மெதிரிகிரிய, கொடபொத்த பிரதேசத்தில் இரண்டு விவசாயிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்பட்ட தகராறை அடுத்து விவசாயி ஒருவர் ஏனைய இரண்டு விவசாயிகளை வாளால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் ஹிங்குராங்கொட மெதிரிகிரிய மீகஸ்ஸ கட்டுவெவ பகுதியைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே சாந்தபீரிஸ்(46 வயது) மற்றும் மெதிரிகிரிய ஜகம்புற பகுதியைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே சமன்குமார( 30 வயது) ஆகிய இரு விவசாயிகளுமே வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான மெதிரிகிரிய ஜனசிறிகம பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி கமலன்கே விஜேரத்ன என்பவர் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில் இவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.