதி கணித பாட பெறுபேறு வராத சந்தர்ப்பத்திலும் பாடசாலை தொடர்ந்து கற்க அனுமதி வழங்கியது மனித நேயமாக இருந்தாலும் அது அந்த பாடசாலை அதிபர் விட்ட தவறே.

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அனுப்பிய போது கணித பாடம் இல்லை என்பதால் விண்ணப்பத்தை அனுப்பாது குறித்த மாணவிக்கு ஆலோசனை வழங்கி அடுத்த வருடம் நடைபெறுவிருக்கும் பரீட்சைக்கு தோற்ற வைத்திருக்க முடியும்.

ஆனால் அவ்வாறு செய்யாது விண்ணபித்து அனுமதி அட்டை வந்ததும் அதனை வழங்காது விட்டது அதிபரின் தவறே..? அந்த தவறான முடிவே இன்று திவ்வியாவின் இழப்புக்கு காரணமாகியுள்ளது.

கணிதபாடம் இல்லாது உயர்தரப் பரீட்சை எழுத முடியும். ஆனால் அந்த மாணவி பல்கலைக்கழக அனுமதியை பெறமுடியாது. அதை தெளிவுபடுத்தி பாடசாலை அனுமதி அட்டையை வழங்கியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தா ஆட்சிக் காலத்தில் கணிதத் துறையுடன் சம்மந்தப்படாத துறைகளை கணிதம் இல்லாது கற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திவ்வியா மட்டுமல்ல இன்று பல பாடசாலைகளில் இவ்வாறான நிலை இருக்கிறது. கணித பாடம் இல்லாத பலர் உயர்தரம் கற்க அனுமதிக்கப்படுவதும் அதன் பின்னர் அவர்கள் கணித பாட பரீட்சையில் தேற்றி சித்தியடையாத சந்தர்பத்தில் தொடர்ந்தும் கல்வி கற்க அனுமதிப்பது, பாடசாலையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படுகின்ற போது அல்லது தமக்கு விரும்பிய நேரத்தில் அவர்களை இடைநிறுத்துவது என தொடர்கிறது இப் பிரச்சனை.

குறிப்பாக வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் கடந்த மாதம் கூட 12 மாணவர்கள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டனர். தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர்கள் இடைநிறுத்தப்பட்டமையால் மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர்.

இப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இன்னும் பல திவ்வியாக்களை இந்த மாணவர் சமூகம் இழக்க முடியாது.

எனவே, கணித பாடம் இல்லாது உயர்தரம் கற்கும் மாணவர்கள் தொடர்பாக கல்வி அமைச்சு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். அதன் மூலமே பல மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் எனபதே உண்மை.

Share.
Leave A Reply

Exit mobile version